sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 14

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 14

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 14

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 14


ADDED : ஏப் 25, 2023 12:36 PM

Google News

ADDED : ஏப் 25, 2023 12:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரிஷ்ட நேமி, காலநேமி

காலநேமியை உயிரோடு பார்த்த நிலையில் அரசனும், ராஜகுருவும், திவ்ய புருஷனும் விக்கித்துப் போயினர். காலநேமியும் அவர்களைப் பார்த்து சிரித்தார்.

''என்ன... நான் உயிருடன் இருப்பதை நம்ப முடியவில்லையா?'' என்றும் கேட்டார்.

''ஆம்... என்ன விந்தை? எப்படி சாத்தியம்'' ராஜ குமாரனான திவ்ய புருஷன் கேட்டான்.

''ஒருவேளை இரட்டைப் பிறவிகளாக இருந்து அதில் ஒருவரோ?'' என்றான் அரசன்.

''அப்படி எல்லாம் இல்லை... இறந்தது பிழைத்ததும் நானே'' என்றார் காலநேமி.

''மாண்டவர் மீண்டதேயில்லையே... அது எப்படி சாத்தியம்?''

''இதற்கு பதிலை என் தந்தையே கூறுவார்'' என்ற காலநேமி தந்தை அரிஷ்டநேமியை பார்த்திட, அவர் விளக்கத் தொடங்கினார்.

முன்னதாய், ''முதலில் எல்லோரும் அமருங்கள். நீங்கள் நின்றால் எங்கள் கால்களுக்கு வலிக்கும்'' என விநயமாக கேட்டிட அவர்களும் அமர்ந்தனர்.

அமர்ந்த நீங்கள் சிரமபரிகாரம் செய்வதும் அவசியம்'' என்றிட அரிஷ்டநேமியின் சீடர்கள் தேன், தினை மாவு, மலைப்பழம் அளித்தனர்.

''இதை நாங்கள் கற்பனை கூட செய்யவில்லை. நான் செய்த பாவத்திற்கு தண்டனை காத்திருப்பதாகவே கருதினேன். ஆனால் இங்கோ உபசரிக்கப்படுகிறேன். என் வாழ்வு இப்படி கூட திரும்புமா?'' என வியந்தான் திவ்ய புருஷன்.

''வாழ்வு என்பது நம் வசம் இல்லாத நிலையில் இப்படித்தான் தோன்றும். ஆனால் எங்கள் வரையில் எங்கள் வாழ்க்கை எங்கள் வசம் இருக்கும் ஒன்று. எங்களை மீறி வாழ்வில் எதுவும் நடக்காது'' என்றார் அரிஷ்ட நேமி.

''இப்படி ஒரு பதில் எங்களுக்கு புதியது. அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாதது தானே மனிதவாழ்வு?''

''ஆம்... அது உங்களைப் போல ஆசை, பாசம் என வாழ்பவர்களுக்கு... எங்களைப் போன்ற தர்ம வாழ்வு வாழ்பவருக்கு அல்ல''

''நாங்கள் தர்மத்திற்கு எதிராக, அதர்மச் செயல் ஒன்றும் செய்ததில்லை''

''அப்படியானால் வில்லும் அம்பும் எதற்கு? ஒரு மானை கொன்று புசிக்க விரும்பியது தர்மமா?'' அரிஷ்ட நேமியின் கேள்வி திவ்ய புருஷனை ஸ்தம்பிக்கச் செய்தது.

''பதில் சொல்'' அரிஷ்ட நேமி கேட்டார்.

''வேட்டை அரசனுக்குரிய கடமைகளில் ஒன்று. அது எப்படி தவறாகும்?''

'' தவறு, சரி என்ற கோணம் வேறு. உன் அம்பால் ஒரு உயிர் மாண்டிருந்தால் அதற்கான பாவம் உன் கணக்கில் தானே சேரும்?''

''இப்படி பார்த்தால் நம்மால் வாழவே முடியாதே. நாம் உண்ணும் உணவெல்லாமும் உயிர் தொடர்புள்ளவை தானே? வயலில் அறுவடை எனும் பெயரில் செய்வதும் கொலை என்று தானே ஆகும்?''

