sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் -21

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் -21

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் -21

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் -21


ADDED : ஜூன் 02, 2023 10:44 AM

Google News

ADDED : ஜூன் 02, 2023 10:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திரஸ்கரணி

தர்மன் முகத்தில் தென்பட்ட சலனத்தை சகோதரர்கள் நால்வரும் உணர்ந்தனர். ''அண்ணா... எதனால் இந்த சலனம்?'' எனக் கேட்டான் பீமன்.

''துரியோதனாதியர்கள் நிலையை எண்ணித்தான்... வேறென்ன?''

''சலனப்பட என்ன இருக்கிறது. சந்தோஷப்பட வேண்டிய தருணமல்லவா?''

''பீமா... பகையை நினைத்துக் கொண்டு இப்படி சொல்கிறாய். ஆனால் நான் நம் வம்சாவளியை எண்ணிப் பார்க்கிறேன்''

''வம்சாவளிக்கும் தங்களின் வருத்தத்திற்கும் என்ன சம்பந்தம் அண்ணா''

''நாமும் சரி, துரியோதனாதியர்களும் சரி சந்திர வம்சத்தைச் சேர்ந்தவர்கள். பங்காளிகள். கந்தர்வர்களோ விண்ணவர்கள். அப்படிப்பட்ட விண்ணவர்கள் பூவுலகில் சந்திர வம்சத்தைச் சார்ந்த சகலரையும் சிறை பிடிப்பது நம் வம்சத்துக்கே இழுக்கல்லவா?''

''அண்ணா... இது என்ன வினோதப் பார்வை? கந்தர்வர்கள் என்ன நம் வம்சத்தவர்கள் மீது போர் தொடுத்து நம் நிலத்தை அபகரிக்கவா செய்தனர்? அவர்களின் இடத்திற்கு வந்து அவர்களை துரியோதனன் எதிர்த்ததால் அல்லவா யுத்தமே நேரிட்டது?''

''இருக்கலாம். இந்த விஷயத்தில் துரியோதனனுக்கு புத்தி சொல்லி அவனுக்கு நாம் துணை நிற்பது தான் தர்மம். எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன் எனக் கருதி கந்தர்வர்களை ஆதரிப்பது குற்றம்''

''துரியோதனன் நம் பேச்சைக் கேட்பவனா? நம்மை அழிப்பதற்காக வனத்திற்கு வந்துள்ளவன். அவனுக்கு துணை நிற்பது தான் குற்றம்''

''நமக்கும் அவனுக்குமான பகையை நாம் நமக்குள் பேசியோ இல்லை யுத்தம் புரிந்தோ தீர்த்துக் கொள்ளலாம். இதில் மூன்றாமவர் நுழைய இடம் கொடுப்பது கூடாது'' தர்மனின் பதிலை பீமனால் ஏற்க முடியவில்லை. உதவி கேட்டு வந்திருந்த சஞ்சயன் மகிழ்ந்தான்.

''பிரபு... தாங்கள் பெயரில் மட்டும் தர்மம் அல்ல. எண்ணம், செயல் என சகலத்திலும் தர்மரே! இந்த உலகில் உங்களைப் போல ஒருவர் சிந்திக்கவே முடியாது.

தங்களின் இந்த எண்ணம் நிச்சயம் துரியோதனனின் பகை உணர்ச்சியை போக்கச் செய்யும். இப்போதே சென்று தங்கள் கருத்தை துரியோதனனிடம் தெரிவிக்கிறேன்'' என்று துாரதிருஷ்டி உடைய சஞ்சயன் புறப்பட்டான். அவனை பீமன் தடுத்தான்.

''சஞ்சயா... நில்! என் சகோதரர் முடிவை நாங்கள் ஏற்க வில்லை. எங்களால் எந்த நிலையிலும் துரியோதனனையோ, அவன் கூட்டத்தையோ மன்னிக்க முடியாது. அவ்வளவு பெரிய மனதும் எங்களுக்கு கிடையாது.

ஒரு புழு கூட தன்னை உண்ணப் பார்க்கும் பறவையை எதிர்த்து சண்டையிட்டு தன்னைக் காத்துக் கொள்ள முனைகிறது. நாங்கள் என்ன புழுவை விடவா கீழானவர்கள்... துரியோதனனை சித்திரசேனன் கைது செய்து அடிமைப் படுத்தியது மிகச்சரி. அப்படியே அவன் கூட்டத்தை கந்தர்வ லோகத்திற்கு கூட்டிச் சென்று அங்கு அவர்களை ஏவலர்களாக ஆக்கி வேலை வாங்கச் சொன்னேன் என்று சித்திரசேனனிடம் சொல்'' என்றான் பீமன்.

அதைக் கேட்ட தர்மனோ, ''பீமா... கோபத்தை காட்டாதே. மனதில் உணர்ச்சி கொந்தளிக்கும் போது புத்தி தெளிவாக சிந்திக்காது. திரும்பச் சொல்கிறேன். நம் தனிப்பட்ட பகையை விட குலப்பெருமை எப்போதும் பெரிது'' என்று தர்மன் ஆவேசமாக பேசிட அதை அடுத்த நொடியே அர்ஜுனன் ஆதரிக்க முன் வந்தான்.

''பீமண்ணா... தர்மர் அண்ணா சொல்வதே சரி. துரியோதனாதியர்களை விடுவிக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம். நம் பகையை நாம் நேருக்கு நேர் வைத்துக் கொள்வோம்'' என்றான். நகுல சகாதேவனும் ஆமோதித்த போதும் பீமன் மாறவில்லை.

