sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

விட்டலனின் விளையாட்டு - 6

/

விட்டலனின் விளையாட்டு - 6

விட்டலனின் விளையாட்டு - 6

விட்டலனின் விளையாட்டு - 6


ADDED : ஏப் 25, 2023 12:26 PM

Google News

ADDED : ஏப் 25, 2023 12:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வகுளாபுரியில் எழுந்தருளிய விட்டலன்

ஸந்த் துகாராம் எழுதிய 'விட்டல ஸோயரா' எனத் தொடங்கும் 'அபங்' பாடலின் பொருள்.

'விட்டலன் எனக்கு உறவினன், நண்பன். அவன் என் சித்தத்தில் வீற்றிருக்கிறான். என் அங்கங்களில் பரவியிருக்கிறான். அவன் என் நாக்கு நுனியில் அமர்ந்திருப்பதால் அவனுக்கு அந்நியமான வேறு எதையும் பேச மாட்டேன் என சத்தியமாக கூறுகிறேன். எல்லா புலன்களிலும் மிக முக்கியமானது மனம். அது அவனை தியானிக்கிறது. அவனை ஒரு கணமும் என்னால் மறக்க முடியாது'.

...

'சாவ்தா மாலிக்கும், பெரியாழ்வாருக்கும் தொடர்பு உண்டு. அது என்னன்னு சொல்லுங்க பார்க்கலாம்' என புதிர் போட்டார் பத்மநாபன்.

சரியாக யூகித்து விட்டாள் பத்மாசனி. 'சாவ்தா மாலி ஒரு தோட்டக்காரர். மலர்களை நந்தவனத்தில் வளர்த்து திருமாலுக்கு சாற்றுவதை வழக்கமாகக் கொண்டவர். பெரியாழ்வாரும் நந்தவனத்தில் இருந்து மலர்களை கொய்து மாலையாக்கி திருமாலுக்கு தினமும் சாத்தியவர்'.

பெருமிதத்துடன் பார்த்தார் பத்மநாபன். 'சரியாகச் சொன்னாய். மலர்களின் நிறங்களில் திருமாலின் வடிவத்தை கண்டவர் பெரியாழ்வார். மலர்களின் மணங்களில் திருமாலின் பெருமையை உணர்ந்தவர் அவர். அவரது வளர்ப்பு மகள் ஆண்டாள் தான் சூடிய மாலையை திருவரங்கனுக்குச் சூடியது உங்களுக்குத் தெரிந்திருக்கும்' என்றார்.

'அப்பா, சாவ்தா மாலியின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை சொன்னீங்க. வகுளாபுரியில் தங்கிவிட்ட கால்கள் இல்லாத கூர்மதாசருக்கு என்ன நேர்ந்தது? ஒருவேளை அவர் அங்கேயே சோகத்துடன் தன் வாழ்நாளை கழித்தாரா?' எனக் கேட்டான் சிறுவன் மயில்வாகனன். சிறுமி மைத்ரேயியும் ஆவலுடன் அப்பாவின் பதிலுக்கு காத்திருந்தாள்.

'அப்படி எல்லாம் பக்தர்களை வாட விடுவானா விட்டலன்? கூர்மதாசரின் வாழ்வில் நடந்த மீதிப் பகுதியையும் சொல்கிறேன் கேள். அதுவும் அற்புதம் நிரம்பிய வரலாறு' என பத்மநாபன் கூறத் தொடங்கினார்.

...

வகுளாபுரியில் கூர்மதாசர் வருத்தத்தில் ஆழ்ந்திருந்தார். அவரைத் தாண்டி பலரும் விரைந்து கொண்டிருந்தனர். அவர்கள் பேசிக் கொண்டிருந்ததில் இருந்து அனைவரும் பண்டரிபுரத்துக்கு செல்வதாகத் தெரிந்தது. அங்கே இது உற்ஸவ காலம் என்பதும் புரிந்தது.

என்ன செய்ய அவருக்கு வழிதுணையாக வந்து உதவிகள் செய்த இளைஞனும் சென்று விட்டானே! அவருக்கெதிரே ஒரு சுமங்கலிப் பெண் கனிவுடன் அவரைப் பார்த்துச் சென்றாள். பலவித மலர்களை கூடையில் அடுக்கியபடி ஒருவன் வந்து கொண்டிருந்தான். முகப்பொலிவு நிறைந்த இரு அந்தணர்கள் எதிரே வந்தனர். யானை ஒன்று தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தது. சில குழந்தைகள் மகிழ்ச்சியுடன் சிரித்தபடி அவரைக் கடந்து சென்றனர். எங்கோ ஒரு சங்கொலி கேட்டது. வானில் ஒரு கருடன் பறந்து கொண்டிருந்தது.

கூர்மதாசர் திகைத்தார். தான் காணும் அத்தனையும் நல்ல சகுனங்கள்! இவை எல்லாம் இப்போது நிகழ்வானேன்? விட்டலனை சந்திக்கும் பாக்கியம் கிடைக்காத தனக்கு வேறு என்ன நல்லது நடந்து விடப் போகிறது? இருந்தாலும் அவர் தன் முயற்சியை கைவிடவில்லை. பண்டரிபுரத்தை நோக்கி மிக மெதுவாகத் தொடர்ந்து ஊர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது.

