
தேவலோக நாட்டியத் தாரகையான ரம்பையின் மகள் மகிஷி. இவள் தவத்தில் ஈடுபட்டு, 'சிவன், விஷ்ணுவுக்கு பிறக்கும் மகனால் மட்டும் தனக்கு அழிவு வர வேண்டும்' என வரம் பெற்றாள். ஆணுக்கும், ஆணுக்கும் குழந்தை பிறக்காது என்பது அவளது எண்ணம்.
தேவர்களை வரபலத்தால் மகிஷி, துன்புறுத்த விஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர் மோகினி அவதாரம் எடுத்து சிவன் முன் வந்தார். இருவரது ஒளியிலும் தர்மசாஸ்தா உருவானார்.
பின் சாஸ்தாவால், மகிஷி கொல்லப்பட்டாள். தேவர்களும், ரிஷிகளும் சாஸ்தாவை பூஜித்தனர். இதில் பங்கேற்ற ரிஷி ராஜசேகரர், தனக்கு மகனாக சாஸ்தா பிறக்க வேண்டும் என விரும்பினார்.
கலியுகத்தில் அவரது ஆசை நிறைவேறும் என சாஸ்தா வாக்களித்தார்.
திரேதா யுகத்தில், ராம, லட்சுமணர் சபரிமலையில் தவம் செய்த ஒரு மூதாட்டியைக் காண வந்தனர். (மலையின் பெயரால் அவளுக்கு சபரி அன்னை என்று பெயர் வந்தது). ஒரு கூடாரம் (தற்போதைய ஐயப்பன் கோயில்) அமைத்து, தாங்கள் வணங்கும் விக்ரகங்களை வைத்து பூஜித்தனர். சபரியை சந்தித்த பிறகு, அயோத்தி சென்று விட்டனர். அந்த கூடாரம் அப்படியே இருந்தது. அதில் சாஸ்தாவின் விக்ரகத்தை பரசுராமர் பிரதிஷ்டை செய்தார்.
ரிஷி ராஜசேகரர், கலியுகத்தில் தஞ்சாவூரில் ஒரு அந்தண குடும்பத்தில் விஜயன் என்ற பெயரில் பிறந்தார். சாஸ்தா தனக்கு மகனாக பிறக்க வேண்டுமென வேண்டினார். அப்பிறவியில், அந்த ஆசை நிறைவேறவில்லை. மறுபிறவியில் பந்தள ராஜாவாக பிறந்தார். இவரது ஆட்சிக்காலத்தில் பந்தளத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது. உதயணன் என்ற கொள்ளைக்காரன் கரிமலையில் தங்கியிருந்து பல துன்பங்களைச் செய்தான். அவனிடமிருந்து நாட்டை காக்க சாஸ்தாவை வேண்டினார் மகாராஜா.
பந்தளம் அரண்மனையில் பூஜாரியாக, சிவபெருமான் 'ஜெயந்தன்' என்ற பெயரில் பணிபுரிந்தார். ராஜாவின் தங்கையாக விஷ்ணு பிறந்தார். அவளது பெயர் மோகினி. ஒருமுறை மோகினியை உதயணன் கடத்த, அவளை ஜெயந்தன் மீட்கச் சென்றார்.
சென்றவர் நீண்ட நாளாக வரவில்லை. தன் தங்கை இறந்திருப்பாள் எனக்கருதிய ராஜா திவசம் (திதி) செய்து விட்டார். ஆனால், ஜெயந்தன் மோகினியை மீட்டு வரும் வழியில், ஒரு சன்னியாசியைச் சந்தித்து, “மோகினிக்கு திவசமே நடத்தி விட்டதால், இனி அரண்மனையில் சேர்க்க மாட்டார்கள். எனவே, இருவரும் திருமணம் செய்து கொண்டு காட்டிலேயே இருங்கள்,” என அறிவுரை கூறினார்.
இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு பிறந்த குழந்தை தான் ஐயப்பன். இவர், சாஸ்தாவின் மறு அவதாரம். இந்த சமயத்தில் பந்தளராஜா வேட்டைக்கு வருவதை அறிந்து, ஜெயந்தன், தன் மனைவி மோகினியிடம் குழந்தையை பம்பை நதிக்கரையில் விட்டு வரும்படி கூறினார். ராஜாவின் முற்பிறவி வேண்டுதலை நிறைவேற்ற, இவ்வாறு செய்தார் ஜெயந்தனான சிவன். தன் கழுத்தில் இருந்த மணியை குழந்தையின் கழுத்தில் கட்டினார். குழந்தை அசையும் போது, மணிச்சத்தம் கேட்டு, ராஜா வந்து எடுத்து கொள்ளட்டும் என்பதற்காக இவ்வாறு செய்தார். ராஜாவும் குழந்தையை எடுத்து சென்றார். பின்பு சிவனும், விஷ்ணுவும் மறைந்து விட்டனர்.
குழந்தைக்கு மணிகண்டன் என பெயர் சூட்டி, பல கலைகளையும் கற்பித்தார் பந்தளராஜா. இதற்கிடையில் பந்தள ராஜாவுக்கு, ராணி மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
பந்தளத்திற்கு உட்பட்ட பகுதியில் வாபர் என்பவர், தான் கொள்ளையடித்த பொருட்களை மக்களுக்கு கொடுத்து வந்தார். உதயணன், தான் செய்த கொலைகளை, வாபர் செய்ததாக பழி போட்டான். வாபரை அடக்கச் சென்ற ஐயப்பன், உண்மையை அறிந்து அவரை தனது நண்பராக்கினார்.
இதனிடையே மந்திரியின் துர்போதனையால், தன் மகனை அரசனாக்க விரும்பினாள் ராணி. நோய் வந்ததாக நாடகமாடி, ஐயப்பனை புலிப்பால் கொண்டு வர காட்டுக்கு அனுப்பினாள். இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி உதயணனைக் கொல்ல புறப்பட்டார் ஐயப்பன். உதயணனைக் கொன்று புலிப்பாலுடன் நாடு திரும்பினார்.
பின்னர், பந்தள ராஜாவிடம் சபரிமலையில் உள்ள தர்மசாஸ்தா கோயிலை புனரமைப்பு செய்ய ஐயப்பன் வேண்டினார். அதற்கான ஏற்பாடு செய்ய ஐயப்பனுடன் பந்தளராஜா மலைக்கு சென்றார். அங்கு கோயிலை நெருங்கும் நேரத்தில் சூறாவளி வீச, சாஸ்தாவின் விக்ரகத்தில் ஐயப்பன் ஐக்கியமானார்.
தர்மசாஸ்தாவின் அவதாரம் ஐயப்பன் என்பதை உணர்ந்த பந்தளராஜாவிடம், ஆண்டு தோறும் தை மகரசங்கராந்தி நாளில் தனது முடிசூட்டுக்காக செய்யப்பட்டஆபரணங்களை எடுத்து வரும்படி அருள்பாலித்தார்.