sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கிருஷ்ணஜாலம் - 2 (14)

/

கிருஷ்ணஜாலம் - 2 (14)

கிருஷ்ணஜாலம் - 2 (14)

கிருஷ்ணஜாலம் - 2 (14)


ADDED : ஜன 17, 2018 03:57 PM

Google News

ADDED : ஜன 17, 2018 03:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கர்ணன் குந்தி கேட்கப் போவதை தரத் தயாரானான்.

''கேளுங்கள் அம்மா...''

''நான் கேட்ட பிறகு, என்ன இப்படி கேட்டு விட்டேன் என தவறாக கருதக் கூடாது''

''இல்லை... கேளுங்கள்.''

''உனக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டால் நீ தர வேண்டாம்.''

''தாயே என்னிடம் யாசகம் கேட்கும் ஒரு நிலை என் வாழ்வில் வரும் என நான் கருதியதில்லை. இதை நான் எனக்கு கிடைத்த பாக்கியம் என்பேனா., இல்லை அவலம் என்பேனா.. தெரியவில்லை... எதுவாயினும் தாங்கள் கேட்பதை தர சித்தமாகி விட்டேன்...''

''நல்லது கர்ணா... நீ போர்க்களம் காணப் போகிறாயல்லவா?''

''அதிலென்ன சந்தேகம்?''

''அப்போது நீ பிரதானமாக எதிர்கொள்ளப் போவது.... அர்ஜூனனை தானே?''

''ஆம் அம்மா... நான் அர்ஜூனனை வீழ்த்தி, வெற்றி வாகை சூட வேண்டும் என்பதே துரியோதனின் விருப்பம்.''

''அப்படியானால் உங்களிடையே பாண பரிமாற்றம் மிக உக்கிரமாக இருக்கும் அல்லவா?''

''நிச்சயமாக..''

''அங்கே.. அங்கே தான் நீ எனக்கு ஒரு வரம் தர வேண்டும்''

''வரமா?''

''ஆம். நீ தவம் புரிந்து பெற்ற மகா சக்தி மிக்க நாகாஸ்திரத்தை, எக்காரணம் கொண்டும் ஒரு முறைக்கு மேல் பிரயோகிக்க கூடாது.''

''அம்மா....!''

''உன்னைத் தடுக்கும் சக்தியோ, தகுதியோ எனக்கில்லை. அதற்காக என் பிள்ளைகளை பலி கொடுத்திடும் தாயாக இருக்க விரும்பவில்லை... இந்நிலையில் அர்ஜூனனைக் காப்பாற்றிட எனக்கு இதை தவிர வேறு வழி தெரியவில்லை கர்ணா.''

கண்ணீரை உகுத்தபடி குந்தி பேசிய பேச்சு அப்படியே கர்ணனைக் கட்டிப் போட்டது. நெடுநேரம் பேச்சு வரவில்லை. ஆனாலும் குந்தியை நெருங்கி அவளது இரு கரங்களையும் பற்றித் தன் கண்களில் ஒற்றிக் கொண்டவனாய்,

''அம்மா.. உங்கள் பாசத்தை நான் புரிந்து கொண்டேன்'' என்று அவளை கூர்ந்து நோக்கியபடியே ''உங்கள் விருப்பப்படியே நடந்து கொள்கிறேனம்மா. எனது வலிமை மிக்க நாகாஸ்திரம் ஒருமுறைக்கு மேல் பாயாது. நாகாஸ்திரத்தை பொறுத்தவரை ஒரு முறையே அதிகம். அதற்கே போர்க்களம் பூண்டோடு கருகி விடும். அப்படியிருக்க எனக்கு இரண்டாம் முறை தேவையும் படாது.'' என்றவனை பெருகிய கண்ணீரோடு பார்த்தாள் குந்தி, ''கர்ணா... இதே போல் சில வரங்களை நான் அர்ஜூனனிடமும் உன் பொருட்டு பெறப் போகிறேனப்பா.'' என்றாள். அதை கேட்ட நொடி மிக வேகமாக பதைத்த கர்ணன், ''அம்மா உங்கள் காலில் விழுந்து கேட்டு கொள்கிறேன். தயவு செய்து அப்படி எதையும் என் பொருட்டு செய்து விடாதீர்கள். அர்ஜூனனுக்கு என் மேல் இருக்கும் கோபம் துளியும் குறையக் கூடாது. நீங்கள் எக்காரணம் கொண்டும் நான் உங்கள் மகன் என்கிற உண்மையை கூறக் கூடாது.

அவர்கள் என்னை எந்த அளவு அறிவார்களோ எனக்கு தெரியாது. ஆனால் நான் அவர்களை நன்கு அறிவேனம்மா. அதன் பின் எனக்காகவே அவர்கள் இந்த யுத்தத்தை தவிர்த்து விடுவர். அதுமட்டுமல்ல, எந்த நாட்டுக்காக இந்த யுத்தமோ அந்த நாடே எங்களுக்கு வேண்டாம் அதை துரியோதனனே வைத்துக் கொள்ளட்டும் என கூறி விடுவார்கள்.

