sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் (20)

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் (20)

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் (20)

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் (20)


ADDED : செப் 03, 2013 02:16 PM

Google News

ADDED : செப் 03, 2013 02:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாண்டவர்கள் இந்திரபிரஸ்த நகரை உருவாக்கி, அரசாட்சியை தொடங்கும் சமயத்தில் நாரதர் அவர்களைச் சந்திக்கிறார்!

நாரதர் பிரம்மாவின் மானசபுத்திரர். நாராயண மந்திரத்துடன் எல்லா உலகங்களையும் சுற்றி வருபவர். இவருக்கு மட்டுமே தேவர்களின் கதவும் திறந்தது, அசுரர்களின் கதவும் திறந்தது. இரு சார்புக்கும் பொதுவானவராக திகழ்ந்திட்ட இவரது செயல் யாவும் நன்மையில் தான் முடிந்தன. இவரைக் கலகக்காரராக நினைப்பதும் பேசுவதும் பிழையாகும். ஒரு ரதம் போல நாற்புறமும் சென்றுவர முடிந்தவர் என்பதாலேயே நாரதர் எனப்பட்டார் என்பர்.

அப்படிப்பட்டவர் பாண்டவர்களைக் காண வருகிறார் என்ற உடனேயே, இந்திரபிரஸ்தமே அவரை எதிர்கொண்டு வரவேற்க தயாராகி விட்டது. துந்துபி வாத்தியம் முழங்க, பட்டத்து யானை மாலையிட நாரதர் வரவேற்கப்பட்டார். தர்மர் அவர் எதிரில் அமர்ந்து பேசுவது கூட மரியாதைக் குறைவு என்று நின்றபடியே பேசினார். பாஞ்சாலி அவரை வணங்கிச் சென்றாள். அவளைக் கண்ட நாரதருக்குள் ஒரு சிந்தனை! அதை தர்மர் கவனித்து விட்டார்.

''மகரிஷி.... என்ன யோசனை?'' என்றும் கேட்டார்.

'' ஐந்து பேருக்கு ஒருத்தி பத்தினியாக திகழ்வதென்பது அசாத்தியமான விஷயம். பாஞ்சாலியின் கற்பின் சக்தியை நான் அறிவேன். நீங்களும் அறிந்து ஒற்றுமையாக வாழ வேண்டும். வாழ்வீர்களென்றும் நம்புகிறேன்,'' என்றார் நாரதர்.

''மகரிஷி... உங்கள் நம்பிக்கை பொய்யாகாது. நாங்கள் உருவத்தில் தான் ஐவர். உள்ளத்தால் ஒருவரே! எங்களுக்குள் ஒருக்காலும் பிணக்கு ஏற்படாது.''

''அதையும் அறிவேன். ஆனால், விதி வசத்தால் நீங்கள் பிரிய நேரிட்டால் அதனால் வரும் பாதிப்பு உங்களை விட பாஞ்சாலிக்குத் தான் அதிகம்! அதேசமயம் ஐவருக்கும் அவள் தாயாக இருந்து உணவிடலாம். தோழியாக இருந்து உதவிடலாம்! மந்திரியாக இருந்து ஆலோசனை கூறலாம். ஆனால், மனைவியாக ஒரே நேரத்தில் இருப்பது சாத்தியமில்லையே...?''

-நாரதர் கேட்ட கேள்வி அவர்களை சிந்திக்க வைத்தது.

''உண்மை தான்..'' என்றார் தர்மர். கூடவே ஒரு பெருமூச்சு!

''இதற்கு தீர்வினை எப்படி காணப் போகிறீர்கள்?''

''நல்ல கேள்வி.. சரியான தீர்வை நாங்கள் கண்டாக வேண்டியதும் அவசியமே...''

''அப்படிக் காண்பதில் தான் உங்கள் எதிர்காலம் உள்ளது. இவ்வேளையில் உங்களுக்கு நான் 'சுந்தோப சுந்தர்' என்னும் இரு அசுரர்கள் பற்றி கூற விரும்புகிறேன்''

''மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் அந்த அசுரர்கள் பற்றிச் சொல்வது நாங்கள் ஒற்றுமையாக இருக்க உதவும் என்றே நான் கருதுகிறேன்.''

''ஆம்.... நீங்கள் இப்போது ஒற்றுமையாகத் தான் உள்ளீர்கள். ஆனால், இரண்யகசிபுவின் பரம்பரையில், அவன் புதல்வனான நிகும்பனின் புத்திரர்களான சுந்தோப சுந்தர் போல ஒற்றுமையாக திகழ்ந்தவர்கள் எங்கும் இல்லை என்பது தான் உண்மை!''

'' அப்படியா?''

