ADDED : ஜூலை 01, 2013 03:05 PM

பீடிகை போதும்... வசிஷ்ட புராணம் தொடங்கட்டும். கங்கா நதிக்கரையில் பாண்டு புத்திரர்கள் ஒரு கந்தர்வராஜனால் இப்புராணத்தை அறிந்தார்கள் என்று நாளை உலகும் சொல்லட்டும்,''- என்று பீமன் எடுத்துக் கொடுத்தான்.
வசிஷ்டரின் புராணத்தை அவரது ஆஸ்ரமத்துக்கு குசிக புத்ரனான கவுசிகன் வருவதில் இருந்து தொடங்குவோம். கவுசிகன்தான் விஸ்வாமித்திரராய் பின் பெயர் பெற்றவர். அவர் வேட்டைக்கு வந்த இடத்தில் ஒரு மானைத் தேடிக்கொண்டு வரப்போய் வசிஷ்டரின் ஆஸ்ரமம் கண்ணில் படுகிறது.
வழக்கமான ஆஸ்ரமங்கள் காய்ந்த வைக்கோலால் வேயப்பட்டு சுற்றிலும் பூச்செடிகள் இருக்க மான்களும் மயில்களும் சகஜமாக கண்ணில் படும். சில தடாகங்களில் அன்னப்பட்சிகள் கண்ணில் படும். மரங்களில் கிளிக்கூட்டம், கனிக்கூட்டம் மலர்க்கூட்டம் என்று எல்லாமே எண்ணிக்கைக்கு அடங்காததாக இருக்கும்.
வசிஷ்டரின் ஆஸ்ரமம் இதை எல்லாம் கடந்து சுகந்தப்புகை வாசத்தோடு நெய் மணமும் கமழக் கிடந்தது. உள்ளே கால் வைத்த மாத்திரத்தில் விஸ்வாமித்திரரின் வேட்டைக் களைப்பு காணாமல் போய், சொர்க்கத்துக்குள் பிரவேசித்த மாதிரி இருந்தது.
வசிஷ்டரும் தன்னை மறந்து வேள்வியில் மூழ்கியிருக்க ஆஸ்ரமத்து வட பாகத்தில் பொன் கொண்டு வேய்ந்தது போல ஒரு மண்டபம். அதனுள்ளே காமதேனுவாகிய நந்தினிப்பசு கம்பீரமாக காட்சி தந்தது. அதன் தோற்றம் விஸ்வாமித்திரரை அசர வைத்தது.
'' அடேயப்பா.... ! என்ன ஒரு வெண்மை! பெரிய கரிய விழிகள்- விடைந்த காதுகள், பூரித்த திமில், மதர்த்த உடல், செழித்த பால்மடு, இளம்சிவப்பில் காலடிக்குளம்புகள்...!'' விஸ்வாமித்திரரால் நந்தினியின் மேல் வைத்த பார்வையை எடுக்க முடியவில்லை. அப்போது வசிஷ்டாஸ்ரம வாசி ஒருவன் அதன் முன் வந்து வணங்கியவனாக, ''தாயே! பூஜை நிமித்தம் பாலும் தேனும் வேண்டும்'' என்று கேட்ட மாத்திரத்தில் இரு குடங்களில் அவை இரண்டும் அதன் முன் தோன்ற அதை எடுத்துச் சென்றான். பின்னாலேயே வந்த இன்னொருவன் ''தாயே! ஹோமத்தில் இட சந்தனமும் நெய்யும் வேண்டும்,'' என்றிட அவைகளும் வேகமாய் முன் தோன்றின.
சில பெண்களும் வந்தனர். அதை வலம் வந்து வணங்கிய நிலையில் இந்திர லோகத்து பாரிஜாதத்தையும், பாற்கடல் நீரையும், கங்கை நீரையும், அபிஷேக நிமித்தம் வேண்ட அவை எல்லாமும் தோன்றின!
இது என்ன மாயம்?
