ADDED : மே 02, 2023 03:11 PM
ஆண்டாளும் கம்பர் குஞ்சமும்
சைவம், வைணவம் தமிழரின் இரு கண்களாக விளங்குகின்றன. பெருமைமிகு மார்கழியில் பெருமாள் கோயில்களில் திருப்பள்ளி எழுச்சியும் திருப்பாவையும், சிவன் கோயில்களில் திருவெம்பாவை, திருப்பள்ளிஎழுச்சியும் ஒலிக்கும். ஆண்டாள் அருளியது திருப்பாவை. மாணிக்கவாசகர் அருளியது திருவெம்பாவை. முன்னது ஸ்ரீவில்லிபுத்துாரிலும், பின்னது திருவண்ணாமலையிலும் மலர்ந்தது. திருப்பாவையில் 30 பாசுரங்கள். திருவெம்பாவையில் 20 பாடல்கள். கோதையோ பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்ட அற்புதக் குழந்தை. மாணிக்கவாசகரோ பாண்டிய நாட்டு அமைச்சராக பணியாற்றியவர். திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் குடியேறியது. திருெவம்பாவை திருவாசகத்தின் அங்கமாக பன்னிரு திருமுறையில் குடியேறியது. இந்த இரு பாவை பாட்டுகளும் இரு விழிகளாக ஒளிர்பவை.
திருப்பாவையும் திருவெம்பாவையும் மார்கழி நோன்பை ஒட்டி எழுந்த இலக்கியங்கள். மார்கழியில் மங்கையர் நோன்பு நோற்றனர் என்ற செய்தி இரண்டிலும் உண்டு. ''மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால் என்ற திருப்பாவை அடியிலும், “ போற்றி யாம் மார்கழி நீராடேலோ எம்பாவாய்'' என்ற திருவெம்பாவை அடியாலும் இதை உணரலாம். இந்த இரண்டின் முடிவு கூட எம்பாவாய் என்ற தொடர் கொண்டு முடிகின்றன. அது மட்டுமல்ல மழை வேண்டுவது, தக்க கணவரை அடைவது ஆகிய பாவை நோன்பின் நோக்கங்கள். திருப்பாவையில் 4ம் பாடலும், திருவெம்பாவையில் 16ம் பாடலும் மழைப்பாட்டு. திருப்பாவையில் மழையை திருமாலோடும், திருவெம்பாவையில் உமையோடும் உவமிக்கக் காணலாம். இரண்டிலும் நீராடல் பற்றிய குறிப்புகள் உள்ளன. நோன்பின் போது கன்னியர்கள் கடவுளின் நாமத்தை கூறுதல் மரபு. அப்படி திருப்பாவை கன்னியர்,
“ மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவில்வது“ போன்று
திருெவம்பாவை கன்னியர் இறை நாமம் கூறுவதை,
“ சிவனே சிவனே என்றோல மிடினும்
உணராய் உணராய் காண“ என்ற வரிகளால் தெரிந்து கொள்ள முடிகிறது.
துயில் எழுப்பும் பாடல்களும் இந்த இரு பாவை பாடல்களிலும் இடம் பெற்றுள்ளன. திருப்பாவையில் 14 பாடல்களும் திருவெம்பாவையில் 8 பாடல்களும் துயில் எழுப்பும் பாடல்களாக அமைந்துள்ளன. ஆண்டாள் துாங்கிக் கொண்டிருக்கும் தன் தோழியரை மட்டுமின்றி கண்ணன், யசோதை, நப்பின்னை, பல தேவன் போன்றோரையும் துயில் எழுப்புவதாக அமைந்துள்ளது. திருவெம் பாவையில் தோழியரை மட்டுமே துயில் எழுப்புவதாக அமைந்துள்ளது. தென்படுகின்றன.
திருப்பாவையில் கண்ணனை அடைவதற்கு அவனது துணையையே நாடும் நிலை காணப்படுகிறது. திருவெம்பாவையில் இந்த நிலை காணப்படவில்லை. திருப்பாவையில் ஆண்டாள் கண்ணனின் பல அவதாரங்களில் சொல்லப்பட்ட பல புராண கதைகளைச் சொல்கிறாள். ஆனால் திருவெம்பாவையிலோ சில புராணக் கதைகளே இடம் பெற்றுள்ளன. உரையாடல் இந்த இரு நுால்களிலும் காணப்படுகிறது. அந்த உரையாடல்கள் அனைத்தும் நகைச்சுவையோடு பொருந்தியுள்ளது சிறப்பு. திருப்பாவையில் ஒரு இளம் பெண்ணின் உள்ளத்துடிப்பும் பாட்டுடைச் செம்மையும் காணலாம். திருவம்பாவையிலோ அன்பில் திளைத்த நடுத்தர வயதுள்ள பெண்ணின் அன்பு கடலில் மூழ்கி நிற்கும் ஆனந்த உள்ளம் தெரிகிறது.
அட இது என்ன வேடிக்கை! இரண்டு மலைகளையும் இப்படி குடைகிறீர்களே என நீங்கள் நினைப்பது புரிகிறது. ஒரு வீட்டில் இரட்டை பிறப்பு பிறந்தால், அந்த இரண்டு குழந்தைகளிடையே என்னென்ன ஒற்றுமைகள், என்னென்ன வேற்றுமைகள் என்று ஆசையுடன் பார்ப்போமல்லவா... அதுபோன்றுதான் இதுவும். ஒருவனுக்கு கூரிய மூக்கு, மற்றொருவனுக்கு கண்கள் கொஞ்சம் பெரிது என ஆர்வமாக நோக்குவோமே! அது போன்ற சங்கதி தான். இரண்டு பக்தி பாசுரங்களைப் பாடி மகிழ்வது என்று அதைப் பற்றி நாம் யோசிக்கிறோம். இந்த இரண்டிலும் எது உயர்வு எது தாழ்வு என்ற பகுத்தாயும் நோக்கம் இல்லை. ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் பார்த்து தெரிந்து கொள்வதால், இன்னும் அவர்களைப் பற்றி ஆழமாக அறிந்து கொள்கிறோம். அப்படித் தானே? அது போல ஆழமாக உள் நோக்கிப் பார்த்து புரிந்து கொள்ளுதலே நோக்கம்.