''சகோதரர்களே! துரியோதனன் பெரும் தீயசக்தி! நம்மை அரக்கு மாளிகையில் தீயிட்டு கொல்லப் பார்த்தவன். என்னை மடுவில் அழுத்தி கொல்ல முற்பட்டவன். திரவுபதியை சபையில் மான பங்கப்படுத்தியவன். நம்மை இன்று இந்த காட்டில் கிடக்கும்படி செய்தவன். இத்தனைக்குப் பிறகும் நம்மை அழிக்கும் எண்ணத்தோடு இந்த வனத்திற்கு படையோடு வந்திருப்பவன்.

பாம்புக்கு வாயில் மட்டும் விஷம். துரியோதனனுக்கோ அவன் நிழல் கூட விஷ மயமான ஒன்று. இவனை மன்னிப்பது இவனுக்கு உதவுவது என்னால் முடியாத ஒன்று. நான் ஒதுங்கிக் கொள்கிறேன்.

நீங்கள் செய்ய வேண்டியதை செய்து கொள்ளுங்கள்'' என்று பீமன் ஒதுங்கி விட அர்ஜுனன் நகுல சகாதேவனுடன் சித்திர சேனனை காணப் புறப்பட்டான்.

...

தங்களுக்காக சித்திரசேனனுடன் போர் புரிய அர்ஜுனன் வருகிற செய்தி துரியோதனனுக்கும் கர்ணனுக்கும் தெரிய வந்த போது இருவரும் ஆச்சரியப்பட்டனர். அவர்களை விட சித்திரசேனன் மிக ஆச்சரியப்பட்டான்.

இந்திரன் அவர்களுக்கு உதவுவதற்காகவே தங்களை அனுப்பியதை சொல்ல விரும்பி, ''நான் அர்ஜுனனை தனியே சந்தித்துப் பேச வேண்டும். யுத்தமெல்லாம் பிறகே'' என்றான். ஆனால் அர்ஜுனன் பேச விரும்பவில்லை.

சித்திரசேனன் பெரும் வீரன் என்றால் கந்தர்வ வீரமே உலகில் பெரிதென அவன் கருதினால் அவனை என்னோடு போரிடச் சொல்'' என்று கூவினான்.

சித்திரசேனனுக்கும் வேறுவழி தெரியவில்லை. அர்ஜுனனை எதிர்த்து களத்தில் இறங்கி விட்டான்.

'திரஸ்கரணி' என்றொரு வித்தை உண்டு. அதை அறிந்தவர்கள் தங்களை மறைத்துக் கொண்டு சண்டையிட முடியும். இந்த வித்தையை இந்திர லோகத்தில் இருக்கையில் அர்ஜுனனும் கற்றிருந்தான். எனவே அர்ஜுனனும் மறைந்து போர் செய்தான்.

சித்திர சேனனின் அம்புகளை தீரத்தோடு எதிர்கொண்டான். அவன் கதாயுதத்தை சுக்கு நுாறாக பொடித்துப் போட்டான். கந்தர்வர்கள் தங்கள் சக்தியை அணிகலன் ஒன்றில் ஆவாஹனம் செய்திருப்பர். அது மார்பு கவசம், கிரீடம், குண்டலம், கைவளையமாகவோ இருக்கும்.

சித்திரசேனனுக்கு அது அவன் கிரீடமாக இருந்தது. அதை அர்ஜுனன் தன் அம்பால் அடித்து வீழ்த்தவும் சித்திரசேனன் நிலைகுலைந்து போய் அர்ஜுனனை சரண் புகலானான்.

''அர்ஜுனரே! நான் எதிரியல்ல. தங்களுக்கு உதவிட இந்திரனால் அனுப்பப்பட்டவன். இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்'' என்றான். பின் ''தங்கள் வீரத்தை நானும் தெரிந்து கொண்டேன். கந்தர்வர்களை மானுடர்கள் வென்றதாக வரலாறு கிடையாது. அப்படி நடந்து விடவும் கூடாது'' என்றான்.

அர்ஜுனனும் மகிழ்ந்தவனாய், ''துரியோதனாதியர்களை இருந்து பெறப்பட்ட சகலத்தையும் திரும்ப ஒப்படைத்து அவர்கள் நலமாக ஹஸ்தினாபுரம் சென்று சேரும்படி செய். அப்படி செய்தாலே நண்பனாவாய்'' என்றான்.

சித்திரசேனனும் துரியோதனாதியர்கள் சகலரையும் விடுவித்தான். துரியோதனனிடம் நடந்த விஷயம் எல்லாம் தெரிவிக்கப்பட்டது. அருகில் இருந்து அதைக் கேட்ட துரியோதனன் மனைவியான பானுமதி, ''பாண்டவர்களுக்கு எங்கள் நன்றிகளைச் சொல்லுங்கள். குலப்பெருமை என்பது எத்தனை பெரியது என்பதை அவர்கள் எங்களுக்கு உணர்த்தி விட்டார்கள்'' என்றாள். கர்ணன் மனைவி சுபாவும் அதை ஆமோதித்தாள். ஆனால் சகுனி மட்டும் சமாதானமே ஆகவில்லை.

''துரியோதனா... இது கந்தர்வர்களும் பாண்டவர்களும் நம் பொருட்டு ஆடியிருக்கும் ஒரு நாடகமே! அவர்கள் உண்மையில் யுத்தம் புரியவில்லை. நமக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த விடுதலையே கூட மிக தற்காலிகமானது. இது நமக்கு இழிவு'' என்றான்.

-தொடரும்

இந்திரா செளந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us