sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் (23)

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் (23)

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் (23)

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் (23)


ADDED : செப் 24, 2013 01:02 PM

Google News

ADDED : செப் 24, 2013 01:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திரவுபதியும் சிவபெருமானிடம் பெற்றிருந்த வரசித்தியின்படி, பாண்டவர்கள் ஐவரோடும் தனித்தனியே வாசம் செய்து, முதலில் தர்மருக்கு என்று ஒரு பிள்ளையை பெற்றுத் தந்தாள். அவனது பெயர் பிரதிவிந்தியன். 'விந்திய மலைக்கு ஒப்பானவன்' என்பது பொருள். பின், பீமசேனனுடன் வாழ்ந்து 'சுதசோமன்' என்னும் பிள்ளையை பெற்றாள். 'சந்திர சூரியருக்கு ஒப்பானவன்' என்பது பொருள். இப்படி ஒருபிள்ளை வேண்டி, பீமனும் சோமரசம் பிழிந்து யக்ஞம் செய்திருந்தான்.

மூன்றாவதாக அர்ஜூனனுக்கு 'சுருதகர்மா' என்னும் பிள்ளையைப் பெற்றாள். 'தீர்த்தயாத்திரை செய்து அதன் பயனால் பெற்ற பிள்ளை' என்பது பொருள். அடுத்து நகுலனோடு வாழ்ந்து, 'சதானீகன்' என்னும் புத்திரனைப் பெற்றெடுத்தாள். சதானீகர் என்றொரு ராஜரிஷி, கவுரவ வம்சத்தில் வந்த ஒரு மகாத்மாவாக வாழ்ந்தவர். எனவே, தன் பிள்ளைக்கு அவர் பெயரை வைத்த நகுலன், தன் பிள்ளையும் ஒரு மகாத்மாவாக எல்லோராலும் போற்றப்பட வேண்டும் என்று விரும்பினான்.

இறுதியாக சகாதேவன்! இவனுக்கென சுருதசேனன் என்னும் மகவைப் பெற்றாள். அக்னி தேவதையின் திருநட்சத்திரமான கிருத்திகையில் பிறந்த காரணத்தால், அக்னி போல பிரகாசமாக திகழ வேண்டி 'சுருத' என்னும் பதமும், சேனை போல பலத்துடன் திகழ வேண்டி 'சேனன்' என்பதும் சேர்த்து வைக்கப்பட்டது.

திரவுபதியின் இந்த பிள்ளைகள் ஆண்டிற்கு ஒருவராக பிறந்தனர். ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையே ஒரு வயது வித்தியாசம் இருந்தது. இவர்களுக்கு தவும்யர், குருவாக இருந்தார்.

நாட்கள் வேகமாக நகர்ந்தன. தர்மபுத்திரர், காண்டவ பிரஸ்தம் என்னும் இந்திர பிரஸ்தத்தை ஆட்சி செய்தார். ஒருநாள் சபைக்கு நாரத முனிவர் வந்தார். அவரை கர்ம சிரத்தையாக வரவேற்றார் தர்மர். உபசாரங்கள் முடிந்தன. விசாரிப்புகள் ஆரம்பமாயின.

தர்மபுத்திரரோடு அர்ஜூனன் உள்ளிட்ட சகோதரர்கள் ஒருபுறமும் அவர்களோடு குந்தி, திரவுபதி, சுபத்ரை உள்ளிட்டோரும் இருக்க நாரதர் அவர்களோடு உரையாடினார்.

''நாரதரே! நீங்கள் சர்வலோக சஞ்சாரி. ஆனால், நாங்களோ பூலோக வாசிகள். உங்கள் வாயிலாக மற்ற லோகங்களை அறிய விரும்புகிறோம்'' என்றார் தர்மர்.

நாரதரும் இந்திரனுடைய அமரலோகமும் இந்திர சபையினது சிறப்பையும் கூறத் தொடங்கினார்.

'தர்மா! இந்திரனது சபை நூறுயோஜனை அகலமும், நூற்றைம்பது யோஜனை நீளமும், ஐந்து யோஜனை உயரமும் கொண்டது. இங்கு யாருக்கும் மூப்பு, துன்பம், களைப்பு, அச்சம் ஏற்படாது. இங்கே தான் கற்பக விருட்சம் முதல், ஐராவதம் வரை எல்லாம் இருக்கின்றன.

