ADDED : மே 02, 2023 03:11 PM
வைவஸ்வத மனு
அத்ரி மகரிஷிக்கும், கவுதம மகரிஷிக்கும் இடையே எழுப்பிய சர்ச்சையை நன்கறிந்த சனத்குமாரர் தீர்ப்பை கூறத் தொடங்கினார்.
''அரசன் என்பவன் தனி ஒருவனாய் இருந்தாலும் அவனே மக்களின் காவலன். பசி பட்டினியின்றி வாழ வைப்பவன். அரசன் சிறுதவறு செய்தாலும் மக்கள் அவ்வளவு பேரையும் பாதிக்கும். அதே சமயம் மக்கள் பாவம் செய்தால் அது மக்களை பாதிக்காது. மக்களை பாவிகளாய் வைத்திருந்த அரசனையே வந்து சேரும். எனவே அவனுக்கான கடமை மிகப் பெரியது. பெரும் பாரமானது. அவன் தேவர்களுக்கும், மேலான பரம்பொருளுக்கும் இணையானவனே!
எதிரிகளிடம் இருந்து மக்களை காப்பதால் அவன் ஈஸ்வரனாகிறான். மக்களை வாழ வைப்பதால் விஷ்ணுவாகிறான். அறிவு, ஞானம் ஒழுக்கத்தோடு அவர்கள் திகழ்ந்திட வழி செய்வதால் பிரம்மனாகிறான். ஆகையால் அத்ரி அரசனைப் பாராட்டியதில் மிகையோ, போலிப் புகழுரையோ இல்லை என சனத்குமாரர் கூறவும் அதைக் கேட்ட அரசன் வைன்யன் மகிழ்ந்தான். கவுதமரும் சமாதானமானார். அதன்பின் அத்ரி மகரிஷிக்கு பொன்னும் பொருளும் தந்தான். அவரும் அதை தன் மனைவி மகன்களிடம் கொடுத்து விட்டு தனக்கு உகந்த இடம் காடு தான். உகந்த வாழ்வு எளிய தவ வாழ்வே என வனம் நோக்கிச் சென்று விட்டார்.
...........
மார்க்கண்டேய மகரிஷி சொன்ன சம்பவம் பாண்டவர்கள் நாளையே அரசனாக நேர்ந்தால் எத்தனை பொறுப்போடும் நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு பாடமாக விளங்கிற்று. தொடர்ந்து வைவஸ்தமனு என்ற சூரியனுடைய புத்திரனைப் பற்றியும் அவன் தொடர்பான மத்ஸ்யோபாக்கியானத்தையும் கூறத் தொடங்கினார்.
''பாண்டு புத்திரர்களே! இப்போது மத்ஸ்யோ பாக்கியானம் என்ற ஒரு பெரும் கால நிகழ்வைக் கூறப் போகிறேன். இப்போது நீங்கள் மூன்றாவதான துவாபரயுகத்தில் உள்ளீர்கள். இது இன்னும் சில காலங்களே நீடித்திட உள்ளது. இதன் முடிவில் கலியுகம் பிறக்கப் போகிறது. துவாபரமானது 4400 ஆண்டுகளைக் கொண்டது. இந்த யுகத்தை வழிநடத்தியவனே மனு என்ற வைவஸ்த மனுவாவான்.
விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் உதித்தவர் பிரம்மா. பிரம்மாவை கொண்டு படைப்புகள் தோன்றின. அதில் முதலில் தோற்றுவிக்கப்பட்டவன் சூரியன். அந்த சூரியனில் இருந்தே அண்ட சராசரங்கள் அவ்வளவும் வெடித்தும் தெரித்தும் விழுந்து சந்திரன் முதல் இதர கோள்கள், நட்சத்திரங்கள் என பிரபஞ்சம் உருவாகியது. ஜட வஸ்துகளை தொடர்ந்து உயிர் வஸ்துவாக சூரிய புத்ரனாக தோன்றியவனே மனு!