கருத்துக்கள் மட்டுமின்றி சொற்றொடர் அமைப்புகளும் ஒத்திருக்கின்றன. ஊமையோ அன்றிச் செவிடோ என்று ஆண்டாள் பொய்க் கோபம் காண்பிப்பது போன்று வன்செவியோ நின் செவிதான் என்று மாணிக்கவாசகர் காதில் உரைப்பது போல கேட்கிறார். அத்துடன் இரண்டிலுமே கிளியோடு ஒப்பிடும் நிலை உள்ளது. இளங்கிளியே என திருப்பாவை கன்னியை அழைப்பது போல, “ வண்ணக்கிளி மொழியாள்” என்று திருவெம்பாவையில் அழைக்கின்றனர். கண்ணனை அணிவிளக்காகவும் தோற்றமாய் நின்ற சுடராகவும் பார்ப்பது போன்று அங்கே சிவனை பரஞ்சோதியாகவும் பெருஞ்சோதியாகவும் பார்க்கின்றனர்
அதைப் போல,“எங்களை முன்னமே வந்து எழுப்புவதாக வாய்க் கதை பேசிய நங்கையே! எழுந்திரு” என்ற ஆண்டாளின் கருத்து,
“மானே நீ நின்னலை நாளை வந்து உங்களை நான் எழுப்புவேன்” என்ற மாணிக்கவாசகரின் கருத்தோடு ஒன்றுகிறது.
கண்ணனுடைய திருக்கோலத்தை இங்கே கன்னியர் பாடுவது போன்று அங்கே சிவனின் கோலத்தை பக்தைகளான கன்னியர் பாடுகின்றனர். கண்ணனை ஆண்டாள்
“மனத்துக்கு இனியவனாக” காண்பது போல் மணிவாசகர் “கண்ணுக்கு இனியவனாக” சிவபெருமானை காண்கிறார். இந்த இரு பாவை பாடல்களிலுமே தனிப்பெரும் நோக்கங்கள் கடைசி பாசுரத்துக்கு முந்தைய பாடலில் தரப்பட்டுள்ளன. இரண்டும் கடவுள் தொண்டின் அடிப்படையில் எழுந்த வேண்டுகோள்களே! திருப்பாவையில் கன்னிப்பெண்கள் கண்ணனை கடவுளாக மட்டுமின்றி மன்னராகவும் காதலனாகவும் பார்க்கின்றனர். திருெவம்பாவையிலோ சிவனை பிரம்மனுக்கும் திருமாலுக்கும் தலைவனாகவும் தந்தையாகவும், கடவுளாகவும், தோழனாகவும் காண்கின்றனர்.
இரண்டிலுமே போற்றிப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருப்பாவையில் உவமைகள், வர்ணனைகள் போன்றவை சிறப்பாக அமைந்துள்ளன. ஆண்டாள் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சிக்கு வடிவம் கொடுத்து சமய உணர்வையும் ஊட்டி சமைத்ததே இந்த திருப்பாவை. மாணிக்கவாசகர் அப்படி அல்லாமல் தன் கற்பனை ஆற்றலால் பக்தி மிக்க திருவெம்பாவையை சிறப்பாக பாடியுள்ளார். நம் வாழ்விலும், இலக்கியத்திலும் சிறப்பிடம் பெற்று விளங்கும் இரு நுால்களும் ஒரு செடியில் பூத்த இரு மலர்களாக மணம் வீசுகின்றன.
ஆண்டாள் மீது பெரும் பக்தி கொண்டவர் கம்பர். ஆண்டாளின் நீராட்ட உற்ஸவத்தை காண ஒருமுறை அவர் ஸ்ரீவில்லிபுத்துாருக்கு வந்து கொண்டிருந்தார். வழியில் தாமதமாகிவிட்டது. நீராட்ட உற்ஸவம் இந்நேரம் நிறைவு பெற்றிருக்குமே என தவிப்புடன் நடந்தார். கோயிலிலோ வைரத்தால் ஆன ஒரு அணிகலனை காணாமல் தேடிக் கொண்டிருந்ததால் நீராட்டம் தாமதமாகிக் கொண்டே இருந்தது. வருத்தத்துடன் வந்த கம்பர், திருமஞ்சனம் தொடங்கவில்லை என மகிழ்ந்தார். அப்போது அவர் கண்ணில் பட்டது அந்த வைர அணிகலன். அதை எடுத்து பட்டர்களிடம் கொடுக்க, திருமஞ்சனம் நடைபெற்றது. கம்பரும் ஆண்டாளின் கருணையை நினைத்து மகிழ்ந்தார். தைமாத பிறப்பன்று நடக்கும் இந்த திருமஞ்சனத்தின் போது சூட்டப்படும் அந்த அணிகலனை கம்பர் கொச்சு என்றும் கம்பர் குஞ்சம் எனச் சொல்கிறார்கள்.
கவிச்சக்கரவர்த்தி கம்பரும் ஆண்டாளின் அன்பர் என்பது எத்தனை ஆனந்தமாக இருக்கிறது. அவளின் பக்தி அனுபவத்தை தொடர்ந்து அனுபவிப்போம் வாருங்கள்!
-தொடரும்
பவித்ரா நந்தகுமார்
82204 78043
arninpavi@gmail.com