இந்திரன் இங்கே சசி, மகேந்திராணி, ஸ்ரீலட்சுமி, ஹரி, கீர்த்தி, காந்தி என்னும் பெண்களுடன் சபையில் வீற்றிருக்கிறான். இவர்களோடு பராசரர், பர்வதர், ஸாவர்ணி, காலவர், ஏகதர், த்விதர், த்ரிதர், சங்கர், லிகிதர், கவுசிரஸ் முனிவர், துர்வாசர், ச்யேனர், தீர்க்கதமஸ், பவித்ரபாணி, ஸரவர்ணி, யாக்ஞவல்கியர், பாலுகி, உத்தாலகர், சுவேத கேது, தாண்டர், பாண்டாயினி, ஹவிஷ்மான், கரிஷ்டர், அரிச்சந்திரன், ஹ்ருத்யர், உதர சாண்டில்யர், வியாசர், க்ரூஷிவலர், வாதங்கந்தர், விசாகர், விதாதா, காலர், காராலதந்தர், த்வஷ்டா, விஸ்வகர்மா, தும்புரு ஆகிய கர்ப்பத்தில் பிறந்த மற்றும் பிறவாதவர்கள் உள்ளனர். இவர்களோடு வால்மீகி, சமீகர், பரசேதஸ், மேதாநிதி, பரமதேவர், புலஸ்தியர், புலஹர், க்ரது, மருத்தர், மரீசி போன்றோரும் இருக்க, 27 நட்சத்திரங்கள், இந்திராக்னிகள், தருணன், யக்ஞ புருஷர்கள் ஆகியவர்களும் உள்ளனர். ரம்பை, ஊர்வசி, மேனகை, க்ருதாசி, பஞ்சசூடை, விப்ரசித்தி முதலான அப்சர கன்னியரும், வித்யாதரர்கள், கந்தர்வர்கள் என்று இந்திர சபையே ஒரு கோலாகல சபையாகும். இங்கே பிருகுவும், சப்தரிஷிகளும் நினைத்த மாத்திரத்தில் வந்து போவர். இந்திர சபைக்கு புஷ்கரமாலினி என்றும் பெயருண்டு' என்று கூறி முடித்தார்.

''அடேயப்பா!.... எத்தனை சான்றோர்கள்... ஒருமுறையாவது இந்திர சபைக்கு சென்று அத்தனை பேரிடமும் ஆசி பெற வேண்டும்'' என்றான் சகாதேவன்.

''தம்பி! உன் நினைப்பு மகத்தானது' என்றார் தர்மர்.

'சகாதேவா.. அடுத்து யமலோகம் பற்றி கூறுகிறேன். அச்சப்படாமல் கேள்...'' என்ற பீடிகையோடு தொடங்கினார் நாரதர்.

''இந்த எமசபை விஸ்வகர்மாவினால் செய்யப்பட்டது. நூறு யோஜனை நீள அகல<ம் கொண்டது. இங்கே தண்ணீருக்கு இணையாக வெந்நீர் இருப்பதை அறிவாயாக! இங்கு யயாதி, நகுஷன், பூரு, மாந்தாதா, சோமகன், நருகன், திரசதஸ்யு என்னும் ராஜரிஷி இவர்களுடன் கிருதவீர்யன், சுருதஸ்வரன், அரிஷ்டநேமி, சித்தன், கிருதவேகன், கிருதி, நிமி, ப்ரதர்த்தனன், சிபி, அம்பரீசன், பகீரதன் ஆகியவர்களோடு, மத்ஸ்ய ராஜர்கள் நூறுபேர், திரதராஷ்டிரர்கள் நூறுபேர், ஹயர்கள் நூறுபேர், ஜன்மேஜயர்கள் எண்பது பேர், பிரம்மதத்தர்கள், வீரிகள், ஈரிகள் நூறு நூறு பேர், இது போக நாணல், தர்பை இவைகளுக்கும் எமலோகத்தில் தான் மதிப்பான இடம். இங்கே பொய்யே கிடையாது.

எமசபைக்கு தெற்கில் தான், யமகிங்கரர்களாலான தண்டனைக் கூடம் உள்ளது. இங்கே தான் பாவிகளுக்கான யாதனா சரீரம் என்னும் 'அழிக்க அழிக்க மீண்டும் உருவாகும் சரீரங்களும்' உள்ளன. இதனுள் பாவிகளின் ஆத்மாக்களை புகுத்தி, அவற்றை வலிக்குள்ளாக்கி, பின் வலிமைக்கு மாற்றுவதே எமனின் திவ்ய நோக்கம்,'' என்று எமசபையைப் பற்றி கூறிய நாரதர் மேலும்

தொடர்ந்தார்.