இந்த மனுவால் இந்த துவாபர யுகம் எப்படி தோன்றியது என்பதை கூறுவதே மத்ஸ்யோ பாக்யானம். மனு தோன்றிய காலம் துவாபரயுகமாகும். பொதுவாக யுகங்கள் குறித்த கருத்து உண்டு. முதல் யுகம் கிருதயுகம். இதில் மானுடர்கள் ஒழுக்கம், பக்தி, கருணை மிகுந்தவர்கள். அடுத்தது திரேதாயுகம். இதில் எழுபத்தைந்து சதவீதம் நல்லவர்கள். இருபத்தைந்து சதவீதம் பொல்லாதவர்கள். அடுத்துள்ள துவாபரத்தில் ஐம்பது சதவீதம் நல்லவர்கள். மீதமுள்ளோர் பொல்லாதவர்கள்.கலியுகத்திலோ இருபத்தைந்து சதவீதம் நல்லவர்கள். எழுபத்தி ஐந்து சதவீதம் பொல்லாதவர்கள். யுகங்களை இப்படி சிருஷ்டி செய்ததெல்லாம் ஆதிபகவனே! இதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். எதனால் இப்படி என்பதை புரிந்து கொள்வது கடினம். ஞானத்தாலேயே உணர முடியும். அந்த ஞானம் வயப்பட இந்த மத்ஸ்யோ பாக்யானத்தை கேளுங்கள். இதைச் சொல்வதும் புண்ணியம், கேட்பது அதை விட புண்ணியம்'' என மார்க்கண்டேய மகரிஷி யுகங்கள் பற்றி சுருக்கமாக கூறி முடித்தார்.
மனித இனம் மட்டுமே தன்னை அறிந்து கொண்டு பின் மற்றவைகளையும் அறிந்திடும் தன்மை உடையது. இதன் காரணமாக முதலில் எழும் கேள்வி நான் யார் என்பதே... பிறகே நான் ஏன் பிறந்தேன்? இதன் தொடர்ச்சியாக பிறந்த இடம்; அந்த இடம் தொடர்பான பூமி. அதன் இரவு பகல் அதன் பருவகாலங்கள் என சகலத்தின் மீதும் மனதில் கேள்விகள் உண்டு.
இதற்கெல்லாம் விடையாகத்தான் மகரிஷி மத்ஸ்யோபாக்யானத்தை கூறத் தொடங்கினார்.
''பாண்டவர்களே! மனு பூமிக்கு சூரியனால் அனுப்பப்பட்டு தன்னை ஞானியாக்கிக் கொள்ளும் பொருட்டு தவம் செய்திட பணிக்கப்பட்டான். பத்ரிநாத்தில் கங்கை கரையில் பாறை மீது அமர்ந்து மனு தவம் புரிந்த போது கங்கையில் சிறிய மீன் குஞ்சினை விழுங்கும் வேகத்தில் ஒரு பெரிய மீன் துரத்தியது. சிறிய மீன் தப்பிக்க எண்ணி துள்ளிக் குதித்து பாறை மீது தவமிருந்த மனுவின் மீது விழுந்தது. மனுவின் தவம் கலைந்தது. மனு அதைப் பிடித்து ஆற்றில் விட முயன்ற போது, ''வேண்டாம் ஆற்றில் விடாதே'' என அலறியது. ''உனக்கான இடம் ஆறு தானே?'' என மனு கேட்டான்.
''உண்மை தான்... ஆனால் இதில் தப்பிப் பிழைப்பது கடினம். பெரிய மீன்கள் எங்களை விழுங்கி விடுகின்றன'' என்றது.
''அப்படியானால் என் ஆசிரம தடாகத்தில் வசித்திடு'' என அங்கு விட்டான் மனு.
