ADDED : அக் 15, 2023 09:38 AM

பாகவத சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக ஜொலித்தவர் ஸ்ரீகிருஷ்ண பிரேமி சுவாமிகள். 'அண்ணா' என அழைக்கப்பட்ட இவர், சமகாலத்தில் நம்முடன் வாழ்ந்த ஞானி. தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கிருஷ்ண பக்தியை பரப்பியவர் இவரைப் போல யாருமில்லை.
ஆக.31, 1934 கிருஷ்ண ஜெயந்தியன்று பிறந்த இவரது இயற்பெயர் ராமகிருஷ்ணன். 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த வியாக்கியான சக்கரவர்த்தி என்னும் பெரியவாச்சான் பிள்ளையின் வம்சத்தில் பிறந்தார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் பெரியவாச்சான் பிள்ளையும், இவரும் பிறந்தது ஆவணி மாத ரோகிணி நட்சத்திரத்தில் தான்.
சிறு வயதிலேயே ராமாயணம், பாகவத பாராயணம், உபன்யாசத்தில் தேர்ச்சி பெற்றார். எட்டு வயது முதல் நாம சங்கீர்த்தனம், கிருஷ்ண தியானம், சமாதி நிலை கடந்து, பகவான் கிருஷ்ணரிடம் தன்னை அர்ப்பணித்தார்.
சிவப்பிரகாச ஆனந்தகிரி சுவாமிகள், போதேந்திர சுவாமிகள், காஞ்சி மஹாபெரியவர் போன்றோரின் ஆசியுடன் ஆன்மிகத்தில் உச்சத்தை அடைந்தார்.
'பக்த கோலாஹல சுவாமியை' உபாசனை தெய்வமாக ஏற்று பக்தியில் ஈடுபட்டார். கலியுகத்தில் நாம சங்கீர்த்தனம் மூலம் பகவானை அடைய முடியும் என வழிகாட்டினார். ஜாதி, மத பாகுபாடின்றி அனைவருக்கும் உதவினார்.
இவரது சொற்பொழிவால் கவரப்பட்டு வெளிநாடுகளில் லட்சக்கணக்கானோர் கிருஷ்ண பக்தர்களாக மாறினர். வேதத்தை பாதுகாக்க பாடசாலைகள் நிறுவினார். திவ்யதேசங்களில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தினார்.
இவர் இயற்றிய நுால்களில் வைஷ்ணவ ஸம்ஹிதை, ராகவ சதகம், கோவிந்த சதகம் ராதிகா சதகம், யுகள சதகம், திவ்ய தேசங்களின் மங்களாசாசனம், பிருந்தாவன மஹாத்மியம் குறிப்பிடத்தக்கவை.
'பாகவத தர்மம்' என்னும் மாத இதழை நடத்தினார்.
விழுப்புரம் அருகிலுள்ள பரனுார் ஆசிரமத்தில் கிருஷ்ண ஜெயந்தி பத்து நாள் விழாவாக நடக்கும். இங்கு ஆயுஷ்ய ஹோமம், சமஷ்டி உபநயனம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேக வைபவங்களை தானே முன்னின்று நடத்துவார். உ.பி.,யிலுள்ள பிருந்தாவன ஆசிரமத்தில் ஹோலி, திருவிடைமருதுார் அருகிலுள்ள சேங்கனுாரில் ஸ்ரீராமநவமி, மதுரை அழகர்கோவிலில் சித்ரா பவுர்ணமி உற்ஸவங்களை நடத்தினார்.
ஆண்டுதோறும் சாதுர்மாஸ்ய விரதத்தின் போது சோழிய பிராமணர்களுடன் சேர்ந்து காஞ்சிபுரம் சங்கராச்சாரியருக்கு சமஷ்டி பிக்ஷாவந்தனம் செய்வது வழக்கம்.
அதற்கான அறக்கட்டளையின் சேர்மனாக 1989ல் காஞ்சி மஹாபெரியவர் இவரை நியமித்தார் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தரிசிக்கச் சென்றால், ''நம் டிரஸ்ட் பிக்ஷாவந்தனம் எப்போது?'' என்று தான் கேட்பார்.
இந்த ஆண்டு காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காசியில் முகாமிட்டிருந்தார். அங்கு ஆக.20, 2023ல் பிக்ஷாவந்தனம் என தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இவர் உடல்நலக் குறைவால் பங்கேற்கவில்லை. தன் பிறந்த நாளான ஆக.31, 2023ல் பகவான் கிருஷ்ணரின் திருவடியை அடைந்தார். இவரது வாழ்வும், பணியும் எதிர்கால தலைமுறைக்கு வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை.
ஐ.சுந்தரம் அய்யர், சென்னை.