''உண்மை... இம்மண்ணில் ஒரு உயிர் தோன்றி விட்டால் தோன்றிய தன்மைக்கேற்ப ஒரு முடிவு உண்டு. ஒரு சிறு தவறும் செய்யாமல் வாழவே முடியாது''

''கருத்தை ஒப்புக்கொள்கிறேன். அப்படியானால் இவர் உயிர் பிழைத்தது எப்படி? அதைக் கூறுங்கள்''

''அதைத்தான் சொல்கிறேன். தவறு செய்யாமல் வாழ முடியாது என்பதில் ஒரு திருத்தம் செய்துகொள். நம்மை அறியாமல் செய்யும் தவறுகளே அவை. அறியாது செய்யும் தவறுக்கு அறிந்து நல்லது செய்து விடுவதே பரிகாரம். அந்த வகையில் எங்கள் தவ வாழ்வில் நாங்கள் தெரிந்து ஒரு சிறு தவறும் செய்வதில்லை. தெரியாமல் செய்யக் கூடும். அதற்கு பரிகாரமாக நாங்கள் ஒரு கட்டுப்பாடுள்ள கோப தாபம் இல்லாத, ஆசை, காமம் இல்லாத தர்ம வாழ்வை வாழ்கிறோம். அதனால் நாங்கள் அறியாமல் செய்யும் பாவம் தீயில் துாசாக எரிந்து விடும்.

நாங்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம் என விளக்குகிறேன். கேள்! ஆசாரத்துடன் அதிகாலை தொடங்கி நித்ய கடமைகளை செய்வது வரை ஒன்றில் கூட அசிரத்தையாக இருந்ததில்லை. புலன்களை அடக்கி தியானிக்கிறோம். பிரம்மத்தை போற்றுகிறோம். வேள்வி செய்து தேவர்களுக்கு ஆகுதி அளிக்கிறோம். அதிதிகளுக்கு உணவளித்த பின் உண்கிறோம். ஈ, எறும்பு முதல் பிரம்மரிஷிகள் வரை எல்லாவற்றையும் சமமாக பாவிக்கிறோம்.

கிரஹஸ்தனாகும் வரை துாய பிரம்மச்சரியம், பின் கிரஹஸ்தாஸ்ரமத்தை அதற்குரிய கட்டுப்பாடுகளுடன் பின்பற்றுகிறோம். கோபதாபத்துக்கு இடம் தருவதில்லை. மஹரிஷிகளுக்கு தொண்டு செய்து ஆசி பெறுகிறோம். ஒன்றை எதிர்பார்த்து எதையும் செய்ததில்லை. பிறரால் வருத்தம் நேர்ந்தாலும் முன்கர்மவினை எனக் கருதி ஜீரணிக்கிறோம். சுருக்கமாக சொன்னால் எங்களுக்கான கால புத்தகத்தில் சித்ரகுப்தன் பாவம் என்றோ, புண்ணியம் என்றோ எழுதிட இடம் தருவதில்லை''

அரிஷ்டநேமி விளக்கத்தை கூறி சற்று இடைவெளி விட்டார். அவர் அளித்த விளக்கம் அதைக் கேட்ட மூவர் மனங்களிலும் பிரமிப்பை ஏற்படுத்தியது. அதேவேளை கேள்விகளும் எழும்பியது. அதை ராஜகுரு கேட்கவும் செய்தார்.

''மகரிஷி! ஒரு மகத்தான வாழ்வை தாங்கள் வாழ்வதை புரிந்து கொள்கிறேன். இப்படி பல மகரிஷிகள் வாழ்ந்துள்ளனர். ஆனால் வாழ்பவர்களுக்கு மரணமில்லை என நான் கேள்விப்பட்டதில்லையே?''

''அதற்கான வாய்ப்பு இப்போது தான் கிடைத்துள்ளது. இதோ இப்போது என் மூலம் தெரிந்து கொண்டு விட்டாயே?''

