sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கண்ணன் என்னும் மன்னன்! (27)

/

கண்ணன் என்னும் மன்னன்! (27)

கண்ணன் என்னும் மன்னன்! (27)

கண்ணன் என்னும் மன்னன்! (27)


ADDED : அக் 14, 2014 04:04 PM

Google News

ADDED : அக் 14, 2014 04:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்ணன் அரண்மனை மாடத்தில் பின்புறமுள்ள நந்தவனத்தில் புல்லாங்குழல் இசைத்தபடி இருந்தான். இசைகேட்டு மொட்டாக உள்ள பூக்கள் கூட மலரத் தொடங்கின. அப்போது பாமாவும், ருக்மிணியும் ஒரு சேர அங்கு வந்தனர். அவர்களும் இசை இன்பத்தில் மூழ்கப் பார்த்தனர். நாரதர் கூறி விட்டு சென்றதெல்லாம் நாவுக்கடியில் இருந்தது. ஆனால், அதை எழுப்பி பேச முடியாதபடி முரளி கானம் அவர்களைக் கட்டுப்படுத்தி விட்டது.

கண்ணன் ஒருவழியாக குழலிசையை நிறுத்தி தன் தேவியரை நோக்கினான். அவர்கள் இருவர் விழிகளிலும் ஆனந்தக் கண்ணீர்! அதை அழகாய் மருதாணியில் சிவந்த ஆட்காட்டி விரலால் துடைத்தபடியே நாரதர் கூறியதைச் சொல்லி முடித்தனர்.

''அப்படியானால் நான்காம் பிறை பார்த்ததே இத்தனை அபவாதத்திற்கும் காரணம் என்கிறீர்களா?''

- கண்ணன் தெரியாதவன் போலக் கேட்டான்.

''நாரத மகரிஷி சொன்னதை வைத்துப் பார்த்தால் அப்படித்தானே நினைக்க வேண்டியுள்ளது?''

''சரி... அதற்கு என்ன செய்ய வேண்டும்?''

''விக்ன பூஜை செய்து மகாகணபதி அருளாசி பெற வேண்டும்''

''ஓ.. இதன் பின்னால் கணபதியும் இருக்கிறாரா?''

''ஆம்... சந்திரன் கர்வம் கொள்ளப்போய், அவனை கணபதி சபிக்கப்போய் தான் இத்தனை சிக்கல்கள்!''

''சரி.... அதற்கான ஏற்பாட்டைச் செய்யுங்கள்....''

-கண்ணன் கூற தேவியர் இருவரும் அகல, நாரதர் அங்கே கண்ணன் முன் வணங்கியபடியே பிரசன்னமானார்.

''நாராயண.. நாராயண...''

''என்ன நாரதா... நீ வந்த வேலை முடிந்து விட்டது போல தெரிகிறதே?''

''பிரபோ... தங்கள் திரு உள்ளத்தை எண்ணி நெகிழ்ந்து போகிறேன் நான். நரனாய் அவதாரம் எடுத்து விட்ட காரணத்திற்காக தங்கள் மருமகப்பிள்ளையையே தாங்கள் துதிக்க தயாராகி விட்டது கண்டு எனக்கு வியப்பு மிகுதியாகிறது''

''என்ன நாரதா... மாயைக்கு ஆட்பட்ட மனிதனைப் போலவே பேசுகிறாயே... 'நான் சர்வத்ரன்' என்னும் போது கணபதியும் நானல்லவா? அந்த கணபதிக்கான பூஜையும் எனக்கான பூஜையாக ஆகாதா என்ன?''

''பிரபோ.. சர்வ சத்தியமான வார்த்தைகளை நீங்கள் கூறியவை.... மானுடம் உய்ய அவதாரம் எடுத்த தாங்கள் மானுட எல்லைக்கு உங்களையும் ஆட்படுத்திக் கொண்ட தன்மையை கணபதியும் வியப்பார். சமந்தக மணியை மையமிட்ட அத்தனை சம்பவங்களும் உலகுக்கும் பெரும் பாடம்!'' என்ற நாரதரிடம்,

''பொறுத்திருந்து பார்... வலியே வலிமை என்பதை நீ இனி தான் உணரப் போகிறாய்....'' -கண்ணன் நாரதருக்கு கோடி காட்டி விட்டு பாமா, ருக்மிணியுடன் விக்னவழிபாடு புரிந்தார். கணபதியும் பிரன்னமாகி, ''மாமாவின் திருவடிகளுக்கு என் அனந்தகோடி நமஸ்காரங்கள்'' என்று பணிந்தார்.

''உறவெல்லாம் விண்ணகத்தில்... இது மண்ணகம் விநாயகா.... இனி என் அபவாதம் நீங்கும் தானே?''

- என்று பக்த பாவனையோடு கேட்டான் கண்ணன்.

