ADDED : ஆக 21, 2013 12:26 PM

மவுத்கல்ய ரிஷி என்ற பெயரைக் கேட்ட அனைவரும் வியாசரை ஆச்சரியத்துடன் பார்த்தனர். வியாசரும் தொடர்ந்தார்.
''இந்த மவுத்கல்ய ரிஷி கர்மவினையின் காரணமாக தொழுநோய்க்கு ஆளாகியிருந்தார். அவரின் அருகே சென்றால் துர்நாற்றம் வீசும். இருந்தாலும், நளாயினி கணவருக்கு பணிவிடை செய்து வந்தாள். குறிப்பாக, கணவர் போஜனம் செய்தபின், அவனது எச்சில் இலையில் மனைவி சாப்பிடுவது தான் கற்புடைய பெண்டிர் செயல்.
நளாயினியும் அவ்வாறே செய்தாள். ஒருமுறை, அவ்வாறு சாப்பிடும்போது மவுத்கல்யரின் அழுகிய சுண்டுவிரல், இலையில் உதிர்ந்து விட்டது. அதைக் கண்ட நளாயினி கண்ணீர் சிந்தினாள்.
அவளின் பதிபக்தியைக் கண்ட மவுத்கல்யர், ''நளாயினி... என் மேல் கொண்ட பாசத்தை எண்ணி வியக்கிறேன். உன் போல் ஒரு பெண்ணை எங்கு தேடினாலும் காண முடியாது. முனிவனான எனக்கு, இது கர்ம வினையால் வந்த பரிசு. நான் இதை அனுபவிக்க விரும்பியே இவ்வாறு உள்ளேன். நீயும் என்னோடு கஷ்டப்படுவதை அனுமதிக்க முடியாது. உனக்கு விருப்பமான வரத்தைக் கேள்,''என்றார்.
அவளோ, ''எப்போதும் நான் உம்மை நீங்கக் கூடாது. ஐந்து பூதங்களின் சேர்க்கை தானே இந்த உடல். இதன் நசிவால் தானே உங்களுக்கும் இந்தப்பாடு? நீங்களோ, கர்மத்தை அனுபவித்து தீர்க்க விரும்புவதாக கூறுகிறீர்கள். உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள். அதே சமயம் ஒரு பத்தினியாக உங்கள் தேகத்துக்கு சுகமளிக்கக் கடமைப்பட்டவளாவேன். பஞ்சபூதங்களால் ஆன உங்களின் இந்த உடம்பின் பஞ்ச பாகங்களுக்கும் நான் சேவை செய்து சுகமளிக்கவும் விரும்புகிறேன்,'' என்றாள்.
மவுத்கல்யரிஷியும் அந்த வரத்தை உடனே தந்தார். அதன் பின் அவர் பல வடிவங்களை எடுத்தார். அவர் மரமான போது நளாயினி அதில் படரும் கொடியானாள். மலையான போது அருவியாகமாறி ஓடினாள்.
ஒரு கட்டத்தில் மவுத்கல்யருக்கு காமத்தில் சலிப்பு வந்தது. நளாயினிக்கோ இன்பமே பெரிதாகத் தோன்றியது. அதனால், அவர் கோபம் கொண்டார்.
''நளாயினி... இனி நான் உன்னோடு மவுத்கல்யனாக கூட மாட்டேன். காம நெருப்பால் விரகத்தில் இருக்கும் நீ, நெருப்பிலேயே மறு பிறப்பெடுக்கும் காலம் வரும். அப்போது ஐம்பூத பிரதிநிதிகள் போல, ஐவர் உன்னை அடைவார்கள். என்னால் கிடைக்காமல் போன இன்பம், அப்போது கிடைக்கட்டும்,'' என்று கூறிச் சென்று விட்டார்.
நளாயினியும் வருத்தத்துடன் சிவனைக் குறித்து பஞ்சாக்னியின் மத்தியில் தவமிருந்தாள்.
சிவன் அவள் முன் தோன்றி ,''இஷ்டமான வரத்தைக் கேள்'' என்றார். அப்போது நளாயினி,'' உத்தமமான பதியை அடையவேண்டும். அந்த பதி நிகரில்லாத வீரபதியாக, விவேகபதியாக, தர்மபதியாக, பலசாலி பதியாக, ஞானியான பதியாக விளங்க வேண்டும்,'' என்று கேட்டாள்.
''அவ்வாறே அருளினோம்,'' என்றார் சங்கரனும்.
''அதாவது ஐந்து பதிகளைக் கேட்டாய். அளித்து விட்டேன்,'' என்ற பிறகே திரவுபதிக்கு வரத்தை கவனமாக கேட்க வேண்டும் என்ற தெளிவு ஏற்பட்டது. அதேசமயம், ஐவரோடு எப்படி கற்புக்கரசியாக வாழ முடியும் என்ற கேள்வியும் எழுந்தது.
அந்த நாளில் பதிவிரதா தர்மம் எது என்பதை நன்கு வரையறை செய்திருந்தனர்.
