ADDED : பிப் 02, 2018 01:46 PM

அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு உபத்திரவம் செய்யும் மகனை அப்பா இப்படி கடிந்து கொண்டார்.
'போன வாரம் தான் ஐநுாறு ரூபாய் கொடுத்தேன். மீண்டும் இப்ப கேக்குறியே... என்னை 'பணம் காய்க்கும் மரம்' என்று நினைத்து விட்டாயா
பலரின் இல்லங்களில் பெரியவர்கள் இப்படி பேசுவதை கேட்டிருக்கலாம்.
பணம் காய்க்கும் மரம் ஏதும் இருக்கிறதா என ஆராய்ந்தால் திருக்குறளில் இதற்கான பதில் ஒன்று உள்ளது.
திருவள்ளுவர் கூறுகின்றார்.
'முயற்சி திருவினை ஆக்கும்!'
அப்படி என்றால் என்ன பொருள். தொடர் முயற்சி ஒருவனை செல்வந்தன் ஆக்கும். பணம் காய்க்கும் மரமாக அவன் மாறுவான் என்பது தானே அர்த்தம்.
மேலும் ஒரு குறளில் இதை அழுத்தம் திருத்தமாக கூறுகின்றார்.
'ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை'
தடைகள் பல வந்தாலும் அவை அனைத்தையும் தாங்கிக் கொண்டு, தகர்த்தெறிந்து எவன் ஒருவன் தொடர்ந்து முயற்சியில் ஈடுபடுகின்றானோ அவனுடைய முகவரியை அறிந்து அவன் வீட்டிற்கே செல்வம் வரும் என்பது தான் மேற்கண்ட குறளின் பொருளாகும்.
ஆம்!
முயற்சிகளால் முன்னேறி கொண்டிருப்பவர்கள் கட்டாயம் இப்படி பாடலாம்.
'காசுமேல காசுவந்து கொட்டுகிற நேரம் இது!
வாசக் கதவை ராசலட்சுமி தட்டுகிற நேரம் இது!'
புகழ் பெற்ற பொன்மொழி ஒன்றை அறிந்திருப்பீர்களே!
'மனிதனை உழைப்பு ஒருபோதும் ஏமாற்றுவதில்லை!
மனிதன் தான் உழைப்பை ஏமாற்றுகிறான்'
சரித்திரம் படைத்த சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறை படித்து பாருங்கள்.
ஊக்கத்தை எந்த நிலையிலும் கைவிடாத உழைப்பே, அவர்களை எல்லாம் உச்சியில் உட்கார வைத்திருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
அவர்களில் பெரும்பான்மையோர் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர்கள் இல்லை.
படிப்பிலும் பல பட்டங்கள் பெற்றவர்கள் இல்லை. இருந்த போதிலும் அவர்களுக்குள் அடங்கியிருக்கும் தனித்திறமையை இனம் கண்டு, அதைக் கொண்டு அல்லும் பகலும் உழைத்தே உருவானவர்கள்.
எக்ஸ்- ரே கதிர்வீச்சு சாதனைக்காக நோபல் பரிசு பெற்றவர் மேடம் மேரி க்யூரி. வாழ்வில் உயர நினைப்பவர்களுக்கு, இவரது வாழ்க்கை ஒரு உன்னத பாடம்.
பிரான்சில் கோடீஸ்வரர் ஒருவரது மாளிகையில் பணிப்பெண்ணாக வேலை செய்தவர் மேரி க்யூரி.
அக்கறையுடன் வீட்டுக் குழந்தைகளை பேணியும், அன்றாட பணிகளை செய்தும் வந்த மேரியின் மீது காதல் கொண்டான் கோடீஸ்வரரின் மகன்.
பஞ்சும், நெருப்பும் பற்றிக் கொள்ள விடுவாரா அந்த பணக்காரர்?
'வேலைக்காரி நீயா என் மாளிகையில் மருமகளாக வலம் வர திட்டம் போட்டிருக்கிறாய்?' என்று திட்டித் தீர்த்தார். அவமானப்படுத்தினார்.
மாளிகையை விட்டு வெளிவந்த க்யூரி,
முன்னேற வேண்டும் என்ற தீர்மானத்தோடு பாரீஸ் நகரம் சென்றாள்.
அவளது அடி மனதில் ஓடிக் கொண்டிருந்த விஞ்ஞான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டாள்.
உலகமே மெச்சும் விதமாக, யுரேனிய எக்ஸ்ரே கதிர்வீச்சு கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றாள்.
செல்வந்தரின் மகனை ஒரு சீமாட்டியாகவே சென்று கரம் கோர்க்க வைத்தது அவளின் கண் அயராத உழைப்பு.
'எந்த வேர்வைக்கும்
வெற்றிகள் வேர் வைக்குமே - உன்னை
உள்ளத்தில் ஊர் வைக்குமே!'
என்று பாடுகிறார் காவிய கவிஞர் வாலி.
தமிழக முதல்வராக இருந்த அண்ணாத்துரையை கல்லுாரி ஆண்டு விழாஒன்றுக்கு தலைமை ஏற்க அழைந்திருந்தனர். அவரின் அற்புதமான பேச்சை கேட்டு மாணவர்கள் மகிழ்ந்தனர்.
ஒரு மாணவன் ஓடி வந்து, 'ஐயா... தங்கள் கையெழுத்தை வேண்டுகிறேன்' என்று சொன்னபடி ஆட்டோகிராப் புத்தகத்தை நீட்டினான்.
கையெழுத்திட்ட முதல்வர், ''தம்பி... உன்னிடம் நான் வந்து ஆட்டோகிராப் கேட்கும் வண்ணம் நீ உன் வாழ்வில் உயர வேண்டும் அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.
பிரமுகர்களின் கையெழுத்தை பெறுவதோடு நிற்காமல், பிரபலங்களாக உயர முயல வேண்டும். மலை ஒன்றை பார்க்கும்போது நமக்கெல்லாம் பிரமிப்பு ஏற்படுகின்றது. மலைக்க வைப்பதால் தான் அதற்கு 'மலை' என்றே பெயர் சூட்டியிருக்கின்றனர். வியந்தபடி, விழிகளால் பார்த்துக் கொண்டிருக்காமல் 'விறுவிறு' என்று விடாமுயற்சியால் ஏறி உச்சியை அடைந்தால் என்ன நடக்கிறது?
எதைக் கண்டு கண்களை அகல விரித்தோமோ அதே மலை நம் கால்களுக்கு கீழ் அல்லவா காட்சியளிக்கிறது. இதை தான் நம் சங்கப்பாடல் 'உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ' என பாராட்டி புகழ்கிறது.
'ஜேம்ஸ் ஆலன்'என்ற மன இயல் அறிஞர் கூறுகின்றார்.
'அரிய செயலை செய்து முடிப்பது வலிமையால் அல்ல; விடாமுயற்சியால் தான்....!
அரும்பும் வியர்வை தான், விரும்பும் உயர்வைத் தரும் என்று அறிந்து கொள்வோம்!
தொடரும்
அலைபேசி: 98411 69590
- திருப்புகழ் மதிவண்ணன்