ADDED : ஜூன் 09, 2023 08:18 AM

ஆந்திர மாநிலம் சித்துாருக்கு அருகிலுள்ள கிராமத்தில் மாந்தோப்பு ஒன்றில் முகாமிட்டிருந்தார் காஞ்சி மஹாபெரியவர்.
பக்தரான ஜெயராமன் குடும்பத்தினருடன் அங்கு வந்திருந்தார். ஜெயராமனின் பேரனிடம், 'கல்கண்டு வெச்சுக்கோ' என மஹாபெரியவர் பிரசாதம் கொடுத்தார். குடும்பத்தினர் அனைவரும் பூஜையில் பங்கேற்க சிறுவன் மட்டும் வெளியே ஓடினான். சுற்றுச்சுவர் இல்லாத கிணறு ஒன்று அங்கிருந்தது. கவனக்குறைவால் கிணற்றுக்குள் சிறுவன் விழுந்தான். சிறுவனைக் காணாமல் அவனது தந்தை தேடிய போது நீருக்குள் தத்தளிப்பதைக் கண்டு கத்தினார். அங்கிருந்த பணியாளர்கள் சிலர் சிறுவனை காப்பாற்றி தரையில் கிடத்தினர்.
அதையறிந்த காஞ்சி மஹாபெரியவர், ''குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை! மடக்கி இருக்கும் அவனது கையில் என்ன இருக்குன்னு பாருங்கள்'' என்றார். பிரசாதமாக கொடுத்த கல்கண்டு இருந்தது. நீரில் மூழ்கிய போதும் முழுமையாக அது கரையவில்லை. வரவிருந்த ஆபத்தில் இருந்து காப்பாற்றவே மஹாபெரியவர் பிரசாதம் கொடுத்திருக்கிறார் என்பதை அறிந்த அனைவரும் நெகிழ்ந்தனர். அந்த சிறுவன் வளர்ந்து திருமணமாகி அரசுப்பணியாளராக நலமுடன் வாழ்ந்து வருகிறார்.
இதே போல இன்னொரு சம்பவமும் நடந்தது. ஒருமுறை சித்துாருக்கு அருகிலுள்ள கார்வேட் நகரில் மஹாபெரியவர் தங்கியிருந்தார். அங்கு வந்த பட்டம்மாள் என்னும் பக்தை, 'காசிக்கு யாத்திரை செல்லும் எனக்கு ஆசியளிக்க வேண்டும்' எனக் கேட்டார். ஆசியளித்த மஹாபெரியவர்,
' என் பக்தையான சங்கரி பாட்டியையும் உன்னுடன் அழைத்துச் செல்' என்றதோடு, அதற்கு முன்பு அன்னதானம் செய்யுமாறும் கூறினார். பெண்கள் சிலரது உதவியுடன் பட்டம்மாள் உடனடியாக சமையலில் ஈடுபட்டார்.
உணவு தயாரான பிறகும் சாப்பிட யாரும் வரவில்லையே என பட்டம்மாள் வருந்திய போது பஸ் ஒன்று வந்தது. திருப்பதி செல்லும் பக்தர்கள் மஹாபெரியவரைத் தரிசிக்க வந்தனர்.
அவர்களுக்கு ஆசியளித்த சுவாமிகள், '' இந்த அம்மா உங்களுக்காக சாப்பாடு செய்திருக்கிறார். சாப்பிட்டு செல்லுங்கள்'' என்றார். பக்தர்களும் சாப்பிட்டு மகிழ்ந்தனர். பட்டம்மாவைக் கண்டு புன்னகைத்த மஹாபெரியவர், ''யாத்திரை செல்லும் முன்பாக அன்னதானம் அளிக்கவே இந்த ஏற்பாடு'' என்று சொல்லி வாழ்த்தினார்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
எஸ்.கணேச சர்மா
ganesasarma57@gmail.com