sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் (15)

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் (15)

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் (15)

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் (15)


ADDED : ஜூலை 29, 2013 05:08 PM

Google News

ADDED : ஜூலை 29, 2013 05:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒவ்வொரு அரசராக வந்தார்கள். அவர்களில் வில்லைக் கூட சிலரால் தூக்கிப்பிடிக்க முடியவில்லை! கித்தாப்பாக துரியோதனன் வந்தான். வில்லைப் பிடித்து நாணைக் கூட மீட்டிவிட்டான் ஆனால், அம்பு இலக்கைத் தாக்காமல் பின்னே சென்று தாக்கியது. அதைப் பார்த்து அவையும் சிரித்தது. கூடவே திரவுபதியும் சிரித்தாள்.

இறுதியாக எல்லோராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கர்ணன் வந்தான்.

அர்ஜுனனுக்கு இணையானவன் என்று கருதப்பட்ட கர்ணன், வந்த விதமும் சரி, வில்லை எடுத்து நாணைப் பூட்டிய விதமும் சரி! துருபதனையே அது வியக்க வைத்தது. ஒருவேளை கர்ணன் வென்று விடுவானோ என்றுகூட நினைக்கத் தோன்றியது.

ஆனால், அவன் இலக்கும் தவறியது. அதேவேளையில் பிராமண வேஷத்தில் தவுமியரோடு வந்து ஒரு ஓரமாக நின்று சுயம்வரப் போட்டியைப் பார்த்தபடி இருந்த பாண்டவர்களில் அர்ஜுனனின் கைகள் பரபரத்தது. அப்போது தர்மரும் பீமனும் தவுமியரிடம், ''அர்ஜுனனுக்கு இந்த சுயம்வரத்தில் பங்கு கொள்ள அனுமதி உண்டா? என்று திருஷ்டத்துய்மனிடம் கேளுங்கள்,'' என்றனர்.

தவுமியரும் முன் சென்றார். மான்தோலால் ஆடை அணிந்த பிராமண கோலத்தோடு முன் வந்த அவர் திருஷ்டத்துய்மா... இந்த சுயம்வரத்தில் க்ஷத்திரியர்களுக்கு மட்டும் தான் பங்கா? என் போன்ற பிராமணர்களுக்கு இடம் கிடையாதா?'' என்று ஆரம்பித்தார். தவுமியருடைய கேள்வி அந்த மொத்த அவையையே ஆச்சரியப்படுத்திவிட்டது. தொடர்ந்து பலர் முகத்தில் கேலிப் புன்னகை சிலர் வாய்விட்டும் சிரித்தனர்.

ஏன் சிரிக்கிறீர்கள்? என்று கோபித்தார் தவுமியர்.

''இல்லை! ஆயகலை அறுபத்து நான்கையும் கற்ற க்ஷத்திரிய வீரர்களே கலகலத்துப் போய் நிற்கும் இந்த இடத்தில், வேதம்படித்து யோகத்தில் அமரவேண்டியவருக்கு இப்படி ஒரு ஆசையா என்று எண்ணினோம் அதுதான் சிரிப்பு வந்துவிட்டது,'' என்றார் ஒரு அரசர்.

''இந்த வியாக்யானமெல்லாம் தேவையில்லை! இந்த சுயம்வரம் க்ஷத்திரியர்களுக்கு மட்டுமா! இல்லை எல்லோருக்குமா? ஆணித்தரமாக கேட்டார் தவுமியர். அடுத்த நொடியே திருஷ்டத்துய்மன் துருபதனை பார்த்தான். துருபதனும் தன் ஆசனத்தில் இருந்து எழுந்தவனாக எனக்குத் தேவை இந்த வில்லில் நாணேற்றி குறியை வீழ்த்த முடிந்த ஒரு பராக்கிரமசாலி. அவர் யாராகவும் இருக்கலாம்,'' என்றான்.

''அப்படியானால் எனது சீடன் இந்த போட்டியில் பங்கேற்கலாமா?'' தவுமியர் கேட்க அர்ஜுனன் முன்வர அவையிடம் ஒரு அசாத்ய அமைதி. பிராமண வேடத்தில் அச்சு அசலாக மாறியிருந்த அர்ஜுனனை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. போட்டி மீண்டும் தொடங்கியது. அர்ஜுனன் அவைப் பிரவேசம் செய்து வில்லருகே வந்து நின்ற கோலமே திரவுபதியை பெரிதும் கவர்ந்துவிட்டது.

அர்ஜுனன் வில்லை எடுத்தான். நாணை ஏற்றினான். பார்வை கீழே ஜலத்தாரையைப் பார்த்து மேலே சுழலும் பொறியில் உள்ள கிளிக்கு குறிவைத்தன. அவையிடம் அமைதியான அமைதி. திரவுபதி துடிக்கும் இதயத்தோடு அந்தக் காட்சியைப்பார்த்திட அர்ஜுன பாணத்தால் கிளி பொம்மை தாக்கப்பட்டு விழுந்தது.

அவையில் வீரத்தை மெச்சும் நல்ல குணமுடையார் அடுத்த க்ஷணம் கைதட்டி ஆர்பரித்தனர். அதேசமயம் துரியோதனன், சகுனி, சல்லியன், ஜயத்ரதன் உள்ளிட்ட அவ்வளவு பேரிடமும் பெரும் திகைப்பு ஆத்திரம்....

