ADDED : பிப் 27, 2018 09:52 AM

கிருஷ்ணன் தன் வழக்கமான புன்னகையோடு,''சகாதேவா.. நாளையா நீ நேரம் குறித்து தந்தாய்?'' என கேட்டான்.
''ஆம்... நாழிகை புள்ளிகளை கணக்கிட்டு கொடுத்துள்ளேன். அநத நேரத்தில் தான் அவர்கள் சங்கை முழக்கி களம் வந்து நிற்க வேண்டும்.''
சகாதேவன் பதில், கிருஷ்ணனை மீண்டும் சிரிக்க வைத்தது.
''கிருஷ்ணா நீ சிரிப்பதில் ஏதோ ரகசியம் இருப்பது தெரிகிறது'' என்றான் அர்ஜூனன்.
''என்ன என்று சொல்லேன் பார்க்கலாம்'' என்றான் கிருஷ்ணனும்.
''சகாதேவன் கொடுத்த நேரத்தை துரியோதனன் நம்ப மாட்டான். எனவே அந்த நேரத்தை மதித்து அதில் போர் செய்ய முன்வரமாட்டான் என்று நான் கருதுகிறேன்.
சரிதானே?''
''அர்ஜூனா... உனக்கு என் மனசு வசமாகி விட்டது. அதனால் தான் இவ்வளவு சரியாக கூறுகிறாய்...!''
''அப்படியானால் அவன் எந்த நேரத்தில் களம் காண்பான்?''
''சகாதேவன் குறித்த நேரமே சரியானது. போர்க்களத்தில் அந்த நேரத்தில் இறங்கினாலே வெற்றி உண்டாகும். எனவே நாம் அந்த நேரத்தை விட வேண்டாம். நாம் எப்போது களம் காண்கிறோம் என்பதை வைத்தே துரியோதனனும் பலி கொடுப்பது முதல் களம் காண்பது வரை சகலத்தையும் செய்வான்...'' கிருஷ்ணன் பதில் கேட்ட பீமனுக்குள் ஒரு சலனம்.
''கிருஷ்ணா..''
''சொல் பீமா..''
''நேரத்தில் என்ன இருக்கிறது? அதை நாம் தானே வரையறை செய்கிறோம்? பொதுவில் எல்லா நாட்களும் ஒன்று போல தானே இருக்கின்றன? காலையில் உதிக்கும் சூரியன் மாலையில் அஸ்தமிக்கிறான். இதனால் இரவு பகல் என இரு பொழுதுகள். இதில் நல்ல நேரம், கெட்ட நேரம் எப்படி உருவாக முடியும். நாம் சிறப்பாக செயல்படும் நேரம் எல்லாமே நல்ல நேரம் தானே?''
பீமன் கேட்ட கேள்வி கிருஷ்ணனை மட்டுமல்ல மற்றவர்களையும் ஆச்சரியப்படுத்தியது.
'' அண்ணா... அசுரர்கள் கூட இப்படி கேள்வி கேட்டதில்லை. தங்களுக்கு எதனால் இப்படி ஒரு சந்தேகம்'' என சகாதேவன் கேட்டான்.
''சகாதேவா... நீயும் கேள்வி கேட்காதே... சரியான பதில் அளித்தால் தான் நீ காலஞானி என்பது பொருந்தும்'' என்றான் கிருஷ்ணன்.
''கிருஷ்ணா... இது என்ன விளையாட்டு? பீமன் காலத்தின் வடிவத்தைச் சொல்லி கேட்ட கேள்விக்கு நான் எப்படி பதில் கூற முடியும்? இரவு, பகல் - அதில் காலை மதியம் மாலை என்பதெல்லாம் பொழுதுகள். பார்க்க முடிந்த கண்களுக்கு இது ஒரு வடிவம். ஆனால் செயல் என்பது நம் சிந்தையில் உருவாகும் ஒன்று. சுருக்கமாக சொன்னால் பொழுதுகள் ஒளி என்றால் சிந்தை ஒலியாகும். ஒலியால் உருவாகும் விளைவுக்கு ஒளியைத் தொட்டு எப்படி பதில் கூறுவது?'' சகாதேவன் கேள்வி கிருஷ்ணனை சற்று வியக்க வைத்தது.
''பலே சகாதேவா... ஒளி, ஒலி என்று நீ பகுத்துணர்ந்து சொல்வதை நான் ரசிக்கிறேன். அதே சமயம் இரண்டுக்கும் தொடர்பு இருப்பதை மறுக்க மாட்டாய். ஏனென்றால் ஒளியை உணர முடியாத ஒரு குருடனால் எதை பெரிதாக செய்ய முடியும்?
அன்றாடப்பாட்டுக்கே அவதிப்பட்டாக வேண்டும். அப்படி இருக்க, பார்க்க முடிந்தவர்களால் மட்டுமே வேகமாக செயல்பட முடியும் என்பது தானேஉண்மை?''
''ஆம் கிருஷ்ணா...''
''என்றால் சிந்தை சிறப்பாக, வேகமாக செயலாற்ற காலம் புலனாக வேண்டும்தானே?''
''நிச்சயமாக...''
''அப்படி புலனாகும் காலத்தில் எக்காலம் நற்காலம்... எக்காலம் அதற்கு எதிரான காலம் என்று கூறுவது தானே ஜோதிடம்..?''
''ஆமாம்..''
''என்றால் எதை வைத்து ஒரு காலத்தை நல்ல காலம் என்கிறோம் என்று நீ அறிந்த ஜோதிடம் மூலம் பதில் கூறலாமே?''
