sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

வடிவேலன் எழுதிய வரலாறு

/

வடிவேலன் எழுதிய வரலாறு

வடிவேலன் எழுதிய வரலாறு

வடிவேலன் எழுதிய வரலாறு


ADDED : பிப் 25, 2022 10:37 AM

Google News

ADDED : பிப் 25, 2022 10:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'கலியுக வரதன்' என்றும் 'கண் கண்ட தெய்வம்' என்றும் பக்தர்களால் போற்றப்படுபவர் முருகப்பெருமான்.

ஆறுமுகப் பெருமானின் பக்தர்கள் உலகம் முழுவதும் வாழ்கிறார்கள்.

முருகப்பெருமானுக்குரிய ஆடிக்கார்த்திகை, கந்தசஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் விழாக்கள் உலகின் பல நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

''முருகனை உனை ஓதும் தவத்தினர்

மூதுலகில்

அருகாத செல்வம் அடைவார்!

வியாதி அடைந்து நையார்!

ஒருகாலும் துன்பம் எய்தார்!

பரகதி உற்றிடுவார்!

பொருகாலன் நாடு புகார்!

சமராபுரிப் புண்ணியனே!''

என்று திருப்போரூர் சன்னிதிமுறை பக்தர்களுக்கு உத்தரவாதம் அளிக்கின்றது.

'முருகா! உன்னைப் போல் விரைந்து அருள்புரியும் வேறு தெய்வத்தை நான் அறிந்ததில்லை என ஒருமுறைக்கு இருமுறையாக சுப்ரமண்ய புஜங்கம் என்னும் பாடலில் வேலவனின் ஆற்றலை நமக்கு விளங்க வைக்கிறார் ஆதிசங்கரர்.

'கந்தனே உனை மறவேன்' என எப்போதும் முருகனையே சிந்தித்து வாழ்பவர்கள் உடல் நலம், செல்வ வளம், ஆன்ம பலம் பெறுவர்.

'ஆயிரம் பிறை தொழுவர்! சீர் பெறுவர்!

பேர் பெறுவர்

அழியா வரம் பெறுவரே!'' என மயில் விருத்தத்தில் அருணகிரிநாதர் பாடுகிறார்.

முருகனை வழிபடுவதற்கு மூன்று விரதங்கள். அவை வார விரதம், மாத விரதம், ஆண்டு விரதம்.

வெள்ளிக்கிழமையில் வழிபடுவது சுக்கிரவார விரதம், மாதம் தோறும் கார்த்திகை நட்சத்திரத்தன்று வழிபடுவது மாத விரதம், ஆண்டு தோறும் ஐப்பசி வளர்பிறை பிரதமை தொடங்கி ஆறுநாள் இருப்பது ஆண்டு விரதம். இதுவே கந்தசஷ்டி வைபவமாக கோயில்களில் கொண்டாடப்படுகிறது.

முருகனுக்குரிய வெள்ளிக்கிழமையான சுக்கிர வாரத்தில் முருகனின் சுவையான வரலாற்றை படிக்கத் தொடங்கும் வாசகர்கள் அனைவருக்கும் சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு சாத்தியம் என்பது சத்தியம் அல்லவா!

வேலவனின் சரித்திரத்தை சொல்வது கந்தபுராணம்.

புராணங்கள் பதினெட்டில் அளவாலும், மகிமையாலும் முதன்மையானது கந்த புராணமே!

18 புராணங்களையும் எழுதியவர் வேத வியாசர், வடமொழியின் கந்தபுராணத்தை முருகனின் திருவருளால் தமிழில் பாடியவர் கச்சியப்ப சிவாச்சாரியார்.

திருமுருகன் திருக்கதையை கச்சியப்பர் எவ்வாறு பாடினார் என அறிந்து கொள்வோமா.

'முக்தி தரும் நகர் ஏழுள் முக்கியமாம் கச்சி' என அருளாளர்கள் போற்றும் தலம் காஞ்சிபுரம்.

'காஞ்சிபுரமும், கும்பகோணமும் கை எடுக்க விடாது' என பழமொழி வழக்கத்தில் உண்டு.

அதாவது காஞ்சிபுரம் செல்பவர்கள் கோயிலைப் பார்த்தவுடன் கைகளை எடுத்து கும்பிடுவர். அதன் பிறகு அவர்களால் கைகளைப் பிரிக்க முடியாது. அடுத்தடுத்து கோயில்கள் வரிசையாக உள்ளதால் இந்த இரண்டு தலங்களிலும் கூப்பிய கை கும்பிட்டபடி இருக்கும். பிரிக்க முடியாது என்பதே இதன் பொருள்.

கோயில் நகரமாக விளங்கும் காஞ்சிபுரத்தில் மூன்று கோயில்கள் சிறப்பானவை. ஒருபுறம் ஏகாம்பரேஸ்வரர் கோயில். மறுபுறம் அம்பிகைக்குரிய காமாட்சியம்மன் கோயில் இரண்டுக்கும் நடுவில் விளங்குகிறது முருகனின் குமரகோட்டம்.

சிவ - பார்வதி இடையில் முருகன் அமர்ந்திருக்கும் கோலம் 'சோமாஸ்கந்த மூர்த்தி' எனப்படும். இந்த சோமஸ்கந்த மூர்த்தி அமைப்பிலேயே காஞ்சியில் மேற்கண்ட மூன்று கோயில்களும் இருப்பது சிறப்பானதாகும்.

திருமுருகன் கோயிலாக விளங்கும் குமர கோட்டத்தின் குருக்களே கந்த புராணத்தை இயற்றிய கச்சியப்ப சிவாச்சாரியார்.

அழகு, அறிவு, ஆற்றல் அனைத்தும் ஒருசேரப் பெற்ற வடிவேலன் வரலாற்றை அனுபவிப்போம் வாருங்கள்!






      Dinamalar
      Follow us