''அப்படியானால் மரணமே கிடையாதா! நீங்கள் இறவாப் பெருவாழ்வு வாழ்பவர்களா?''

''அப்படியல்ல. எங்களுக்கும் மரணமுண்டு. அதை நாங்கள் எங்கள் வசமே வைத்துள்ளோம். மிருத்யுவான எமன் எங்கள் அனுமதியின்றி உயிரை எடுக்க இயலாது. கர்மவினைப் பாடுகளால் உயிர் பிரிய நேர்ந்தாலும் அது பிரிந்த வேகத்தில் திரும்பி விடும். அப்படித்தான் என் புதல்வன் காலநேமி வரையிலும் நிகழ்ந்தது!''

''இத்தனை சீரிய தர்மவாழ்வு வாழும் உங்கள் மகனுக்கு எப்படி இப்படி ஒரு விபத்து மரணம் மட்டும் நேரிட்டது?''

''அதற்கு காரணம் முன் கருமவினை!''

''வினைகள் விடாது என்பதை அறிவேன். அது எடுத்த பிறவியில் காரியமாற்றாமல் அது அடுத்த பிறப்பிலுமா தொடரும்?''

''மிக நல்ல கேள்வி. ஒரு தீவினை அதன் தன்மைக்கேற்ப காரியமாற்றும். ஒரு கீரையின் விதை விதைக்கப்பட மறுநாளே முளைத்து விடும். ஆனால் ஆலவிதை எழும்பி நிற்கவே பல மாதமாகும். கீரைக்கு வாழ்நாளும் குறைவு. ஆலமோ ஆயிரமாயிரம் ஆண்டுகள் கூட தழைத்துக் கிடக்கும். விதையைப் பொறுத்ததே விருட்சம். வினையைப் பொறுத்ததே அதன் செயல்பாடு''

''தீவினைக்கு இப்படி ஒரு தன்மை இருப்பது போல நல்வினைக்கும் உண்டு தானே?''

''அதிலென்ன சந்தேகம்?''

''அப்படியானால் அதன் பயனையும் தாங்கள் அனுபவித்து ஒரு மகிழ்வான வாழ்வை வாழ வேண்டும் தானே?''

''நிச்சயமாக...''

''இப்படி பற்றற்ற தர்ம வாழ்வு வாழ்ந்திடும் போது அந்த மகிழ்வான சுகங்கள் நிரம்பிய வாழ்வை நீங்கள் எப்படி வாழ முடியும்?''

''நாங்கள் இப்போது ஒரு துக்கமான வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?''

''அப்படியில்லை. பற்றற்ற காரியங்கள் மட்டுமே ஆற்றுகிற ஒரு வாழ்வு எப்படி மகிழ்ச்சி மிக்கதாகும்? கோடி கோடி இன்பங்கள் இந்த உலகில் உள்ளதே? இதில் எதை தாங்கள் அனுபவித்துள்ளீர்கள்?''

''நீங்கள் குறிப்பிடுகிற அந்த கோடி கோடி இன்பங்கள் நிலையானவை அல்ல! எத்தனை பெரிய இன்பமும் முதல்முறை துய்க்கையில் தான் பெரிதாய் தெரியும். துய்க்கத் துய்க்க அது சிறிதாகி ஒரு கட்டத்தில் அலுப்பை ஏற்படுத்தும். புலனின்பங்கள்

எல்லாமே அப்படிப்பட்டவையே. புலன் துன்பங்களோ நேர் எதிராய் செயல்படும். முதலில் சிறிதாக தோன்றி பின் பெரிதாகி தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வரை கொண்டு சென்று விடும். இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எனவே நாங்கள் எங்கள் பாவங்கள், புண்ணியங்கள் இரண்டையும் கிருஷ்ணார்ப்பணம் செய்து எங்கள் கணக்கில் எதுவுமே இல்லாதபடி பார்த்துக் கொள்கிறோம்'' என்றார் அரிஷ்டநேமி.

-தொடரும்

இந்திரா செளந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us