''எமசபை இந்திரசபைக்கு துளியும் குறைந்ததில்லை. இந்திர நிர்வாகம் போன்றதே எம நிர்வாகமும். இருவரும் பெருந்தேவர்களாக பூஜிக்கப்படுபவர்கள். தேவலோகத்து மாலைகள், எமலோகத்துக்குத் தான் சென்று சேரும். ரிஷிகளும், மகாமுனிவர்களும், நல்ல எண்ணம் உள்ளோர் அனைவரும் இருசபையையும் சமமாகவே கருதுவர்' என்றும் நாரதர் முடிக்க,

''வருணசபை எப்படிப்பட்டது?'' என்ற கேள்வியை எழுப்பினான் பீமன்.

''வருணனின் சபையும் எமசபை போல விஸ்தாரமானதே. இது நீருக்குள் அமைந்த சபை என்பதால் குளிர்ச்சியாக இருக்கும். வருணன் இங்கே வாருணி என்னும் தன் மனையாளுடன் வாசம் செய்கிறான். இங்கே நாகர்கள் அதிகம். வாசுகி, தக்ஷகன், ஐராவதன், கிருஷ்ணன், லோசிதன், பத்மன், மணிமான், கார்க்கோடன், தனஞ்ஜயன், மூஷிகாதன், ஜன்மேஜெயன் ஆகிய நாகர்கள் தத்தம் கொடிகள் பறக்க இங்கே உள்ளனர். இதுபோக தர்மார்த்த கர்மங்களுடன் அஷ்டவசுக்களும், கபிலமுனிவரும் இங்கே உள்ளனர்.

நாகராஜரான ஆதிசேஷனுக்கும் இங்கே தான் இடம். மேலும் பெயர் பெற்ற கங்கை, யமுனை, விதிசை, வேணை, நர்மதை, வேகவாகினி, விபாசை, சதத்ரு, சந்திரபாகா, சரஸ்வதி, இராவதி, விதஸ்தை போன்ற புண்ணிய நதிகளுடன் தேவநதிகளான சிந்து, கோதாவரி, கிருஷ்ணவேணி, காவேரி, கிம்புனை, விசல்யை, வைதரணி, த்ருதீயை, பரணி, ஜ்யேஷ்டிலை, மகாநதி, சரயு, வாராவதி, கோமதி நதிகளும், ஏனைய தீர்த்தங்கள், தடாகங்களும், ஜலஜந்துக்கள் அனைத்தும், தேக வடிவெடுத்து வருணனைத் தான் துதிக்கின்றன,'' - என்று வருணசபை பற்றியும் கூறி முடித்தார்.

அடுத்து குபேரசபை! ''இது நூறு யோஜனை நீளமும், எழுபது யோஜனை அகலமும் உடையது. வெண்மை நிறமுடையது. இது குபேரன் தன் தவத்தினால் சம்பாதித்தது. இங்கே யட்சர்கள் வைத்ததே சட்டம்! குபேரன் இங்கே ரித்தி என்னும் தன் மனைவியோடு வசிக்கிறான். இங்கேயும் நூற்றுக்கணக்கான யட்சர்கள் உள்ளனர். இவர்களுடன் கிம்புருஷர்க்கு அரசனான யட்சர்கள் உள்ளனர். இவர்களுடன் கிம்புருஷர்க்கு அரசனான மகேந்திரன், கந்தமாதனன் போன்றோரும் குபேரனை உபாசிக்கின்றனர். இங்கே தான் ராவண சகோதரனான, தர்மாத்மா விபீஷணரும் உள்ளார். குபேரசபைக்கு பிரதான சிறப்பே அவ்வளவு பர்வதங்களும் (மலைகள்) அதன் ராஜாதி ராஜாக்களும் குபேர சபையில் இருப்பது தான்.

நந்திகேஸ்வரர், மகாகாலன், காஷ்டன், குடீமுகன், தந்தி, விஜயன், தபோதிகன், சங்குகர்ணன் போன்ற சிவகணங்களும் குபேரனை அடுத்து வருகின்றனர்,'' என்று குபேர சபையைப் பற்றிக் கூறிய நாரதர் அடுத்து தனது தந்தையான பிரம்மதேவனைத் தொட்டு பிரம்ம சபையின் சிறப்பைக் கூறத் தொடங்கினார்.

- தொடரும்

இந்திரா சவுந்தரராஜன்






      Dinamalar
      Follow us