'கிருஷ்ணபிரபு... அபவாதம் மட்டுமல்ல நீங்கள் என்னை துதித்த பயனாக, நான் உங்களைத்

துதிப்பவர்க்கெல்லாம் என்னையும் சேர்த்து துதித்த பலனை இப்போதே அளித்து விடுகிறேன்'' என்றார்.

''இது போதாது விநாயகா.... இன்னமும் கருணை காட்டு'' - கண்ணன் மேலும் தூண்டினான்.

''என்றால் சந்திரனால் பழி நீங்க அவன் வளர்பிறையாகத் தெரியும் மூன்றாம் நாளன்று தரிசித்தாலும் தோஷம் நீங்கட்டும். அந்த வேளையில் 'கிருஷ்ணா கிருஷ்ணா' என்று தியானித்து உங்கள் அருளுக்கு ஆளாவார்களாக..''

''இன்னமும் கூட நீ கருணை காட்டலாம் என்று எனக்கு தோன்றுகிறது''

''பிரபோ... மனிதன் படும் துன்பங்களை உணர்ந்து விட்டீர் போல இருக்கிறது. உண்மையில் நீரே கருணாமூர்த்தி. இல்லாவிடில் மனிதர்களுக்காக வரம் கேட்பீர்களா?''

''ஆஹா.... நீ புரிந்து கொண்டாய். புரிந்தால் மட்டும் போதாது விநாயகா. உன் பெரும் கருணையை இன்னமும் காட்டு...''

''கிருஷ்ண பிரபு... சமந்தகமணியால் நீங்கள் பட்ட பாட்டினை விருத்தாந்தமாக ஒருவர் கேட்டாலோ, சொன்னாலோ அவர்கள் அபவாதம், பழி, பாவம் ஆகியவற்றில் இருந்து விடுபடக் கடவதாக!

இன்னமும் ஒரு படி மேலே போய் சொல்கிறேன். இந்த சமந்தகமணி வரலாற்றை படிப்பவர்களின் மனத்துயர் நீங்கி தெளிவு உண்டாகும். நானும் நீங்களும் ஒரே சேர சிந்திக்கப்பட்டு வந்திக்கப்படுவோம். இதனால், மனிதர்கள் அகந்தை கொள்ள மாட்டார்கள். அகந்தை இல்லாத மனமே அருளுக்குப் பாத்திரமாகும் என்பதையும் உணர்வார்கள் போதுமா?''

- வள்ளலாய் கணபதி வரங்களைத் தரவும், ''ஆஹா திருப்தி... மகா திருப்தி'' என்று மகிழ்ந்தார்.

பாமா, ருக்மிணி இருவரும் சந்தோஷம் அடைந்தனர்.

கண்ணன் கணபதியை பூஜித்த விஷயம் அக்ரூரின் காதுகளை எட்டியது. அவரும் காசியை விட்டு சமந்தகமணியோடு துவாரகை திரும்பினார்.

சததன்வா தன்னிடம் மணியைத் தந்து விட்டுப் போனதையும், கிருஷ்ணபிரபு ஒரு குற்றமும் செய்யவில்லை என்பதையும் சொல்லி பலராமர் வசம் அதை ஒப்படைத்தார்.

பலராமர் சலனத்தோடு கண்ணனைப் பார்த்தார். அவரின் பார்வையே மன்னிப்பு கோருவது போலிருந்தது.

''கிருஷ்ணா.... இதை உக்ரசேன மகாராஜாவிடம் ஒப்படைத்து விடுவதே சரி'' என்றார்.

உக்ரசேனரோ 'இதை வைத்துக் கொண்டு அச்சத்தோடு வாழ என்னால் ஆகாது' என்று மறுத்துவிட, கண்ணன் அக்ரூரரிடம்,'இது உங்களிடமே இருக்கட்டும். நீங்கள் துவாரகையை விட்டு இனி எங்கும் செல்லாதீர்கள். திருந்திய மனம் கொண்ட தாங்கள் மக்கள் நலனுக்காக இதை பூஜியுங்கள்'' என்று வாழ்த்தினான்.

''கண்ணா... இனி சதாசர்வ காலமும் உன்னையே துதிப்பது ஒன்றே என் கடமை'' என்று நெகிழ்ந்தார் அக்ரூரர்.

எது எப்படியோ சூரியனால் வந்த ஒரு மணி சந்திரன், கணபதி என்று சகலரையும் சிந்திக்கவும், கண்ணனே உயிர்களுக்கெல்லாம் மன்னன் என்பதை உணர்த்துவதற்கும் காரணமாகி விட்டது.

கண்ணன் என்னும் அந்த மன்னனை 'கிருஷ்ண கிருஷ்ணா' என்று அக்ரூரர் கூறியது போல நாமும் தியானிப்போம்.

- முற்றும்

இந்திரா சவுந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us