ADDED : அக் 15, 2023 01:46 PM

மனச்சோர்வு போக்கிய மார்க்கண்டேயர்
குபேரனைப் பற்றி மார்க்கண்டேயர் கூறத் தொடங்கவும் தர்மன் சற்றே இடைமறித்தான்.
''மகரிஷி... கைலாய மலைக்கு செல்லும் வழியில் கந்தமாதன பர்வதத்தில் அவனை சந்திக்க நேர்ந்தது. அவனோடு முதலில் யுத்தம் புரிய நேரிட்டது பின் இணக்கம் ஏற்பட்டது. அவனும் எங்களை உபசரித்தான்'' என்றான்.
''குபேரனின் அழகான பட்டினம் தான் இலங்கை. இந்த பட்டினத்துடன் புஷ்பக விமானத்தையும் குபேரனுக்கு பாட்டனின் சொத்தாக அளித்தவர் பிரம்மா. இவரின் மானசீக புத்திரனே புலஸ்தியர். இந்த புலஸ்தியரின் அம்சமான விஸ்ரவசுவுக்கு பிறந்தவனே ராவணனும் கும்பகர்ணனும்! இவனுக்கும் 'கோ' என்பவளுக்கும் பிறந்தவனே குபேரன். இவன் தந்தையான விஸ்ரவசுவை விட பாட்டனான பிரம்மாவிடம் பாசம் கொண்டு அவனிடத்திலேயே தன்னை ஒப்படைத்து விட்டான். இதை விஸ்ரவசுவால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் விஸ்ரவசு குபேரனை ஒதுக்கி விட்டு ராவணன், கும்பகர்ணன் மீது பாசம் காட்டியதோடு குபேரனுக்கு எதிராக துாண்டவும் செய்தான். இதனால் ராவணனும் குபேரனிடம் இருந்து நாடு, புஷ்பக விமானத்தை பறித்ததோடு துரத்தி விட்டான். அதன்பின் கந்தமான பர்வதத்துக்கு வந்து தன் ராஜ்யத்தை அமைத்துக் கொண்டான். இங்கே இவனுக்கு நளகூபரன் என்ற மகன் பிறந்தான்'' என்ற மார்க்கண்டேயர், ''இதை நான் ஏன் சொல்கிறேன் தெரியுமா'' என்றும் கேட்டார்.
''தெரியவில்லையே மகரிஷி''
''மண்ணாசை, பெண்ணாசை அசுரர்களுக்கு உரித்தானவை. பக்தியும் தவமும் இருந்தாலும் தான் என்ற செருக்கு ஒருவனுக்கு இருந்தால் அவன் அசுரன் ஆகி விடுவான். நான் என்னும் அகந்தை தான் விஸ்ரவசுவை ஆட்டிப்படைத்து அது அவன் மூலம் ராவணனையும் தொற்றிக் கொண்டு அவனை பாடாய் படுத்தி இறுதியில் தன்னைப் படைத்தவனாலேயே அழிக்கவும் செய்தது.
நான் என்கிற அகந்தையை அடக்கிய ராமன், அதை அடக்காமல் திரிய விட்ட ராவணன் ஆகியவரை பற்றியதே ராமாயணம். இதை நீ பூரணமாக அறியும் நிலையில் உங்களுக்குள் சோதனைகளை சாதனைகளாக்கிக் கொள்ளும் உத்வேகம் உண்டாகும்'' என தொடர்ந்து ராமாயணத்தை சொல்லி முடித்தார். இதன் மூலம் ராமன், சீதை, ராவணன் குறித்தும் முழுமையாக அறிந்த பாண்டவர்கள், அனுமன் குறித்தும் அறிந்து மனச்சோர்வு நீங்கினர்.
''மகரிஷி.... சரியான நேரத்தில் ஆறுதல் கூறி ஞானதீபம் ஏற்றினீர்கள். சீதாதேவி பட்ட துன்பத்தை ஒப்பிட்டால் திரவுபதி சந்தித்தது ஒன்றுமில்லை என்பதை புரிந்து கொண்டோம்'' என்றான் தர்மன். சீதையைப் போல அறிய வேண்டிய இன்னொரு பாத்திரமும் கடந்த கால வரலாற்றில் உள்ளது'' என்ற மார்க்கண்டேயரை அது யார் என வியப்புடன் பார்த்தனர்.
''மகரிஷி... அது பற்றியும் கூறினால் இன்னும் மனம் தெளிவாகும்'' என திரவுபதி வேகமாய் முன்வந்தாள். மார்கண்டேயர் உற்சாகமுடன், ''யுகங்கள் கடந்தும் வாழும் விதிப் பாட்டை அந்த பரமன் அளித்து இருப்பதே ஒரு காலப் பெட்டகமாய் நான் திகழ்ந்து என் வாழ்வின் போக்கில் சந்திப் போருக்கு எல்லாம் பல வரலாறுகளை சொல்லத் தான்... அந்த வகையில் இப்போது சத்தியவான் சாவித்ரியின் பதிவிரதா மகாத்மியத்தை கூறுகிறேன். இந்த மகாத்மியம் விதியின் வலிமையைச் சொல்வதோடு அதை பதிவிரதை நினைத்தால் மாற்றியமைக்க முடியும் என்பதையும் உணர்த்தும்'' என்றார் மார்க்கண்டேயர். அப்போது நகுலன் இடையிட்டு, ''மகரிஷி... அதை கூறும் முன் அட்சய பாத்திரத்தால் பசியாற வேண்டும். துர்வாசருக்குத் தான் விருந்திட முடியாமல் போனது. தங்களுக்கு தரலாம் அல்லவா'' எனக் கேட்டான்.
