ADDED : மார் 14, 2018 04:08 PM

அர்ஜூனனின் கலக்கம் போக்க எண்ணிய கிருஷ்ணன், அந்த நொடியே தன் அவதார நோக்கத்தின் மையப்புள்ளிக்கு தான் வந்ததை உணர்ந்தான்.
எதிரில் கலங்கி நிற்பது அர்ஜூனனாக மட்டும் தெரியவில்லை. பல்லாயிரம் கோடி உயிர்கள் வாழும் பிரபஞ்சமே அர்ஜூனன் வடிவில் நிற்பதாக அவனது கருணை உள்ளம் எண்ணியது.
தாயானவள் தன் வயிற்றில் பிறந்த குழந்தையை எப்படி பாசத்தோடு பார்ப்பாளோ அப்படியே அர்ஜூனனை பார்த்தான்.
'அர்ஜூனா... யாரும் வெல்ல முடியாத வில்லாளனே...!' என்ற கிருஷ்ணனின் தொடக்கமே மிகச் சிறப்பாக இருந்தது. அப்போது அர்ஜூனன் கண்களுக்கு தெரிந்த கிருஷ்ணனின் தோற்றம், அவன் இது நாள் வரை பார்க்காத தோற்றமாக இருந்தது.
இதற்கு முன்னும் பல விஸ்வரூப காட்சிகளை கிருஷ்ணன் காட்டியிருக்கிறான். அவைகளின் உச்சமாக திகழ்ந்தது இக்காட்சி. கிருஷ்ணனின் முகத்திற்கு இடம், வலமாக சிவன், பிரம்மா உள்ளிட்ட சகல தேவர்களும், அணி வகுத்து காட்சி தந்திட கிருஷ்ணன் கண்களில் சூரியன், சந்திரனாக காட்சி தந்தது. தலைக்கு மேல் சகல நட்சத்திர கூட்டமும், கிரகங்களும் காட்சி தந்த நிலையில், அர்ஜூனனுக்கு அக்காட்சியானது கிருஷ்ணனே பரம்பொருள் என்பதை உணர்த்தியது.
சிலிர்ப்புடன் பார்த்த அர்ஜூனன் தன்னை மறந்து,' கிருஷ்ணா' என கைகளை கூப்பினான். கிருஷ்ணனும் உபதேசிக்க தொடங்கினான்!
'அர்ஜூனா! அற்புத வில்லாளனே... என் உறவிருந்தும், மாயையில் இருந்து விலக முடியாதவனாக நீ இருப்பதில் இருந்தே, அதன் சக்தியை உலகம் உணரட்டும்.
மாயை தான் மாற்றங்களை தோற்றுவித்து, உயிர்களின் வாழ்வில் தேக்கம் இல்லாமல் பார்த்து கொள்கிறது. பிறந்த குழந்தை மாற்றங்களுக்கு உள்ளாகி, வளர்ச்சி பெறாவிட்டால் வாழ்வு என்பது இருந்தும் இல்லாது போகும்.
இதனாலேயே மாற்றம் என்பதே, மாறாத ஒன்றாக உள்ளது.
இதை உணர வல்லவன் அதீத அறிவு பெற்ற மானிடன் மட்டுமே... என்ன தான் இதை அவன் உணர்ந்தாலும், இதை புரிந்து கொண்டு வெல்வது அரிது. அசைவற்ற தவத்தால் இதை புரிந்து கொண்டு வெல்ல முடியும். ஒரு ஷத்திரிய வீரனான உன்னிடம் நான் அதை எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் ஒரு செயலில் இறங்கும் சமயம், அதை மட்டுமே எண்ணுபவன் ஒரு வகையில் தவசியே. அதனால் நீ கூட தவசி தான். வில்லை எடுத்து குறி பார்க்கத் தொடங்கி விட்டால், இலக்கு தவிர வேறு எதையும் சிந்திக்காதவன் நீ!
ஆனாலும் மற்ற நேரத்தில் மாயை சூழ்ந்த மானிட வாழ்வில் ஒருவனாக ஆகி விடுவதால் இப்போது போர்க்களத்தில் கலங்கி நிற்கிறாய். இது அறிவுக்கலக்கம், மட்டுமல்ல... பாசக் கலக்கமும் கூட! இந்த கலக்கம் முதல் இந்த யுத்த களம் வரை எதையும் நீ எதிர்பார்த்தவனல்ல... இதில் உனக்கொரு பங்கிருக்கலாம். ஆனால் இன்றுள்ள இந்த நிலை மட்டுமல்ல; என்னாலும் தடுக்கப்பட முடியாததாக நம் முன் காட்சி தந்தபடி உள்ளது.