சிறிது காலத்தில் வளர்ந்து பெரிதாக அதற்கு தடாகம் போதவில்லை. எனவே மனுவிடம் நதியில் விடச் சொன்னது. மனுவும் நதியில் விட்டான். ஒரு கட்டத்தில் நதியும் போதாமல் கடலில் விடச் சொன்னது. மனுவும் அதை கடலில் விடச் சென்றான். அப்போது அந்த மனுவிடம் நடப்பு யுகமான திரேதாயுகம் முடியப் போவதை கூறிற்று.
''கருணை மிகுந்தவனே! இந்த யுகம் அழியப் போகிறது. இன்னும் சொல்ப காலம் தான். பூமி மொத்தமும் ஜலப்பந்தாகி இமயத்தின் உச்சி மட்டும் மூழ்காமல் இருக்கும். இப்போதே ஒரு படகை தயார் செய். உன்னோடு சப்தரிஷிகள் வந்து சேர்வர். ஆக நீங்கள் எட்டு பேர் மட்டும் தப்பிப் பிழைப்பீர்கள். அதன் பின் புதுயுகம் துவாபரம் பிறந்திடும். அந்த யுகத்தை நீயே வழி நடத்துவாய். உன்னாலேயே கால அடையாளம் தோன்றும்'' என்றது அந்த மீன்.
''உனக்கு இதெல்லாம் எப்படி தெரியும் என்று மனு கேட்டான். அப்போது அது பிரம்மாவாக மாறி நின்றது. மனுவும் அவரை வணங்கி ''பிரம்ம தேவரே! எதற்கு இந்த மீன் பிறப்பு. என்னிடம் தஞ்சம் புகுந்திட என்ன காரணம்?'' எனக் கேட்டான்.
''துவாபர யுகத்திற்கு தயார்படுத்தவே மீன் வடிவில் வந்தேன். உதவும் குணம் போன்ற நற்குணங்களை உன்னுள் துாண்டினேன். உன் தவத்தையும் ஸ்திரப்படுத்தினேன். இப்போது குணம், தவம் இரண்டாலும் சிறந்து விளங்குகிறாய். இந்த யுகம் மூழ்கி துவாபரம் தொடங்கும் சமயம் உன் தவசக்தியாலும் சப்தரிஷிகளின் துணையாலும் புதிய உயிரினங்களைத் தோற்றுவித்து அவைகளை 4400 ஆண்டுகளுக்கு வழிப்படுத்துவாயாக. அதற்கான சக்தியையும் சித்தியையும் இப்போதே வழங்கி விடுகிறேன்'' என்ற பிரம்மா அவ்வாறே செய்து விட்டு மறைந்தார்.
அதன்பின் கடல்கோள் ஏற்பட்டு உலகம் ஜலப்பிரவாகமாகியது. அதில் மனுவும் சப்தரிஷிகளும் இமயத்தின் உச்சி வரை சென்று உயிர் தப்பினர். நீர் வடியவும் துவாபர யுகத்திற்கான சகல உயிர்களையும் பிரம்ம துணையோடு தோற்றுவித்தனர். சப்தரிஷிகளும் ஒரு பரம்பரையை தோற்றுவித்திட அதுவே அவர்கள் பெயரிலான கோத்திரம் என்றானது.
நீங்கள், நான் உட்பட எல்லோரும் அந்த கோத்திரங்களில் ஒரு கோத்திரத்தைச் சேர்ந்தவர்களே! நம் தலைப்பிதாமகர் சப்தரிஷிகளே! இப்படித்தான் இந்த யுகம் தோன்றியது. நாம் தோன்றி பிற உயிர்கள் தோன்றின. இதைக் கூறுவதே 'மத்ஸ்யோபாக்யானம்'' என்று முடித்தார் மார்க்கண்டேய மகரிஷி! பாண்டவர்கள் வாயைப் பிளந்தபடி கேட்டனர்.
-தொடரும்
இந்திரா செளந்தர்ராஜன்