''கருத்துடன் கேளுங்கள். சுந்தோப சுந்தர் என்று பெயரிலும் இருவரும் ஒன்றுபட்டிருந்தனர். அதாவது இந்த பெயர் இருவருக்கும் பொதுவானது. தனித்தனியே ஒரு பெயர் கிடையாது. ஆனால், நீங்கள் தனித்தனி பெயரைக் கொண்டுள்ளீர்கள் என்றால்.. உங்களை விட அவர்கள் தானே ஒற்றுமையானவர்கள்...?''

நாரதரின் இந்தக் கேள்வி கேட்டு, பாண்டவர்கள் புருவங்களை விரித்தனர்.

''இருவருக்கும் ஒரே எண்ணம். ஒரே ஆசை. ஒரே இலையில் தான் சாப்பாடு. ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொள்வார்கள். அவ்வளவு பாசம்!''

''அசுரர்களுக்கு எதையும் அடக்கமாக வைத்திருக்க முடியாது. அதனால், தங்களின் ஒற்றுமையை வெளிக்காட்டிய படி இருந்துள்ளனர்,'' என்றான் அர்ஜூனன்.

அதைக் கேட்டு சிரித்த நாரதர்,'' இப்படிப் பட்டவர்கள் எப்படி பிரிந்தார்கள் என்பது தான் அறிய வேண்டிய விஷயம்,'' என்றார்.

''இவ்வளவு ஒற்றுமையாக இருந்தவர்களா பிரிந்தனர்?''

''பிரிந்தது மட்டுமல்ல.. ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு உயிரையும் விட்டனர்''.

''நம்ப முடியவில்லையே... அப்படி என்ன தான் நடந்தது?''

''இப்படி நம்ப முடியாத விசித்திரம் நிறைந்தது தான் வாழ்வு!''

''மகரிஷி.. அவர்கள் எப்படி உயிரை விட்டனர் என்று முதலில் கூறுங்கள்''

''அருமைப் பாண்டவர்களே! அந்த சுந்தோபசுந்தர் இருவருக்கும் சாகா வரம் வேண்டும் என்பது தான் நோக்கமாக இருந்தது. இமயம் சென்று தவத்தில் ஆழ்ந்தனர். தவத்தின் நெருப்பு பிரம்மாவின் சத்யலோகத்தைச் சுட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்...''

''பிறகு?''

''பிறகென்ன..? வரமளிக்க பிரம்மாவும் தயாராகி விட்டார்! அதே சமயம் சாகா வரத்தை அளிக்க முடியாது. ஆனால், அதற்கு இணையாக வேறு வரத்தை பெற்றுக் கொள்ளச் சொன்னார்...''

''இணையான வேறு வரமா... அது என்ன?''

''சுந்தோப சுந்தர் இருவரும் நெடுநேரம் சிந்தித்தபின், தாங்கள் இருவர் உயிரும் தங்களில் ஒருவராலன்றி வேறு எவராலும், எதனாலும், எக்காலத்திலும் பிரியக் கூடாது என்று கேட்டனர்.''

''சுந்தோப சுந்தர் புத்திசாலிகள்!''

''வரம் பெறவும் அவர்களுக்கு மமதை தலைக்கேறியது. எங்கெல்லாம் யாகம் நடக்கிறதோ, அங்கெல்லாம் முனிவர்களைக் கொல்லத் தொடங்கினர். முனிவர்கள் பயந்து பிரம்மாவிடம் சென்று வருந்தினர். அவர் படைப்புக்கு தளபதியான விஸ்வகர்மாவை அழைத்தார்...''

''அழைத்து...?''

''உலகிலேயே இவளை விட ஒரு அழகி இல்லை என்று கூறும் விதத்தில் ஒரு பெண்ணைப் படைக்க கட்டளையிட்டார். அவரும் உருவாக்க பிரம்மாவும் அதை கண்டு சொக்கிப் போனார். அதற்கு உயிரும் தந்தார்...''

''பிரம்மனே சொக்கும் ஒரு அழகியா?''

'' பிரம்மா மட்டுமல்ல. மகாலட்சுமியும் கூட அவள் நடந்து வந்த அழகைப் பார்த்து பொறாமைப்பட நேர்ந்து விட்டது...''

''அடேயப்பா... அப்படி ஒரு அழகா?''

''ஆம்.. அழகென்றால் அழகு....அப்படி ஒரு அழகு...! லட்சுமியையே அந்த அழகு ஆட்டி வைக்கவும் தான், விஸ்வகர்மாவுக்கே தான் பரீட்சையில் தேறி விட்டோம் என்று தோன்றியது... தானியங்களில் மிகச் சிறிய எள். அதை 'திலம்' என்பர். அந்த திலமளவுக்குக் கூட அவளிடம் பழுதில்லை. அதனால், என் தந்தை பிரம்மாவும் 'திலோத்தமை' என்று பெயரிட்டார்!''

திலோத்தமை என்ற பெயரைக் கேட்டதும் பாண்டவர்களிடம் பெருவியப்பு!

சரி...! அந்த திலோத்தமை என்ன செய்தாள்?

- தொடரும்

இந்திரா சவுந்தரராஜன்






      Dinamalar
      Follow us