sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கிருஷ்ணஜாலம் - 2 (6)

/

கிருஷ்ணஜாலம் - 2 (6)

கிருஷ்ணஜாலம் - 2 (6)

கிருஷ்ணஜாலம் - 2 (6)


ADDED : நவ 12, 2017 04:15 PM

Google News

ADDED : நவ 12, 2017 04:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீமன் கேட்டதை எண்ணி, கிருஷ்ணன் வருந்தவில்லை. தர்மம் அவர்களை எப்போதும் சோதித்தபடி இருப்பதையே அவன் அப்படி கேள்வியாக கேட்டதாக எண்ணினான்.

உதவ வந்த கிருஷ்ணனிடம், பீமன் தர்க்கம் செய்வதை தர்மன் விரும்பவில்லை என்பதை அவன் முகம் காட்டியது.

'தர்மா வருத்தப்படாதே. பீமன் கேட்பதில் தவறில்லை. அதே சமயம் அதில் உண்மை இல்லை' என்றான் கிருஷ்ணன்.

பீமனிடம் அதிர்ச்சி...

'ஆம் பீமா... எங்கே இருக்கிறோம் என்பது பெரிதில்லை. எப்படி இருக்கிறோம் என்பதே பெரிது. ராஜ்யத்தை ஆண்டாலும் துரியோதனனுக்கு உங்களைப் பற்றிய அச்சமே மிகுதி. வனவாசிகளாக நீங்கள் திரிந்தாலும் அச்சமற்ற மனநிலையே உங்கள் தகுதி. நலமான வாழ்வு என்பது அச்சமற்ற வாழ்வே! அந்த வகையில் உங்கள் வாழ்வு உயர்ந்த வாழ்வு'' என்ற கிருஷ்ணனை, பீமன் மேலும் கேள்வி கேட்பதற்காக வாய் திறக்க முயன்றான்.

அவனை தர்மன் தடுத்ததோடு,' கிருஷ்ணா... நீ துரியோதனனுக்கு உதவியதில் உடன்பாடில்லை. நீ ஆயுதம் ஏந்தப் போவதில்லை என்பது கூட ஏற்கக் கூடியதாக உள்ளது. அதே சமயம் உன் படையை துரியோதனன் கேட்டான் என்று அவனுக்கு வழங்க சம்மதித்தது தான் பீமன் மனதைக் குடைகிறது. எதிரிக்கு வலிமையை உருவாக்கி விட்டு, இங்கே நீ வந்திருப்பதும் அவனுக்கு புரியாத புதிராக உள்ளது'' என்ற தர்மனை கிருஷ்ணன் கூர்ந்து பார்த்தான்.

அப்போது குந்தி,'கிருஷ்ணா.. அப்படி பார்க்காதே! உன் பார்வையின் அர்த்தம் எனக்கு புரிகிறது. ஓராயிரம் மரங்கள் கொண்ட ஒரு காடு பெரிதா; இல்லை உள்ளங்கையில் இருக்கும் ஒரு விதை பெரிதா என்றால் விதை பெரிது என்று உணர முடிந்தவனே ஞானி. உன் படை முழுவதும் காடு என்றால், நீ விதை! உன்னிலிருந்தே அவர்கள் வந்தனர்.அவர்களையே தந்த நீ, எங்கள் பக்கம் வந்ததே நாங்கள் செய்த பெரும்பாக்கியம். பீமனின் கோபத்தை பொருட்படுத்தாதே'' என்றாள்.

''ஆம்... எங்களுக்கு நல்வழி காட்டுங்கள். எப்போதும் தர்மமே இறுதியில் வெல்லும் என்றால் இந்தப் போரிலும் நாங்கள் வெற்றி பெறுவது நிச்சயம். அதற்கான வழியில் தாங்கள் அழைத்துச் செல்வீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்'' என்றாள் திரவுபதி.

அங்கே இருந்ததே இரு பெண்கள் தான்!

ஆனால் அவர்களிடம் காணப்பட்ட திடசித்தம் மற்ற ஆண்களிடம் இல்லாதது விந்தையே.

கிருஷ்ணனுக்கா அது புரியாது?

பீமனுக்கு கிருஷ்ணன் பதில் கூறத் தொடங்கினான்.

'பீமா.. கணக்குகள் இரு விதம்! ஒன்று வெளியே தெரியும். இன்னொன்று மனக்கணக்கு. நீ வெளியே தெரியும் கணக்கை பார்த்து, அதில் வந்த எண்ணிக்கையை சொல்கிறாய், தவறில்லை. உண்மையில் கூட்டிக் கழித்தால் விராடனின் துணையோடு நிற்கும் உங்கள் படை பலத்தை விட, துரியோதனன் படை பலமானது தான். எண்ணிக்கையில்!

ஆனால் எண்ண அளவில் அதை விட பலவீனமான படை வேறு கிடையாது. துரியோதனனோடு நிற்பவர்களில் சிலர் தவிர மற்றவர்கள் இது தேவையற்ற போர் என்பதை உணர்ந்து அரச கட்டளை என்பதற்காக களத்தில் நிற்பவர்களே! ஆனால் உங்கள் நிலை அப்படியல்ல. இங்கே எண்ணிக்கை பெரிதல்ல... எண்ணமே பெரிது!

