ADDED : ஏப் 25, 2023 12:24 PM

காஞ்சி மஹாபெரியவரின் பக்தர் பாலகிருஷ்ணஜோஷி. சென்னை ஹிந்து தியாலாஜிகல்
உயர்நிலைப்பள்ளியை நடத்தி வந்தார். அங்கு பயிலும் மாணவர்களுக்கு மஹாபெரியவர்
ஆசியளிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார். அதனை ஏற்று 1932ல் பள்ளிக்கு
வருகை செய்து சுவாமிகள் உரையாற்றிய போது, 'இந்த பிரபஞ்சத்தையே ஒரு பெரிய
கூட்டுக் குடும்பம் என்று சொல்லலாம். நம்முடைய அம்மா, அப்பா யார் தெரியுமா?
பார்வதியும் பரமேஸ்வரனும் தான். இங்குள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் ஒரே குடும்பமாக ஒற்றுமையாக இருக்கணும். மாணவர்களான உங்களுக்கு இப்போது சின்ன வயசு. இந்த வயசிலே தான் நீங்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.படிக்கிற காலத்தில் ரெண்டு விஷயத்தை தெரிஞ்சுக்கணும். ஒன்று பக்தி; இன்னொன்று ஒழுக்கம். யார் மீதும் கோபம் கூடாது. ஒருத்தரைப் பற்றி மற்றொருவரிடம் தப்பாக பேசக் கூடாது.
நோயாளிகள் பத்தியம் இருப்பாங்க தெரியுமா... அப்படி நீங்கள் பத்தியம் இருக்கும் கால்
இது. கல்வி கற்கும் போது யார் பேச்சையும் கேட்காமல் சுதந்திரமாக இருக்கணும். என்றோ, பெரியவர்கள் கட்டளைகளை மீறவோ நினைக்கக் கூடாது.
குருபக்தி மிக அவசியம். பணிவு, பெரியோர்களிடம் பக்தி, மரியாதை அவசியம் இருக்க
வேண்டும்.
எந்த மாணவன் தன்னடக்கமுடன் நடக்கிறானோ, அவனே எதிர்காலத்தில் மிக
உயர்ந்தவனாகத் திகழ்வான். தாய், தந்தை ஆசிரியர் மீதுள்ள பக்தி ஒருவனை வாழ்வில்
உயரச் செய்யும். ஏனென்றால் ஆணவத்தை போக்கும் சக்தி பக்திக்கு மட்டுமே உண்டு.
உங்களைப் போன்ற குழந்தைகளுக்காகத் தான் 'அன்னையும் பிதாவும் முன்னறி
தெய்வம்' என்று அவ்வையார் சொல்லியிருக்கிறார். அதை ஒருபோதும் மறக்காதீர்கள்.
இதையே 'மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ'என வேதமும் வலியுறுத்துகிறது.
படிக்கும் வயதில் உலக விஷயங்களை மனதில் ஏற்ற வேண்டாம். நாட்டு நடப்பை
தெரிந்து கொள்ள வேண்டாமா என சிலர் கேட்கலாம்.
முதலில் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்கான காலமே பள்ளிக்காலம்.
உலகத்துக்கு நீங்கள் செய்யும் சேவை நன்றாகப் படிப்பதுதான்' என சொல்லி
ஆசியளித்தார்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* மனதை கெடுக்கும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே
நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
எஸ்.கணேச சர்மா
ganesasarma57@gmail.com

