sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

விட்டலனின் விளையாட்டு - 13

/

விட்டலனின் விளையாட்டு - 13

விட்டலனின் விளையாட்டு - 13

விட்டலனின் விளையாட்டு - 13


ADDED : ஜூன் 02, 2023 10:45 AM

Google News

ADDED : ஜூன் 02, 2023 10:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கமான தோண்டோபா

ஸந்த் நாம தேவர் எழுதிய 'வைகுண்டீம் பொஹே தவ சதுர்புஜதிஸே' என தொடங்கும் 'அபங்' பாடலின் பொருள்.

'வைகுண்டத்தில் நான்கு கைகளுடன் காட்சியளிக்கிறாய். அதை உன் சுந்தர வடிவமாக ஏற்க முடியவில்லை. பாற்கடலிலோ நித்திரை செய்கிறாய். எனவே அதையும் உன் சுந்தர வடிவமாக ஏற்க முடியவில்லை. துவாரகையில் உன் விஸ்வரூபம் காரணமாக உன் பாதங்கள் பாதாளத்தில் உள்ளன.

எனவே அதையும் உன் சுந்தர வடிவமாக கருத முடியவில்லை. என் இதயத்தில் பார்த்தால் ஜோதி வடிவமாக அங்கு இருக்கிறாய்.

எனவே சுந்தர வடிவம் என்று அதையும் கூறுவதற்கில்லை. ஆனால் பண்டரிபுரத்தில் சம்பூர்ணமாக மகா சுந்தர வடிவமாக சோபிக்கிறாய் விட்டலா'.

....

நாமதேவர் கதையை விவரித்த பத்மநாபன் 'உங்களுக்குத் தெரியுமா?

விட்டலன் கோயிலின் முக்கிய நுழைவாயில் நாமதேவர் பெயரில்தான் அழைக்கப்படுகிறது' என்றார். பத்மாசனி தயங்கித் தயங்கி தன் மனதில் இருப்பதை வெளிப்படுத்தினாள். 'குடும்பத்தின் தரித்திர நிலையை பற்றி கவலைப்படாமல் நாமதேவர் விட்டலனை மட்டுமே நினைத்துக் கொண்டு இருப்பதாக கூறுகிறீர்கள். இது நியாயமா என்கிற கேள்வி எழுகிறது. பெற்றோர் மனைவியை பாதுகாக்க வேண்டியது தர்மம் இல்லையா?'

பத்மநாபன் புன்னகைத்தார். 'நீ கூறுவது சரிதான். ஆனால் அதையும் தாண்டி மேல் நிலையை அடைந்தவர்கள் நாமதேவர் போன்றவர்கள். விட்டலனை ஒருபுறம் நண்பராகவே கொண்டிருந்தாலும் விட்டலனின் தெய்வீகத்தை உணர்ந்து அவனிடம் சரணாகதி அடைந்தவர்கள் அவர்கள். 'எனக்கு நீ எதை விதித்திருக்கிறாயோ அது நடக்கட்டும் உனக்குத் தெரியாததா?' என நினைத்து கடவுளை வழிபடுதலை வாழ்வின் குறிக்கோளாக கொண்டவர்கள் அவர்கள்'. பத்மாசனியின் முகத்தில் ஒரு தெளிவு வந்தது. 'உண்மைதான் நான் படித்த திருவாசகப் பாடலின் சில பகுதிகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன' என்று அந்த வரிகளைப் பாடத் தொடங்கினாள்.

'வேண்டத் தக்கது அறிவோய் நீ!

வேண்ட முழுதும் தருவோய் நீ!

வேண்டி என்னைப் பணி கொண்டாய்

வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்

அதுவும் உன் தன் விருப்பு அன்றே?'

பத்மநாபன் சிலிர்த்தார். 'மிகச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறாய்' என மனைவியைப் பாராட்டும் விதமாகக் கூறியபடி நாமதேவர் கதையைத் தொடர்ந்தார்.

...

ஒருமுறை மகன் நாமதேவனிடம் ஒரு மூட்டைத் துணியை கொடுத்து 'இதை ஊரில் விற்று வா' என்று அனுப்பினார் தாம்ஸேட்டி. தெருவில் சென்ற நாமதேவர் 'அற்புதமான துணிகளைக் கொண்டு வந்திருக்கிறேன். வாங்கிக் கொள்ளுங்கள் மக்களே' என்றெல்லாம் கூவி விற்கவில்லை. மாறாக அப்போதும் விட்டல பக்தியுடன் பாண்டுரங்கனின் பாடல்களை பாடிக் கொண்டே நடந்தார். மாலை நேரமாகியும் ஒரு துணி கூட விற்கவில்லை.

