sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கிருஷ்ணஜாலம் - 2 (16)

/

கிருஷ்ணஜாலம் - 2 (16)

கிருஷ்ணஜாலம் - 2 (16)

கிருஷ்ணஜாலம் - 2 (16)


ADDED : பிப் 02, 2018 01:48 PM

Google News

ADDED : பிப் 02, 2018 01:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

யுத்தம் தொடங்கும் முன் ஹஸ்தினாபுரமும் உபப்லாவியமும் ஒரு தற்காலிகமான அமைதியில் இருப்பதை காண வந்திருந்தார் நாரதர். சர்வலோக சஞ்சாரியான அவருக்கு பகைவர் யாரும் கிடையாது. தேவர்கள் எவ்வளவு நெருக்கமோ அதற்கு குறைவில்லாதபடி அசுரர்களும் நெருக்கமே!

பிரம்மாவின் மானச புத்திரரான நாரதரை பகைத்துக் கொள்ள யாரும் விரும்பாதது தான் பிரதான காரணம். இத்தனைக்கும் இங்கிருப்பதை அங்கும், அங்கிருப்பதை இங்குமாய் சொல்லி பல கலகங்கள் பிறக்க காரணமானவர் இந்த நாரதர்.

பரவாயில்லை... நம் எதிரிகளுக்கு நம் சார்பில் செய்தி சொல்ல பொதுவான ஒருவர் வேண்டும் என எல்லோரும் நினைத்ததன் விளைவு, நாரதருக்கு எங்கும் வரவேற்பே கிட்டியது. எதிர்ப்பு என்பதும் இல்லை.

அப்படிப்பட்டவர் உபப்லாவியத்துக்குள் கிருஷ்ணனை காணவும் வந்தார்.

''நாராயண... நாராயண...''

''நான் இப்போது கிருஷ்ணன் நாரதா?''

''இது அவதாரம் தானே பிரபு. அதற்காக மூல மந்திரத்தை கைவிடலாமா?''

''ஓ நாராயண நாமம் மூல மந்திரம் கூடவா?''

''பிரபு... என்னை ஆழம் பார்க்காதீர்கள். இந்த நாமத்தின் பேரால் நான் உங்களிடம் நிறையவே பாடம் கற்று கொண்ட விட்டவன்.''

''சரி சரி வந்த விஷயத்தை கூறு..''

''தங்களால் கூட பாண்டவ, கவுரவ யுத்தத்தை தவிர்க்க முடியவில்லையே, அது தான் இப்போது எனக்குள் இருக்கும் பேராச்சர்யம்.''

''என்ன செய்வது.. என் சக்தி அவ்வளவு தான்!''

''இது தன்னடக்கமா.. இல்லை; யுத்தம் தான் தங்கள் ஆழ் மனதுக்கும் விருப்பமா?''

''சக்தியற்றவன் எங்களது யுத்தத்தை விரும்புவானா?''

''பிரபு.. என்னால் உங்களுடன் தர்க்கிக்க முடியாது. ஆனால் ஒன்று. நடக்கப் போவது யுத்தம் மட்டுமல்ல; அதனால் உலகம் பெரிதாக ஏதோ ஒன்றை அடையப்போகிறது என்பது மட்டும் நிச்சயம்.''

''ஆம்..! எது வீரம் என்பதற்கு இந்த யுத்தமே இலக்கணம் வகுக்கப்போகிறது. எது வாழ்வு என்பதற்கும் இந்த யுத்தம் விடையாக மாற உள்ளது. பேராசை, பழிஉணர்வு, பாசம், குரோதம், அடுத்து கெடுத்தல், விட்டு தருதல் என்று மனித வாழ்வின் சகல உணர்ச்சி நிலைகளுக்கு கூட இந்த யுத்தம் காலகாலத்துக்குமான பதிலாக போகிறது நாரதா.''

''இந்த பாடங்களுக்காக ஒரு மனித சமூகமே இரையாகப் போகிறதே.. அதைத்தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.''

''பெறப்போவது அழியாத பாடம்.. எனவே இழக்க போவதும் பெரிதாக தான் இருக்கும்.''

''இதில் தங்கள் பங்களிப்பு ஒரு பார்வையாளனைப் போன்றதா, இல்லை... நேர்மையாளனைப் போன்றதா?''

''ஒரு பார்வையாளனுக்கு காட்சி பெரிது. நேர்மையாளனுக்கோ அதன் விளைவுகளும் பெரிதல்லவா?''

''சரியாகச் சொன்னாய்.. நான் இரண்டும் கலந்தவனாய் தர்மஸ்தாபிதத்தை செய்ய இருக்கிறேன்.''

''என்றால் தர்மத்துக்கு பெரும் சோதனைகள் காத்திருப்பதை நான் இப்போதே யூகிக்கிறேன்.''

''சோதனையின் கொம்பை ஒடித்தால் தான் சாதனையே.. உனக்கு தெரியாதா என்ன?''

''ஆஹா.. இந்த சொற்களும் கூட கொம்போடும், கொம்பின்றியும் தானே உள்ளது.''

''பொருளைச் சுமந்து நிற்பவை தானே சொற்கள்? கிருஷ்ணன் என்றால் கரியவன் என்பதே பொருள். என் வண்ணமே என் பெயராகிவிட்டது போன்றது தான் நாரதா எல்லாமுமே...''

''பிரபு இதில் நான் உங்களுக்கு எங்காவது உதவ முடியுமா?''

''நீ பேசிக் கொண்டிருப்பது கூட ஒரு வகையில் எனக்கான உதவி தான் நாரதா..''