இந்த பசு கேட்டதை எல்லாம் தருகிறதே என்று வியந்திருந்த கவுசிகன் அருகில் வந்தார் வசிஷ்டர். அவரை மன்னன் எனும் செருக்கோடு ஊருடுவினார் விஸ்வாமித்திரர். வசிஷ்டரும் ஊருடுவினார்.
' என்ன முனிவர்பிரானே...! நான் யாரென்று தெரியவில்லையா?'
''இக்கேள்விக்கு பதிலாக உன்னை நீ அறிமுகம் செய்து கொண்டிருக்கலாமே கவுசிகா...''
''பலே... என்னைத் தெரிந்திருக்கிறதே...''
''ஒரு பிரம்ம ரிஷியிடம் கேட்கக் கூடாத கேள்வி இது. அதிலு<ம் இது நந்தினியாகிய காமதேனு உள்ள லட்சுமி விலாசமான இடம்...''
''உண்மைதான்... அந்த நந்தினிப் பசுவிடம் அப்படி என்ன விசேஷம்?''
பாற்கடல் அமிர்தக் கடைவின் போது பரிசாய் வந்தவைகளில் இதுவும் ஒன்று. இன்று இந்த ஆஸ்ரமத்தையும் இங்கு நடக்கும் கேள்விகளையும் காத்து வருகிறது. இங்கே ஒரு சிறுதீய சக்தியும் பிரவேசிக்க முடியாது. தேவசக்திகள் உட்புகுந்தாலே வெளியேற மனம் வராது. மொத்தத்தில் பூஉலகில் ஒரு கயிலாயமாகவும் வைகுண்டமாகவும் சத்யலோகமாகவும் ஸ்ரீபுரமாகவும் அமரபுரமாகவும் இந்த இடம் விளங்குகிறது என்றால் மிகையில்லை.
''ஆஹா அற்புதம்! அதனால் தான் என் களைப்பு பறந்தோடியதா?
''அதிலென்ன சந்தேகம்? இந்த தெய்வீகச் சூழலில் இளைப்பாறும் பாக்கியம் உனக்கு உள்ளது.
அதனால்தான் இங்கு உன்னால் நுழைய முடிந்தது...''
''அது சரி.. இந்த பசுவிடம் இன்னும் என்ன விசேஷங்கள் உள்ளன?''
''மனித மனதின் அவ்வளவு விருப்பங்களையும் நிறைவேற்றித் தரும் ஆற்ற<லுடையது இது. இதை வேள்விக்காக மட்டும் பயன்படுத்துகிறோம். இது போக இங்குவருவோர் பசியாறவும் இது எனக்கு கை கொடுக்கிறது''.
''ஓ! உணவைக் கூட தருமா?''
''எதற்கு கேள்வி... விருந்துண்ணத் தயாராகு,'' வசிஷ்டர் சொன்ன மாத்திரத்தில் முல்லைப்பூ போல் அன்னத்தில் தொடங்கி, அப்பம், வடை, துவையல், பாயசம், அதிரசம், பதினாறு வகை காய்கறிகள், ஏழு வகை கனிவகைகள், ஆறுவகை பலகாரங்கள், சித்ரான்னங்கள் என்று ஒரு அணிவகுப்பே நடத்திவிட்டது நந்தினி.
விஸ்வாமித்திரர் மூர்ச்சிக்காத குறை. கூடவே அது தன்வசம் இருந்தால் எப்படி இருக்கும் என்கிற எண்ணம்.
அந்த விருப்பம் உடனே வெளிப்பட்டது.
''முனிவர் பிரானே.... இப்படி ஒரு சக்திவாய்ந்த அதிசயம், ஒரு நாட்டை ஆளும் மன்னனிடம் அல்லவா இருக்க வேண்டும்? துறவியான உங்களுக்கு எதற்கு?'' என்று கேட்கவும், வசிஷ்டருக்கு விஸ்வாமித்திரரின் உள்நோக்கம் புரிந்துவிட்டது.
''மன்னா! அளவோடு ஆசைப்படு,'' என்றார்.