அந்த சமயத்தில் சாலையின் பக்கத்தில் ஒரு குரல் கேட்டது. 'நாமதேவா, உன் துணிகள் மொத்தத்தையும் வாங்கிக் கொள்கிறேன்' என்றது அந்தக் குரல். திரும்பிப் பார்த்தார் நாமதேவர். அங்கே ஒரு கல் மட்டுமே இருந்தது. கல் பேசுமா என்ற இயல்பான கேள்வி கூட அவரின் மனதில் எழவில்லை! 'சரி உன்னை நம்பி இதைத் தருகிறேன். எட்டு நாட்களுக்குள் இதற்கான தொகையை என்னிடம் தந்து விட வேண்டும். என் பெயரைச் சொல்லி அழைத்ததால் உனக்கு என் வீடு எங்கே இருக்கிறது என்பதும் தெரிந்திருக்க வேண்டுமே, அங்கே வந்து கொடு' என்றபடி துணி மூடையை கல்லின் அருகில் வைத்து விட்டு கிளம்பி விட்டார்.

கையை வீசியபடி வந்த மகனைப் பார்த்து தொடக்கத்தில் அதிர்ச்சி அடைந்தார் தாம்ஸேட்டி. துணிகளை தொலைத்து விட்டானோ? ஆனால் அத்தனை துணிகளையும் தோண்டோபாவிடம் விற்று விட்டதாக மகன் கூறியதும் மகிழ்ந்தார்.

அப்போது தோண்டோபா என்ற பெயர் கொண்டவர்களும் உண்டு. ஆனால் மராத்தி மொழியில் கல் என்பதையும் தோண்டோபா என்பார்கள். அந்தப் பொருளில்தான் நாமதேவர் கூறியிருந்தார்.

எட்டு நாட்களாகியும் பணம் வந்து சேரவில்லை. தந்தை கடிந்து கொள்ள, வெகுவேகமாக அந்தக் கல் இருந்த இடத்துக்கு சென்றார் நாமதேவர். 'என் துணிக்கான பணத்தை நீங்கள் இன்னமும் தரவில்லையே தோண்டோபா! எப்போது தரப் போகிறீர்கள்?' என கேட்டார். விட்டலனையே நினைத்துக் கொண்டிருந்த அவருக்கு எதிரில் இருப்பது உயிரற்ற கல் என்பது புலப்படவே இல்லை. பலமுறை கேட்டும் பதில் கிடைக்காததால் அந்த கல்லைத் துாக்கி வந்து தன் வீட்டில் ஓர் இருட்டறையில் வைத்துப் பூட்டினார்.

தந்தையிடம் 'தோண்டோபா பணம் கொடுக்கவில்லை. எனவே அறையில் வைத்துப் பூட்டி விட்டேன்' என்றார். தாம்ஸேட்டிக்குப் பதற்றம் உண்டானது. 'அறைக்குள் வியாபாரி மயக்கம் அடைந்து விழுந்து இருந்தால்?' வேகமாக அறையைத் திறந்தார். கல்லைப் பார்த்து இருவரும் வியப்படைந்தனர். தங்கக்கல்லாக இருந்தது.

விட்டலனின் கருணை மீண்டும் மீண்டும் நாமதேவருக்கு கிடைத்துக் கொண்டிருந்தது. இந்த அதிசய நிகழ்வுகள் ஊருக்குள் பரவின. விட்டலனின் தனியருள் பெற்ற ஞானேஸ்வரர் காதுகளையும் எட்டியது.

நாமதேவரைக் காண வந்தார் ஞானேஸ்வரர். அவரிடம்,'நான் உங்களுக்காக என்ன செய்ய வேண்டும் ஞானேஸ்வரரே, ஆணை இடுங்கள் செய்கிறேன்' என்றார் நாமதேவர். 'நாம் இருவருமாக வட இந்தியாவுக்குச் சென்று அங்கு விட்டல பக்தி மார்க்கத்தைப் பரப்பலாம் வாருங்கள்' என்றார் ஞானேஸ்வரர்.

'கரும்பு தின்ன கூலியா?' என்றபடி உடனடியாக இதற்கு நாமதேவர் ஒத்துக்கொள்வார் என எண்ணினார் ஞானேஸ்வரர். ஆனால் நாமதேவரின் முகத்தில் வாட்டம் தெரிந்தது. பண்டரிபுரத்தை விட்டு நீங்கினால் விட்டல தரிசனம் என்னாவது? எனவே சாமர்த்தியமாக பதிலளித்தார். 'விட்டலனின் சன்னதிக்குச் சென்று அவனிடமே இது குறித்து கேட்போம். விட்டலன் கூறுவதைக் கேட்டு அதன்படி நடந்து கொள்கிறேன்' என்றார்.

இருவரும் விட்டலனின் சன்னதியை அடைந்தனர். 'விட்டலா, நான் உன்னை விட்டு ஞானேஸ்வரரோடு வட இந்தியா செல்வது உனக்கு சம்மதமா?' என்று கேட்டார் நாமதேவர். அடுத்த கணமே விட்டலனின் குரல் கேட்டது. 'தாராளமாகச் சென்று வா நாமதேவா' நாமதேவர் திகைத்து விட்டார். என்றாலும் ஞானேஸ்வரரோடு அவர் கிளம்பினார். பக்தியைப் பரப்பச் செல்லும் தன் பக்தர்களின் பெருமை பெரிதும் பரவ வேண்டும் என்று விட்டலன் முடிவெடுத்ததை யார்தான் தடுக்க முடியும்?

-தொடரும்

ஜி.எஸ்.எஸ்.,

aruncharanya@gmail.com






      Dinamalar
      Follow us