நான் இப்போது ஒரு விஷயத்தை உளமாரக் கூறுகிறேன். போர்க்களத்தில் எனக்கு ஒரு முடிவு ஏற்பட்டால் அப்போது நீங்கள் என்னை உங்கள் பிள்ளை என்று கூறி வழியனுப்பி வையுங்கள். இது என் அன்பு வேண்டுகோளம்மா'' என்ற கர்ணனை இழுத்து அணைத்தாள் குந்தி.

''கர்ணா... என் செல்லமே! பொருளை அள்ளித் தருவதில் மட்டுமல்ல; அன்பு, பாசம், கருணை என சகலத்தையும் அள்ளித் தருவதில் நிகரற்றவனாக திகழ்கிறாய். உன்னைப் பூட்ட வந்த என்னை நீ பூட்டி விட்டாய்...'' என கண்ணீர் சிந்தினாள்.

''கிருஷ்ணன் என்னை சந்திக்க வந்த போதே உங்களுக்கான நல்ல காலம் தொடங்கியதை யூகித்தேன். இப்போது நான் அதை உறுதி செய்கிறேன்'' என்றான்.

''கர்ணா நல்ல காலம் என்று நீ எதை சொல்கிறாய்? என் பிள்ளைகளுக்கு போரில் கிடைக்கும் வெற்றியும், அதனால் கிடைக்கப் போகும் ராஜ்யத்தையும் வைத்தா...?'' என்று குந்தி விம்மலோடு கேட்டிட, கர்ணனும் மெல்லத் தலையசைத்து ஆமோதிக்க, குந்தி அந்த நிலையிலும் ஒரு சிரிப்பு சிரித்தாள்.

''கர்ணா... கண்களை விற்று யாராவது சித்திரம் வாங்குவார்களா? நீ இல்லாத இந்த நாடும், வாழ்வும் எப்படியப்பா எங்களுக்கு மகிழ்வு தரும். அது ஒரு வெற்றியா?''

''என்னம்மா செய்வது? பிறந்த நொடியே, விதி உங்களை என்னிடம் இருந்து பிரித்து விட்டது. ஒரு உயிருக்கு குழந்தை பருவமும், விடலை பருவமும் தான், தாயின் அருகாமையையும் பாசத்தையும் உணரக் கிடைக்கும் உன்னதமான காலங்கள்! அதுவே எனக்கில்லை என்றான நிலையில், எனக்கு வேறு எது பெரிதாகி விட முடியும்?''

''உண்மை தான்... ஆனாலும் கிருஷ்ணனின் மூலம் நமக்கொரு காலம் பிறந்திருப்பது உனக்கு தெரியவில்லையா? இவ்வளவு நாள் கானகத்தில் வாழாமலா போய் விட்டோம்? சொல்லப் போனால் நாட்டை விட காடு பல மடங்கு மேலானதாகவே இருந்தது. இந்த நாடும் மக்களும் துரியோதனனுக்கே சொந்தமாகட்டும், நீ என்னோடு வா... நாம் இனியாவது ஒன்றாக வாழலாம்.''

''உங்கள் பாசமும் அன்பும் இப்படித்தான் பேசுமென்று எனக்குத் தெரியும் தாயே... ஆனால் துரியோதனனை பிரிந்து வந்து உங்களோடு நான் இணக்கமாக வாழ முற்படுவது என்பது, இத்தனை நாட்கள் நான் வாழ்ந்த வாழ்க்கையை அர்த்தமற்றதாக்கி விடும். அவன் நல்லவனோ, கெட்டவனோ எனக்கான சோறு அவனாலேயே கிடைத்தது. தேரோட்டி மகன் என குறைத்து மதிப்பிட்டவர்களையும் வணங்கச் செய்து அரச பதவி தந்தவன். அவனை பிரிய நினைப்பது பாவமல்லவா?

நான் பெற்ற தாயிடம் வளராது போனேன். பிறப்பிலேயே இதனால் பெரும்பாவியும் ஆனேன். இனி துரியோதனனை பிரிந்து கொடும்பாவி ஆக வேண்டுமா?''

குந்தி விக்கித்து போனாள். அதற்கு மேல் அவளிடம் வார்த்தையில்லை. கர்ணன் அவள் முன் விஸ்வரூபமெடுத்து நின்றான். பிள்ளை என்றும் பாராமல் அவனை தொழ முற்பட்டவளின் கைகளை விலக்கி விட்ட கர்ணன், ''என்னை வணங்கி, தாயையே வணங்க செய்த பாவியென்று என்னை ஆக்கி விடாதீர்களம்மா... நல்லாசிகளை மட்டும் தந்து போய் வாருங்கள்'' என்றான் கர்ணன்.

- தொடரும்

இந்திரா சவுந்தரராஜன்






      Dinamalar
      Follow us