ADDED : நவ 12, 2017 04:14 PM

காஞ்சிபுரம் மடத்திற்கு பரமாச்சாரியாரை தரிசிக்க வந்த பக்தர் ஒருவர் தன் மகனுக்கு பெண் தேடிக் கொண்டிருந்தார். இதை அறிந்த பெரியவர் ''பிள்ளைக்கு கல்யாணம் பண்ணப் போறியா?'' எனக் கேட்டார்.
'ஆமாம்!' என தலையசைத்தார் பக்தர்.
'எப்படி பிள்ளைகளுக்கு கல்யாணம் பண்ணணும் தெரியுமோ?' என்றார் பெரியவர்.
பின், 'வரதட்சணை கேட்காமலே பெண் வீட்டார் கொடுத்தா என்று சமாதானம் சொல்வது கூடாது. விரும்பி கொடுத்தாலும் வாங்க கூடாது. நாம கேட்காம அவாளாக் கொடுக்க மாட்டாளாங்கற எதிர்பார்ப்பை உண்டாக்குது. அப்படி எதிர்பார்ப்பு வந்தா வரதட்சணை எப்படி ஒழியும்? லஞ்சம் வாங்க மாட்டேன், அன்பளிப்புன்னா பரவாயில்லை என்று சொல்வது மாதிரி தான் இதுவும்!
உம் பிள்ளைக்கு பெண் வீட்டார், நீ கட்டாயப்படுத்தாமலே வரதட்சணை கொடுத்தா, நீயும் உன் பெண்ணுக்கு கட்டாயப்படுத்தாமலே வரதட்சணை கொடுத்தாக வேணும் என்ற நிலை வரும்.
பெண் வீட்டார், பிள்ளையின் உறவுக்காரர்களுக்குத் துணிமணி வாங்கறது, போக்குவரத்து ஏற்பாடு பண்றது எல்லாமே தவிர்க்க வேண்டியவை தான்.
பிள்ளையோட மாமாவோ, அத்தையோ அவர்கள் சொந்தச் செலவில கல்யாணத்துக்கு வரக் கூடாதா? தங்கள் வீட்டுப்பிள்ளை கல்யாணத்துக்குக் கூட போக்குவரத்துச் செலவு பண்ண மனம் வரல்லேன்னா அது என்ன உறவு? பெண் வீட்டுக்காரர்களை சிரமப்படுத்தறதுல ஒரு அளவு இல்லைன்னு ஆயிடுத்து.
யாரோ கொடுக்கிற பணத்தில, துணிமணி வாங்கறது அவமானம்ன்னு பிள்ளை நினைக்கணும். சுயமரியாதையோட தன் சொந்தச் செலவில தான் வாங்கணும். நாம செலவு பண்ணி நமக்கு துணி வாங்கிக்க வக்கில்லையா என்ன?
வரதட்சணையை நாமாக கேட்டாலும் சரி, அவர்களாக கொடுத்தாலும் சரி, அது திருட்டு சொத்து. வேண்டாம் என்று மறுக்கிற மனோபாவம் வேண்டும். நீ உன் பிள்ளைக்கு நான் சொல்றபடி பண்ணினாத் தான், கல்யாண பத்திரிகைல வரும், 'பரமாச்சாரியார் அனுக்ரஹத்தோடு' என்ற வார்த்தைக்கு அர்த்தமிருக்கும்.
கல்யாணம்னா.... இது தான் கல்யாணம்...! என்றார் பெரியவர்.