அதாவது ஒரு பெண்ணானவள், ஒரு ஆடவனைத் தான் கூடலாம். அதே சமயம், அவனால் புத்திரபாக்கியம் இல்லாமல் போனால், அந்த ஆடவனின் அனுமதியோடு புத்திர பாக்கியத்திற்காக இன்னொருவனுடன் கூடலாம். இதை மீறி மூன்றாவதாக ஒருவனுடன் ஒருத்தி சேர்ந்தால் அது பாவம். ஆயினும், பிராயச்சித்தம் செய்து கொள்ளலாம். இதையும் மீறி, நான்காவது ஆடவனோடு
ஒருத்தி சேர்ந்தால், அவள் பதிதையாகிறாள். அதுவே ஐந்தாகும்போது விபசாரியாகிறாள்.
மேற்கண்ட விதிப்படி, திரவுபதி விபசாரியாக ஆகிவிடும் ஆபத்து இருப்பதை உணர்ந்து சிவனிடம், ''இதனால் நான் விபசாரியாக வாழும் ஆபத்து உள்ளதே,'' என்றாள்.
சிவனோ, ''நீ ஒருவனை மனதில் நினைத்துக் கொண்டு, ஐந்து முறை கோரியதால் தான், ஐந்து கணவர்கள் என்ற வரசித்தி உண்டானது. என்னால் வரமாக அளிக்கப்பட்டதால் அவப்பெயர் எதுவும் உண்டாகாது,'' என்றார்.
இதற்கு பதிலளித்த திரவுபதி, ''அப்படியானால் மகிழ்ச்சியே. அதே சமயம் ஐவருக்கும் நான் கன்னியாகி அவர்களோடு கூடிட எனக்கு அருள வேண்டும் என்று கேட்க, சிவனும் அருள்புரிந்தார்.
''அந்த ஐவரே பஞ்ச பாண்டவர்கள். அவரிடம் வரம் பெற்ற நளாயினியே இப்போது திரவுபதி. இவளை உலகைப் பெண்டிரோடு பொருத்திப் பார்க்கத் தேவையில்லை. தீயில் பிறந்த இவளை எவராலும் களங்கப்படுத்த முடியாது. ஆனால், இவள் நினைத்தால், எவருடைய களங்கத்தையும் போக்க முடியும்,'' என்று முடித்தார் வியாசர்.
வியாசரின் இந்த விளக்கத்துக்கு பிறகே, துருபதனுக்கு தெளிவு பிறந்தது. பாண்டவர்களும் மனஅமைதி பெற்றனர். அதன்பின், துருபதனும் முதல்நாளில் தர்மபுத்திரருக்கும், மறுநாள் அர்ஜூனனுக்கும் என்று ஒவ்வொருநாளும் பாண்டவருக்கு திரவுபதியை மணம் முடித்தான். இந்த விஷயம் பாஞ்சால தேசம் முழுதும் பரவியது. பாஞ்சாலி, நளாயினியின் மறுபிறப்பு என்பதை அறிந்த மக்கள் அவளை வணங்கினர்.
துருபதனும் குதிரைகள் பூட்டிய நூறு ரதங்களையும், அம்பாரிகளோடு கூடிய நூறு யானைகள், நகைகள், நவரத்தினங்கள், தாதியர்களை அளித்து மகிழ்ந்தான்.
கிருஷ்ணன் அள்ளக் குறையாத நிதியைப் பரிசாகத் தந்தான். அவற்றை தர்மபுத்திரர் மகிழ்வோடு ஏற்றுக் கொண்டார். இனியும் பிராமண வேடம் தேவையில்லை என்று வேடத்தைத் துறந்தார். பாண்டவர்கள் தங்கள் தேசத்து மாப்பிள்ளையாகி விட்டதற்காக, பாஞ்சால தேசமே மகிழ்ந்தது. எங்கும் கொண்டாட்டம்! எல்லாரிடமும் உற்சாகம்!
அதே சமயம் பாண்டவர்கள் உயிரோடு இருப்பதும், திரவுபதியை மணந்த செய்தியும் துரியோதனனுக்கும், திருதராஷ்டிரனுக்கும் தெரிய வந்தது.
திருதராஷ்டிரன் விதுரரிடம்,'' இப்போது தான் எனக்கு மகிழ்ச்சி! பாண்டவர்கள் அரக்கு மாளிகை நெருப்பில் இறந்து விட்ட துக்கத்தில் இருந்தேன். அது நீங்கியது,'' என்றார்.
ஆனால், துரியோதனன் புழுபோல துடித்திட, சகுனியும் அதை அதிகப்படுத்தினான். கர்ணனும் இவ்வேளையில், ''பாண்டவர்களைச் சும்மா விடக்கூடாது,'' என்றான்.
ஆனால்,சோமதத்தன் என்பவன்,''இந்த அவசரம் கூடாது.... .அரக்கு மாளிகை நெருப்பாலேயே விழுங்கப்பட முடியாத பாண்டவர்களை போரில் வெல்வது சாத்தியமில்லை,'' என்றான்.
- தொடரும்
இந்திரா சவுந்தரராஜன்