ஒரு பிராமணனிடம் இப்படி ஒரு வீரமா? என்கிற அந்த திகைப்பு. அவர்களுக்கு மட்டுமல்ல.... துருபதனுக்கும் தான். ஆனாலும் ஒரு பராக்ரமசாலிதான் தேவை என்று அறிவித்திருந்ததால் திரவுபதி அர்ஜுனனுக்கு மாலையிடுவதையோ, அவன் மனைவியாளாக அவள் மாறியதையோ தடுக்க முடியவில்லை.

பாரதத்தின் இந்த சுயம்வரம் பற்றி எல்லோரும் தெரிந்திருக்கலாம். ஆனால் இதைத் தொடர்ந்து அர்ஜுனனுக்கு மாலையிட்ட திரவுபதி இதன்பின் பாண்டவர்கள் ஐவருக்கும் எப்படி மனைவியாகிறாள் என்பதுதான் நுட்பமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.

சுயம்வரப் பரிசாக அடைந்த திரவுபதியை தங்களோடு அழைத்துக் கொண்டு தாங்கள் தங்கியுள்ள குயவனுடைய குடிசைக்கு திரும்புகின்றனர் பாண்டவர்கள். அவர்களை திருஷ்டத்துய்மன் ஒருபுறமும் கிருஷ்ணனும் பலராமனும் கூட மறுபுறம் பின் தொடர்கிறார்கள்.

குடிசைவாசலில் திரவுபதியோடு அர்ஜுனன் பீமன் நகுல சகாதேவர்கள் நின்றுவிட தர்மர் மட்டும் உள் செல்கிறார். குந்தியிடம் திரவுபதி பற்றிக் கூறி அவளாலேயே திரவுபதியை குடிசைக்குள் அழைக்க வேண்டும் என்பது அவர் எண்ணம்.

தர்மரை பார்த்த குந்தி, ''வந்துவீட்டீர்களா... எங்கே மற்ற பிள்ளைகள்?'' என்று கேட்கிறாள்.

''ஒரு அபூர்வமான பிக்ஷையோடு வந்திருக்கிறோம் அம்மா. அந்த பிட்சையோடு அவர்கள் வெளியில் நிற்கிறார்கள்,'' என்கிறார் தர்மர்.

''அபூர்வமான பிக்ஷையா? எதுவாக இருந்தால் என்ன? ஒற்றுமையாக நீங்கள் அதை புசிப்பதுதான் உத்தமம். எங்கே அந்த பிட்சை?'' என்று குந்தி கேட்க, அர்ஜுனன் திரவுபதியுடன் குடிசைக்குள் நுழைகிறான். குந்தியும் அந்த அழகியைப் பார்த்து பூரித்துப் போகிறாள். அவள் கைகளை வாஞ்சனையுடன் பற்றியபடி, ''இந்த பேரழகியையா பிக்ஷை என்றீர்கள் இவளை

பிக்ஷையிட்டது யார்?'' என்றும் கேட்கிறாள்.

''அம்மா! இவள் திரவுபதி! பாஞ்சால நாட்டு இளவரசி. இவளை அர்ஜுனன் சுயம்வரத்தில் வெற்றி கொண்டுள்ளான் என்று தர்மர் கூறிட அங்கே தான் திரவுபதிக்கும் தான் மாலையிட்டது அர்ஜுனனுக்கு என்பது தெரிய வருகிறது.

அதேசமயம் குந்தியிடம் அதிர்ச்சி. காரணம் கேட்கிறார் தர்மர்.

''இவளை நேரில் பார்க்காமல் நீங்கள் ஐந்து பேரும் பிக்ஷை உணவை பிரித்து உண்பது போல் உண்ணுங்கள் என்று கூறிவிட்டேன் அதை எண்ணியே கலங்குகிறேன்''.

''அதனால் என்ன... அறியாமல் கூறியது எப்படி பிழையாகும்? பிழையாகிவிடக் கூடாது என்பதே என் எண்ணமும் கூட... இந்த பிராமணவேடம் தற்காப்புக்கு போட்டுக் கொள்ளப்பட்டது என்ற போதிலும் அந்த அனுஷ்டானங்களில் தான் இப்போது நாம் உள்ளோம். இந்த நிலையில் வெளியே இருந்து கொண்டு வரப்படுவதை பங்கிட்டுத் தருவதே என் கடமை. தர்மா! நீயும் என்னிடம் இவளை பிட்சை என்றே குறிப்பிட்டாய்.

பிட்சை என்றாலே அது ஐவருக்குமானதுதான். நீயும் பிட்சை என்றாய். நானும் பகிர்ந்து உண்ணுங்கள் என்று கூறிவிட்டேன். இங்கோ அப்படி நடந்து கொள்ள இடமில்லாத ஒரு நிலை! தர்மா! உன் வார்த்தை.. என் வார்த்தை என்று இரண்டும் பொய்யாவது தவறுதானே! அப்படி ஒரு தவறு இவள் வந்த நேரத்தில் நடந்துவிட்டதும் பெரியதவறு தானே! குந்தி பெரிதும் கலங்கிடும் போது அங்கே கிருஷ்ண பலராமர்களின் விஜயம் நடக்கிறது!

-தொடரும்

இந்திரா சவுந்தரராஜன்






      Dinamalar
      Follow us