புன்னகைத்த மார்க்கண்டேயர், ''நான் பசியற்றவன். அது ஒரு பிணி. அதை நான் அடக்கியாள்பவன் என்பது தெரியாதா' எனக் கேட்டார்.
''மகரிஷி... அது எப்படி சாத்தியம். உண்ணாமல் வாழ முடியுமா''
''நல்ல கேள்வியை கேட்டிருக்கிறாய். உயிரோட்டத்திற்கு சக்தி அவசியம். சக்தியைப் பெற்றிடவும் சேமிக்கவும் கருவி அவசியம். அது தான் ஐம்பூதங்களால் ஆன இந்த உடல். அதை உணர்ந்து ஐந்து பூதங்களையும் சமநிலையில் வைத்திடும்போது பசியும் அடங்கி விடும்''
''ஐந்து பூதங்களை சமநிலையில் வைப்பது எப்படி''
''அதற்கு உடல் பற்றிய தெளிவு வேண்டும். அதைப் பெற யோகம் பற்றி அறிய வேண்டும்''
''ஒன்றைத் தொட்டு ஒன்று எனச் சொல்லிக் கொண்டே செல்கிறீர்களே... உண்ணாது உயிர் வாழ முடியும் என்பதை இப்போது தான் கேட்கிறேன்''
''எதற்கும் தேவை வர வேண்டும் அல்லவா''
''சரி... உண்ணாமல் உயிர் வாழ முடிந்த ரகசியத்தைத்தான் சொல்லுங்களேன்''
''முன்னதாக சத்தியவான் சாவித்ரியை பற்றி கூறட்டுமா''
''நல்லது. அவ்வாறே செய்யுங்கள்''
''எப்போதும் நான் கூறுவதை கேட்கும் சமயம், சகாதேவன் என் முன்பு முதல் ஆளாக நிற்கட்டும்''
''ஏன் மகரிஷி''
''உங்கள் ஒவ்வொருவரிடமும் நான் ஒரு ஆற்றலைப் பார்க்கிறேன். தர்மன் மண்ணின் அம்சம். பீமன் காற்றின் அம்சம். அர்ஜுனன் நெருப்பின் அம்சம். நகுலன் நீரின் அம்சம். சகாதேவனோ ஆகாய அம்சம். ஆகாயம் என்பதற்கு 'எதுவும் இல்லாதது' 'எல்லாமும் உடையது' என பொருள் உண்டு. என்ன குழப்பமாக இருக்கிறதா...
''ஆம் மகரிஷி. அது எப்படி? இல்லாமலும் இருந்தும் ஒன்று இருக்க முடியும்''
''நாமும் கூட இல்லாமல் இருப்பவர்கள் தான் என்பது தெரியுமா''
''மேலும் குழப்புகிறீர்கள்''
''என்றால் பெரிய தெளிவு உறுதி''
''ஏன் குழப்ப வேண்டும்; பின் தெளிவடைய வேண்டும். அது வேண்டாத வேலையல்லவா''
''இப்படி கேட்டது அறிவாலா... ஞானத்தாலா...''
''இது என் இப்படி கேள்விக்குள் கேள்வி''
''கேள். நிறைய கேள். கேட்பதும் இருவிதம். ஒன்று காது கொடுத்து கேட்பது. இன்னொன்று கைநீட்டிக் கேட்பது. காதால் கேட்பது ஒலியை. கையால் கேட்பது ஒளியை. அதாவது பொருட்களை. ஒலி புலனாகாதது. ஒளியோ புலனாவது''
''மகரிஷி... எதற்கு இத்தனை குழப்பமான விளக்கம். சுருக்கமாய் புரியும்படி கூறலாமே'' என நகுலன் சலித்தான்.
''ஏன் பொறுமை இழக்கிறீர்கள். நான் பசியற்றவன் என ஆரம்பித்த பேச்சு தான் அறிவா... ஞானமான என வந்து நிற்கிறது.
அறிவுக்கு அறிவதே கணக்கு. அதாவது தன் கண்ணில்படுகின்ற, காதில் விழுகின்ற, நாவால் சுவைக்க முடிந்த, தொட்டுப் பார்த்து உணர முடிந்த, நாசியால் நுகர முடிந்த புலன்வழி உணர்வுகளே முக்கியம். ஞானம் இதை கடந்த ஒன்று.
எனக்கு புலனாவதை மட்டுமே ஏற்பேன் என்பது அறிவுநிலை. புலனாகாமல் மறைவாய் இருப்பதையும் ஏற்பது ஞானம்''
''சத்தியவான் சாவித்ரி பற்றி கூற வந்த தாங்கள் இப்படி அறிவு, ஞானம் என திசை திருப்பக் காரணம்''
''சாவித்ரி வரலாறு புரிந்திட இந்த இரண்டும்தேவை என்பதால் தான்''
''முதலில் தாங்கள் வரலாற்றை தொடங்குங்கள். இடையில் நாங்கள் கேள்விகளால் அறிவுக்கும் ஞானத்துக்குமான வேற்றுமையை தெரிந்து கொள்கிறோம்''
''நல்லது. சகாதேவா என் முன்பு வா' எதையும் ஒருமுறை காதால் கேட்டாலே அதை மனதில் நிறுத்த முடிந்த, 'ஏகா க்ரஹி' நீ! அதனாலேயே உன்னை அழைக்கிறேன். சத்யவான் சாவித்ரி வரலாறு என் மூலம் உன்னுள் பதிவாகி, பின் உன் மூலம் உலகத்தைச் சென்று சேரட்டும்'' என்றிட சகாதேவனும் முனிவரின் முன்அமர்ந்திட அவரும் சத்தியவான் சாவித்ரி வரலாறை தொடங்கினார்.
-தொடரும்
இந்திரா செளந்தர்ராஜன்
98947 23450