விஜயனே! நான் வகுத்த விதியை நானே மீறினால் அது அழகாகுமா...?
விதி தன் போக்கில் போய்க்கொண்டே இருக்கிறது. அப்படி போய் கொண்டேதான்இருக்கும். அதற்கு நேற்று, இன்று, நாளை என்று மூன்று காலம் கிடையாது. ஒரே காலம் தான், ஒரே போக்கு தான்!
இதை புரிந்து கொண்டால் மனிதனின் அறிவு ஞானமாக விரிகிறது.
அறிவு திரவ நிலை என்றால் ஞானம் உறைந்த நிலை. திரவத்திடம் அசைவிருக்கும். திடத்திடம் அது இருக்காது. நீ கூட திரவ நிலையில் இருப்பதாலேயே இத்தனை சலனம், சஞ்சலம்!
இந்த உலகில் நிலையானது எதுவுமில்லை! உயிர் வாழும் உடம்பு அழியக்கூடியதே...
அழியாதது ஆத்மாவே...!
இதை அறிந்து கொண்டு பற்றின்றி வாழ்வதற்கே பிறக்கிறோம். வெற்றியை விரும்பி விளையாட்டில் இறங்குவது போல் பற்றின்றி வாழவே பிறக்கிறோம். விளையாட்டில் வெற்றி பெறாமல் போவது போல், பற்றின்றி வாழ இயலாமல் போகிறது.
பற்றில்லாமல் தன் கடமைகளை சரிவர செய்பவனே கர்ம ஞானியாகிறான். பற்றினால் ஆசை, பாசம், காமம், காழ்ப்பு, கோபம், குரோதம், வன்மம், குன்மம் எனும் கஷ்டங்கள் உண்டாகின்றன. என்ன தான் பற்றோடு வாழ்ந்தாலும் ஒருநாள் சகலத்தையும் இழந்து சிதையாகும் போதும், கஷ்டங்கள் விடுவதில்லை. திரும்ப பிறக்க வைத்து பிறவிச் சுழலில் இருந்து விடுபட முடியாமல் செய்கின்றன. பற்றை விட்டு தன்னிலும், சகலத்திலும் இருப்பவன் நான் என்பதை உணர்ந்தவன் விடுதலை அடைகிறான்.
குந்தி புத்ரனே!
இந்த அறிவுரைகளால் குழப்பம் விலகி, சஞ்சலம் நீங்கி கர்மயோகி போல கடமையாற்று.
உன் எதிரில் இருப்பவர்கள் எப்போது இக்களம் கண்டு விட்டார்களோ, அப்போதே என்னால் கொல்லப்பட்டு விட்டனர். நீ விடும் அம்புகள் அதை உறுதி மட்டுமே செய்யப் போகின்றன. நீ செய்யாமல் விட்டாலும் அவர்கள் கொல்லப்படுவது உறுதி. சகோதரன், மாமன், மைத்துனன், நண்பன் என்னும் உறவெல்லாம் ஆத்மாவின் சட்டைகளே! அவை நிரந்தரமானவை அல்ல.
துணிவுடன் செயலாற்று. சகலத்தையும் எனக்கு அர்ப்பணித்து விடு. எதை கொண்டு வந்தாய்... இழப்பதற்கு? இன்று உன்னுடையதென்று நீ கருதும் ஒன்று; நாளை வேறு ஒருவனுக்காகி, பின் அவனிடமிருந்து அடுத்தவனுக்கு, அதற்கும் அடுத்தவனுக்கு என்று செல்வது தான் வாழ்வின் போக்கு.
பாண்டு புத்ரனே... என் இனிய நண்பனே!
வில்லாளனே... கலக்கத்தை விடு... சஞ்சலத்தை விரட்டு... வில்லை எடு. தர்மத்தை மட்டும் நினை. சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என செயலாற்று...''
கிருஷ்ணனின் உபதேசத்தால் அர்ஜூனன் உள்ளம் தெளிந்தான். வீறுடன் எழுந்து களம் காண தயாரானான்.
இந்த உபதேசம் பகவத் கீதையாக நமக்கு வழிகாட்டுகிறது. ஒரு வகையில் நாமும் அர்ஜூனன் போன்றவர்களே... நம் மனதில் எழும் கலக்கம், சலனத்தை வெல்ல வேண்டுமானால், கீதையை அறிவது அவசியம்.
'தர்மத்தை கூட விட்டு விடு... என்னை மட்டுமே நீ பின்பற்று. அது உன்னை என்னிடம் கொண்டு சேர்க்கும்!' என்று முடிவாக சொல்கிறது கீதை!
- தொடரும்
இந்திரா சவுந்தர்ராஜன்