''அன்னத்திற்கும் ஆசைப்படும் க்ஷத்திரியன் நான். இந்த உலகம் எனது ஒரு குடையின் கீழ் சுழலவேண்டும் என்பது என் நிலை. அதற்கு இந்த நந்தினி உதவும்போல் தெரிகிறதே?''
''அதை உன் சுய எத்தனத்தால் அடையப்பார். நந்தினி தெய்வீகத்துணை. எனது வேள்விப்பாடுகளுக்கு மட்டும் அது பயன்படும்''.
''உங்கள் வேள்விக்கு துணை செய்ய பத்தாயிரம் பசுக்களை தானமாக தருகிறேன். அவைகளை பராமரிக்க ஒரு கூட்டத்தையும் தருகிறேன்,''.
''அதைவிட கோடிப் பசுக்களை நந்தினி தருவாள். எதற்கு உன் பத்தாயிரம்?''
''ஒரு அரசனுக்கான பதில் இது வல்லவே?''
''ஆண்டிக்கு அனைவரும் ஒன்று தான் மன்னா!''
''என் பலம் தெரியாமல் பேசுகிறீர்கள் நீங்கள்''.
''வேண்டாம் மன்னா... இது வேள்விக் கூடம். இங்கே பேராசைப் பேச்சு வேண்டாம். நந்தினிப் பிரசாதத்தை ருசித்து உண்டுவிட்டு வந்த வழியே போய்க் கொண்டேயிரு''.
வசிஷ்டரின் பதில் விஸ்வாமித்திரர் வரையில், ஒரு பெரும் போருக்கே வழி வகுத்து விட்டது. நாடு திரும்பின கவுசிகன் பெரும்படையை அனுப்பி நந்தினியைப் பிடித்து வர பணித்தான். ஆனால், அதுவோ தன்னுள் இருந்து பல்கவர், திராவிடர், சகர், யவ்வனர், சபரர், பவுண்டார், கிராதர், ஸிம்ஹலர், கசர், சிபுகர், புளிந்தர், சீனர், ஹீணர், கந்தர்வர் என்று சகல இன மாந்தர்களையும் பெரும்வீரர்களாக அனுப்பி, விஸ்வாமித்திர படையை விரட்டி அடித்து துவம்சம் செய்துவிட்டது.
இறுதியாக நந்தினியை கைப்பற்ற வந்த கவுசிகனாகிய விஸ்வாமித்திரரும் தன் ரதம் முதல் கதாயுதம் வரை சகலத்தையும் இழந்து நிராயுத பாணியாக நின்றார்.
வசிஷ்டரும் பெரும் கோபத்துடன் பேசலானார்.
''ஏ க்ஷத்ரிய துர்புத்திக்காரனே! உன் புஜபலத்தால் படை பலத்தால் அற்பமானிடர்களை வெற்றி கொள்ளலாம். தேவசக்தியிடம் உன்னால் துரும்பைக் கூட கிள்ளிப் போட முடியாது. நந்தினி க்ஷத்ரிய பலத்துக்கு வசப்படாது. தபோ பலத்துக்கே அன்பு காட்டும். புலன்களின் பிடியில் சிக்கி அதனால் அலைக்கழிப்படும் க்ஷத்ரியனே புலனடக்கமும் தவமும் தான் பெரும் பலம். ஆனால், உனக்கு அது சாத்தியமே இல்லை என்பதை புரிந்து கொள். இந்த தோல்வி உன்னை மனிதனாக்கட்டும்,'' என்றார்.
விஸ்வாமித்திரரிடம் வசிஷ்டரின் கருத்தால் பெரும் மனமாற்றம்.
''வசிஷ்டரே! உங்கள் வாயால் என்னை பிரம்மரிஷி என்ற சொல்ல வைப்பேன். க்ஷத்ரியனானாலும் புலன்களை ஒடுக்கிக் காட்ட முடியும் என்பதை நிரூபிப்பேன்,'' என்ற விஸ்வாமித்திரர் அடுத்த நொடியே வைராக்கியத்தோடு தவத்தில் இறங்கி விட்டார்.
- தொடரும்
இந்திரா சவுந்தரராஜன்