இப்படி சொல்வதால் அவர்களை நான் துச்சமாக கருதுவதாக எண்ணாதே! பீஷ்மர், விதுரர், துரோணர், அஸ்வத்தாமன், கர்ணனை என்னால் சாதாரணமாக கருத இயலாது. அவர்கள் உண்மையில் வெல்லப்பட முடியாதவர்கள் தான்! ஆனாலும் அவர்களை வெல்ல வழிகள் உண்டு...'' என்று கிருஷ்ணன் கூற அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

கிருஷ்ணன் மேலும்,''களத்தில் நின்று போராடும் போது தான் விதிகளை பின்பற்றியாக வேண்டும். கருத்தில் நின்று போராடும் போது, விதிகள் தேவையில்லை. எனவே நீ கவலை கொள்ளாதே. உன் கவனம் களத்தில் இருக்கட்டும். புறத்தில் நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை நீங்கள் போகப் போக உணர்வீர்கள். ஆயுதம் கொண்டு தான் போராட வேண்டும் என்றில்லை, ஆயத்தம் கொண்டும்; போராடலாம். நான் ஆயுதம் எடுக்கப் போவதில்லை என்றேன். ஆயத்தத்தை அல்ல...!'' என்றான் கிருஷ்ணன்.

ஆயத்தம் என்பது ஒருவித தயார் நிலை. 'விழிப்பு நிலை' என்றும் சொல்லலாம்.

அந்த விழிப்பு நிலையோடு, கிருஷ்ணன் என்ன செய்யப் போகிறான்? என எல்லோரும் உற்றுப் பார்க்க கிருஷ்ணன் திரவுபதியிடம், 'புறப்படு பாஞ்சாலி', என்றான்.

'எங்கே அண்ணா?'' என்றாள் அவள்.

'பிதாமகர் பீஷ்மர் மாளிகைக்கு...''

'அங்கு இப்போது எதற்கண்ணா?''

'உன் சபதம் வெற்றி பெற வேண்டாமா? அவிழ்ந்தே இருக்கும் உன் கூந்தலை நீ அள்ளி முடிய வேண்டாமா?'

'கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அதற்கும் பீஷ்மருக்கும் என்ன சம்பந்தம்?'

'பெரியவர்கள் இருப்பது ஆசிகள் தருவதற்காக. அது தெரிந்தும் நாம் பெறாதிருக்கலாமா?'

'நிச்சயம் வாழ்த்து பெற வேண்டும். ஆனால், இந்த யுத்த வேளையில் பீஷ்மர் எதிரியான நம்மை வாழ்த்துவாரா?'

'அவர் உண்மையில் பெரியவர் என்றால் நிச்சயம் வாழ்த்துவார். அவர் பெரியவர் என்பதில் உனக்கு

சந்தேகமா...''

'இல்லையண்ணா... நீ கூட வரும் போது என்ன தயக்கம்.. வருகிறேன்.''

திரவுபதி தயாரானாள். நகுலனும் சகாதேவனும் சற்று விதிர்த்துப் போனவர்களாய் 'கிருஷ்ணா...' என இழுத்தனர்.

'உம்....என்ன நகுலா? என்ன சகாதேவா?''

'திரவுபதி மட்டும் தானா... பிதாமகருக்கு நாங்களும் பிள்ளைகள் தானே? நாங்கள் ஆசி பெற வேண்டாமா?'

'நிச்சயமாக பெற வேண்டும். அதற்கு நீங்கள் வர வேண்டும் என்றில்லை. உங்கள் ஐந்து பேருக்காக தான் பாஞ்சாலி என்னோடு வருகிறாள்!'

'இது என்ன விந்தை?''

'ஒரு விந்தையும் இல்லை. அவள் வாழ்த்தப் பெற்றால் போதும். நீங்கள் நீடூழி வாழ்வது நிச்சயம்...'

கிருஷ்ணனுடன் திரவுபதி மட்டும் புறப்பட்டாள்!

அங்கு பிதாமகர் மாளிகையில்...

குளத்தில் அன்னங்கள் மிதக்க, வண்ண மயில்கள் புல்வெளியில் திரிய, சக்கரவாகப் பட்சிகள் ஊடாடிப் பறந்து கொண்டிருக்க தாதியர் ஒரு புறமும், காவலர் ஒரு புறமும் என பணியில் இருந்தனர். வரவிருக்கும் போரை எண்ணியவராக மெத்தை மீது அமர்ந்திருந்த பீஷ்மருக்கு, களைப்பால் உறக்கம் வரப் பார்த்தது. அதற்காக மகுடம் களைந்தார். அதைப் பெற ஓடி வந்தான் ஒரு சேவகன்.

'நான் ஓய்வெடுக்க போகிறேன். சப்தமில்லாமல் பார்த்து கொள்'' என்றார். அப்போது இன்னொரு சேவகன் ஓடி வந்து,' வந்தனம்... துவாரகாதிபதி கிருஷ்ணராஜர், மனைவியருடன் தங்களைக் காண வருவதாக தகவல்.' என்றான்.

'எப்போது?'

'இன்னும் சில நாழிகைகளில் என்று தகவல்''

'கிருஷ்ணன் தன் மனைவியருடன் வருகிறானென்றால் அது விசேஷமானது. நல்லது... கிருஷ்ணன் வரவும் கட்டியம் ஒலிக்கட்டும். அதுவரை ஓய்வெடுக்கிறேன்...'' என படுத்தார் பீஷ்மர். பீஷ்மர் மனதிற்குள் கிருஷ்ணன் குறித்த எண்ணங்கள் எழுந்தன.

'அடேய் மாயாவி... நீ என்ன செய்யப் போகிறாய் என தெரியவில்லையே. பாண்டவர் பக்கம் நீ நின்று விட்டபடியால் அவர்களை எப்படியும் காப்பாற்றி விடுவாய். எனக்குத் தான் விதியில்லை' என்று முனங்கியபடி உறங்கினார்.

தொடரும்

இந்திரா சவுந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us