'ஐயா எதற்காக கால்கள் இழந்த நிலையில் இவ்வளவு சிரமப்பட்டு வேகமாக ஊர்ந்து செல்ல முயற்சிக்கிறீர்கள்?' திரும்பிப் பார்க்காமலேயே பதிலளித்தார் கூர்மதாசர். 'நான் முடவன்தான். எனினும் விட்டலனை தரிசித்தாக வேண்டும். அதுவும் ஏகாதசி தினமான இன்றே அவனை தரிசிக்க வேண்டும் என்று மிகுந்த ஆசை. இன்றைக்குள் பண்டரிபுரம் அடைந்து விட முடியாது என்பது தெரிகிறது. ஆனாலும் என் முயற்சியை கைவிடுவதாக இல்லை. விட்டலன் ஏதாவது ஒரு விதத்தில் வழிகாட்டுவான் என்றே தோன்றுகிறது'.

'இவ்வளவு கஷ்டப்பட்டாவது விட்டலனை தரிசித்தாக வேண்டுமா?' பின்புறத்தில் இருந்து அதே குரல் கேட்டது. கூர்மதாசருக்கு ஒரு உத்வேகம். 'நான் விட்டலனை இன்று தரிசித்தே ஆக வேண்டும். முடியாவிட்டால் நான் இறந்து விடுவேன்' என்று வெறி பிடித்தது போல கத்தினார்.

அப்படிக் கத்தியபடியே பின்புறம் திரும்பியவருக்கு ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது. விட்டலன் தன் இடுப்பில் கைவைத்தபடி புன்னகைத்துக் கொண்டிருந்தான். கூடவே ஞானேஸ்வரர், நாமதேவர், சாவ்தா மாலி ஆகியோரும் இருந்தனர்.

ஆனந்தக் கண்ணீர் பொங்க கூர்மதாசர் மெய்சிலிர்த்தார். எழுந்து நின்று விட்டலனின் முகத்தை அருகாமையில் தரிசிக்க வேண்டும் என்ற பேராவல் கொண்டார். ஆனால் தனக்கு கால்கள் இல்லையே.

விட்டலன் குனிந்து கூர்மதாசரை மார்புறத் தழுவினார்.

'அடடா என் வாழ்நாள் பிரார்த்தனைக்கு பலன் கிடைத்து விட்டது. என்னைத் தேடி விட்டலன் வந்து விட்டான்! கூடவே அவரது பக்தர்களும் வந்து விட்டார்கள். இனி இறந்தாலும் பரவாயில்லை' என்று கூறியபோது அவருக்கு வார்த்தைகள் தழுதழுத்தன.

விட்டலன் வாய்விட்டு சிரித்தான். 'என்ன கூர்மதாசா, பண்டரிபுரத்தை இன்றைக்குள் அடையவில்லை என்றாலும் இறந்து விடுவேன் என்றாய். என்னைப் பார்த்த பிறகும் இறந்து விடுவேன் என்கிறாய். எதற்காக இறப்பைப் பற்றிய பேச்சு? இந்த உலகில் உனக்கு இன்பமான நாட்கள் காத்திருக்கின்றன. உனக்கு நான் ஒரு வரம் அளிக்க விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்'

விட்டலனுடன் வந்திருந்த மூன்று சாதுக்களும் அவர் கேட்கும் வரம் எதுவாக இருக்கும் என்பதை அறிய ஆவலுடன் காத்திருந்தனர். கால்கள் இழந்த ஒருவர் வேறு என்ன வரத்தை கேட்டு விடுவார் என்ற எண்ணமும் அவர்கள் மனதில் தோன்றியது. நடக்கும் சக்தி வேண்டும் என்று அவர் கேட்பதில் தவறில்லையே. ஆனால் கூர்மதாசரின் பார்வை மிகவும் வேறுபட்டதாக இருந்தது.

'விட்டலா உன்னையே தரிசித்து விட்டேன். போதாக்குறைக்கு உனக்கு மிக அணுக்கமான பக்தர்களையும் உன்னோடு காணும் பாக்கியம் கிடைத்துவிட்டது. இனி வாழ்வில் எனக்கு வேறென்ன வேண்டும்? உன்னைப் பாராயணம் செய்வதன்றி வேறு எதுவும் எனக்குத் தேவையில்லை. என்றாலும் ஒரு விண்ணப்பம். நீ இந்த இடத்திலேயே எழுந்தருளி இந்த ஊர் மக்களுக்கு உன் அருளை வாரி வழங்க வேண்டும்'.

அடுத்த நொடியில் அதே இடத்தில் விட்டலனின் திருவருவம் அங்கு சிலை வடிவில் காட்சி அளித்தது. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட மன்னன் கூர்மதாசர் முன் விழுந்து வணங்கினார். விட்டலனின் திருவுருவத்தை சுற்றி ஒரு கோயிலை உருவாக்க ஆணையிட்டார்.

வகுளாபுரி இன்றளவும் விட்டல பக்தர்களின் ஒரு மிக முக்கிய புண்ணியத் தலமாக விளங்குகிறது. பண்டரிபுரம் செல்பவர்கள் வகுளாபுரிக்கும் செல்கிறார்கள். அதுவும் ஆஷாட மாதக் கார்த்திகைக்கு பண்டரிபுரம் செல்பவர்கள் தவறாது வகுளாபுரிக்கும் செல்கிறார்கள். சொல்லப்போனால் அப்போதுதான் பண்டரிபுரம் சென்றதற்கான முழு பயனும் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

உடலில் ஊனம் இருந்தாலும் மனதில் ஊனம் இல்லையென்றால் மகத்தான அதிசயங்களை நிகழ்த்தலாம் அடையலாம் என்பதை நிரூபித்த கூர்மதாசரின் புகழ் பாடும் க்ஷேத்திரமாகவும் வகுளாபுரி இன்றளவும் விளங்குகிறது.

-தொடரும்

ஜி.எஸ்.எஸ்.,

aruncharanya@gmail.com






      Dinamalar
      Follow us