ADDED : மே 19, 2019 08:21 AM

காஞ்சிபுரம் மடத்தில் ஒருமுறை வைகாசி விசாகத்தன்று காஞ்சிப்பெரியவர் அருளுரை வழங்கினார். அப்போது ''முருகனுக்கு சுப்பிரமண்யன், கார்த்திகேயன், கந்தன், வேலன், ஆறுமுகன் என எத்தனையோ பெயர்கள் இருக்கிறதே? இதில் புகழ் மிக்க பெயர் எது தெரியுமா?'' என்றார். அவரது விளக்கத்தை எதிர்பார்த்து பக்தர்கள் காத்திருந்தனர்.
''கந்தன் என்னும் பெயரே முருகனின் திருநாமங்களில் சிறப்பானது. கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் கந்தன். 'ஸ்கந்தன்' என்னும் சம்ஸ்கிருத சொல்லை தமிழில் 'கந்தன்' என சொல்கிறோம். முருகன் இருக்கும் உலகத்தை 'ஸ்கந்த லோகம்' என்றே சொல்கிறோம். அவனுக்குரிய விரதம் 'கந்தசஷ்டி'. அம்பிகை, முருகனோடும் காட்சியளிக்கும் சிவனுக்கு 'சோமாஸ்கந்தமூர்த்தி' என்றே பெயர்.
அவனைப் பற்றிய பாடல்களை முருகர் அனுபூதி, முருகர் அலங்காரம் என்று சொல்வதில்லை. கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் கலிவெண்பா என்றே சொல்கிறோம். சென்னையில் கந்தகோட்டம் என்னும் புகழ் மிக்க முருகன் கோயில் உள்ளது. இதிலிருந்து கந்தன் என்பதன் சிறப்பை நாம் அறியலாம்.
ஒவ்வொரு கடவுளிடமும் ஒவ்வொரு ஆயுதம் இருக்கும். சிவன் கையில் சூலம் இருக்கும். 'சூலம்' என்றால் ஆயுதத்தை குறிக்குமே அன்றி அது சிவனைக் குறிக்காது. அதே போல, வில்,அம்பு என்பதும் ஆயுதமே அன்றி ராமரைக் குறிக்காது. ஏனெனில் அவர்கள் ஆயுதத்தால் எதிரியை கொன்றவர்கள்.
அம்பிகை கொடுத்த ஆயுதமான வேலால் சூரபத்மனை வென்றான் முருகன். உண்மையில் அவன் அசுரனை கொல்லவில்லை. மாமரமாக நின்ற அசுரனை வேலால் இருகூறாகப் பிளந்து, பாதியை மயில் வாகனமாகவும், மீதியைச் சேவல் கொடியாகவும் ஏற்றான். கொடியவனையும் கருணையால் ஆட்கொண்டான் கந்தன். அதனால், ஆயுதத்தின் பெயரால் 'வேலாயுதம்' என்றே முருகனை அழைக்கிறோம். குழந்தைகளுக்கு 'வேலாயுதம், வேலம்மாள்' எனப் பெயரிடும் வழக்கம் இருக்கிறது. ஒருவரிடமுள்ள ஆயுதமே அவருக்குரிய பெயராக இருப்பது சிறப்பு அல்லவா!
தொடர்புக்கு: thiruppurkrishnan@hotmail.com
திருப்பூர் கிருஷ்ணன்