''நற்காலம் என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடும். என் ராசிக்கு பொருந்தும் காலம் இன்னொருவருக்கு பொருந்தாமல் போகலாம். ஆகையால் தனி மனிதனுக்குரிய நற்காலம் என்பது வேறு... பொதுவான நற்காலம் என்பது வேறு...''
''அந்த பொதுவான காலம் எப்படிப்பட்டது என கூறு..''
''சூரிய, சந்திரரையும் ஏனைய கோள்களையும் வைத்து இக்கோள்களின் கதிர் வீச்சுக்கு எப்போதும் உள்ளாகி கிடக்கும் பூமியில் உயிர்த்துடிப்பு என்பது, மனித மனம் முதல் சகல ஜீவராசிகள் முதல் வரை பெருகும் காலம் நற்காலம்... பெருகாது அருகினாலோ இல்லை குறுகினாலோ அது அதற்கு எதிரான காலம் ஆகும்.''
''இது பொது விளக்கம். பீமனுக்கு புரியாது. நுட்பமாக கூறு..''
''ஒரு செயல் என்பது ஒரு தனிமனிதன் முனைப்பு சார்ந்தது மட்டுமல்ல; பஞ்சபூத தொடர்புடையது. பஞ்சபூதங்களை கோள்ககளின் வழியாக பர பிரம்மமே இயக்குகிறது. எனவே தன்முனைப்பு என்பது ஐம்பது சதவிகிதம், புறத்தே உள்ள பஞ்சபூத கோள்களின் வழியான ஒத்துழைப்பு என்பது ஐம்பது சதவிகிதம். இந்த இரண்டும் சேர்ந்தாலே செயல்பாடு முழுமை பெறும். இதை 'காலமறிந்து செயல்படுதல்' என்பர். அந்த வகையில் சூரிய,சந்திரரோடு சுபகிரக சேர்க்கை மற்றும் அசுப கிரகங்களின் நீச்ச கதி போன்றவையே வெற்றிக்கு காரணமாகின்றன.'' சகாதேவன் தான் அறிந்த ஜோதிட ஞானத்தை பீமனுக்காக போதிக்க, அது மற்றவர்களுக்கும் காலஞானத்தை தந்தது.
கிருஷ்ணனும் புன்னகையுடன், ''என்ன பீமா... புரிந்ததா?'' என கேட்க பீமன், ''புரிந்தது போலவும் புரியாதது போலவும் உள்ளது'' என்றான்.
''இது தான் சரியான பதில். காலகதியை ஒருவரால் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் அது நில்லாமல் நடப்பது... ஒரு விஷயத்தை யோசிக்க தொடங்கும் போது ஒரு புள்ளியில் இருப்போம், யோசித்து முடித்து முடிவெடுக்கும் போது வேறு புள்ளியில் இருப்போம், செயல்படுத்தும் போது இன்னொரு புள்ளி... எனவே எவராலும் முற்றாக காலஞானத்தை அடைய முடியாது. அடைய வேண்டுமென்றால் காலகதியின் வேகத்தோடு இயைந்து ஓடத்தெரிய வேண்டும். அந்த வேகம் சரியானதாகவும் இருக்க வேண்டும். '' என்றான் கிருஷ்ணன்.
''கிருஷ்ணா.. யுத்தம் குறித்த இந்த வேளையில் இந்த விளக்கம் தேவை தானா?'' என்று கேட்டான் தர்மன்.
''அவசியம் தர்மா...கால ஞானம் பெற்ற சகாதேவன் இருந்தும் ஒரு செயலை நீங்கள் யோசித்து செய்யவில்லை. அப்படி கருதியிருந்தால் சூதாட தொடங்கியதில் இருந்து, இப்போது யுத்தத்திற்கு நாள் குறிப்பது வரை மிக கவனமாக இருந்திருப்பீர்கள். சகாதேவனின் கால ஞானம் பிறருக்கு பயன்பட்ட அளவு உங்களுக்கு பயன்படவில்லை என்பது தானே உண்மை.''
''ஆம் மைத்துனா... நீ கூறுவது உண்மை. இனி நாங்கள் அவ்வாறு நடக்க மாட்டோம். ''
''நல்லது.. எதற்காக இந்த பேச்சை எடுத்தேனோ அது நடந்து விட்டது. எந்த நிலையிலும் யுத்தத்தில் எதிரில் நிற்பவர்களை உத்தேசித்து கலங்க கூடாது, அர்ஜூனா, நீ இளவயதில் ஒரு பறவையை குறிவைத்தால் அந்த பறவை தவிர சகலத்தையும் மறந்து விடுவாய். அது போல் இப்போதும் நீ வெற்றியை மட்டுமே குறி வைக்க வேண்டும். மற்றதை மறந்திடு.''
''ஆம் மைத்துனா... நான் அவ்வண்ணமே செயல்படுவேன்'' - என்று அர்ஜூனன் உறுதி கூறினான். அப்போது அங்கு வந்த திரவுபதி கலங்கிய விழிகளுடன் கிருஷ்ணனை ஏறிட்டாள்.
'' திரவுபதி ஏன் இந்த கலக்கம்'' என கிருஷ்ணன் கேட்க, ''இது ஆனந்தக் கண்ணீர். நீ எங்களுக்கு செய்யும் உதவிகளுக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்ய போகிறோம்... தெரியவில்லையே...'' என்றாள் திரவுபதி!
- தொடரும்
இந்திரா சவுந்தர்ராஜன்