''எப்படி என்று என் சிற்றறிவுக்கு விளக்குவீர்களா?''

''உன் கேள்விகள் என் நோக்கை வரிசைப்படுத்துகின்றன. அதில் முதலில் செயல்படுத்த வேண்டியவை, அடுத்து செய்யப்பட வேண்டியவை என்று தீர்மானங்கள் உருவாகின்றன.''

''என்றால் முதலில் செயல்படுத்தப் போவது எதை?''

''அர்ஜுனனின் பாசப்பிணைப்புக்கு ஒரு அணை கட்ட வேண்டும்?''

''புரியவில்லையே...''

''சகலத்திலும் நல்ல பக்குவத்தை பெற்று விட்டவன், புத்திரன் விஷயத்தில் இளகி விடுகிறான்''

''அது ஒரு தவறா?''

''தவறோ, சரியோ... விளைவைப் பொறுத்தே அமைகின்றன''

''அப்படியானால் அர்ஜுனனின் பிள்ளைப் பாசம் ஏதேனும் தவறை உருவாக்கப் போகிறதா?''

''ஒரு மாவீரன் கோழையாவது சரியா தவறா?''

''அது எப்படி, ஒரு மாவீரன் கோழையாக முடியும்..?''

''பிள்ளைப் பாசம் ஆக்கி காட்டும்''

''அப்படியானால் அது தவறு தான்.. ஆனால் அது எப்படி என்று தான் தெரியவில்லை..''

''உனக்கு தெரியாது தான். தெரியவும் கூடாது. ஆனால் எனக்கு தெரியுமே..?''

''புரிகிறது.. நன்றாகப் புரிகிறது! அர்ஜுனன் அவன் பிள்ளைப் பாசத்தால் தன் வீரத்தை இழக்கும் சூழல் உருவாக போகிறது என்று கூறுங்கள்.''

''ஆம். அவனை இம்மட்டில் மீட்க வேண்டும்.''

''தாங்கள் விருப்பப்பட்டால் எது தான் நடக்காது? நடத்துங்கள் நாடகத்தை..''

''அந்த நாடகத்தில் இந்திரனுக்கும் உனக்கும் தான் பிரதான வேடம்..''

''நாராயண... உங்கள் நாடகத்தில் நான் ஒரு பாத்திரமா?''

''ஆம். பிரதான பாத்திரம்''

''நாராயண... எனக்கு நடிக்க வராதே?''

''நடிக்க தேவையே இல்லாத பாத்திரம் அது..''

''புரியும்படி கூறுங்கள்.. எனக்கு என்ன வேடம்? இந்திரனுக்கு என்ன வேடம்?''

நாரதர் சற்று பதட்டமாய் கேட்க, கிருஷ்ணன் முகத்தில் மர்மப்புன்னகை!

யுத்தத்திற்கு நாள் குறித்தாகி விட்டது.

சகுனியின் மகன் உலுாகன் தான் துாது வந்தான் ''நாளையே யுத்தம் தொடங்கலாம் என்று எங்கள் அரசர் துரியோதனர் தீர்மானித்து விட்டார். நீங்களும் தயாராக இருங்கள். அதைக் கூறவே வந்தேன்'' என்றான்.

உலுாகன் சொன்ன விதம் சகாதேவனுக்கு பெரும் கோபத்தை உருவாக்கியது.

''அடேய் குட்டிச் சகுனி! இந்தப்போரின் ஆதிமூலமே உன் அப்பன் தான்... இப்போது உன் மூலம் அதை உறுதியும் செய்கிறான்! நீ பரிதாபத்துக்குரியவன்... நீ எங்களிடம் கூறியது போருக்கான நாளை மட்டுல்ல... உன் மரண நாளும், இந்த போர் நடக்கும் நாளில் ஒரு நாளில் தான்.. இது தெரியாமல் வந்து தேதியை சொல்கிறாயா... போ, போய் நாங்கள் தயார் என்பதைச் சொல். இன்று, இப்போது என்றாலும் எங்களுக்கு அச்சமோ, பயமோ கிடையாது. திருஷ்டத்துய்மன் தான் எங்கள் சேனாதிபதி! இதையும் சேர்த்து போய்ச் சொல்'' என்றான்.

உலுாகனும் முறைத்தபடியே திரும்பிச் சென்றான். மறுபுறத்தில் அர்ஜுனன் ஆழ்ந்த யோக நித்திரையில் இருந்தான்.

இந்திரலோகத்தில் பலவித வித்தைகள் கற்ற சமயத்தில் ஒரு பெரும் சம்பவத்தில் பங்கு கொள்ளும் முன், யோக நித்திரை புரிவது உடம்பின் எல்லா பாகங்களுக்கும் புத்துணர்ச்சியை தரும் என்று யோகாதிபர் கற்பித்திருந்தார். அதனால் தான் அர்ஜுனனின் யோக நித்திரை!

ஆற்றோரமாய் தீர்த்தமாடிய நிலையில் அவன் யோகத்தில் இருந்த சமயம், அவன் யோகத்தை கலைக்கும் விதமாய் ஒரு பெரும் அழுகுரலும் புலம்பல் சத்தமும் அவன் காதில் விழத் தொடங்கின. எவ்வளவு முயன்றும் மனதை ஒருமைப்படுத்த முடியாமல் கண்களைத் திறந்தவன் எதிரில் சிதைமேல் ஒரு சடலம். அதன்முன் கண்ணீர் விட்டு அரற்றிக் கொண்டிருந்தார் ஒரு வயதான் பிராமணர்!

- தொடரும்

இந்திரா சவுந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us