
மனிதருக்குள் உயர்வு,தாழ்வு.கருதுவது பாவம். தெய்வங்களுக்குள் உயர்வு தாழ்வு கருதுவது பெரும் பாவம். தனக்கு பிடித்த தெய்வத்தை உயர்வாக கருதி, மற்றதை தாழ்வாக கருதுவது பெரும் பாவம். அவ்வாறு செய்தால், விளைவு என்ன என்பதை இந்த வரலாறு விவரிக்கும்.
பரதமுனிவரின் மகளாக பிறந்த பார்வதி, காவிரிஆற்றின் நடுவில் அமர்ந்து தவம் செய்து சிவனை மணந்தாள். நதியின் நடுவில் இருக்கும் இடம் 'துருத்தி' என்பதால் 'திருத்துருத்தி'எனப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள இத்தலம் தற்போது 'குத்தாலம்' எனப்படுகிறது.
இங்கு வேதத்தில் சிறந்த 'ருத்ரசன்மர்' என்பவர் வாழ்ந்தார். தினமும் கோயிலுக்கு செல்லும் இவரைக் கண்டால், கடவுளே மனித வடிவம் தாங்கியது போலிருக்கும்.
வயதாக வயதாக ருத்ரசன்மரின் உடல் தளர்ச்சியடைய தொடங்கியது. அதனால், வாழும் காலத்திற்குள் காசி யாத்திரை போய், கங்கையில் நீராடி, விஸ்வநாதர், விசாலாட்சியை தரிசிக்க வேண்டும் என விரும்பினார்.
இதையறிந்த உறவினர் சிலர்,''நீ பாட்டுக்கு காசிக்கு போயிட்டா, குடும்பம் என்ன ஆறது? அவசரப்பட வேண்டாமே''என்றனர்.
''ருத்ரசன்மரே! திருத்துருத்தி என்ன மட்டமா? நம்ம ஊர் சாமி பேரே 'சொன்னவாறு அறிவார்', அம்பாள் 'அரும்பன்ன முலையம்மை' இதை விட்டு, காசிக்கு போறேன்னு சொல்றீங்களே... நியாயமா?'' என்றனர் விஷயம் அறிந்த ஊர்ப்பெரியவர்கள்.
ருத்ரசன்மருக்கு கோபம் எழுந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை. ''நம்மூரு சுவாமிக்கு பேரே, சொன்னவாறு அறிவார்னு தான் இருக்கு. அப்போ இவருக்கு சொன்னாத்தான் தெரியும். ஆனா காசி அப்படியில்ல! காசியோடு இந்த திருத்துருத்தியை சேத்துப் பேசறதே தப்பு'' என்று அவர்களின் வாயை அடக்கினார்.
''நீங்க வேதம் படிச்சவங்க. உங்க கிட்ட வாதம் பண்ண எங்களால முடியாது'' என்று அவர்கள் ஒதுங்கினர்.
விருப்பப்படி ருத்ரசன்மர், காசி புறப்பட்டார். யாத்திரை புறப்படும் போது, உள்ளூர் கோயிலில் உத்தரவு பெறும் மரபை மறந்து கிளம்பினார். காட்டுவழியில் சென்ற போது சிறுமலை ஒன்று வழி மறித்தது.
அதை நெருங்கிய போது, குலை நடுங்கியது. அது மலையல்ல; 'புஸ்புஸ்' என்று மூச்சுக்காற்றை விட்டபடி, மலைப்பாம்பு படுத்திருந்தது. தீயை உமிழும் அதன் கண்கள் பயமுறுத்தின.
நடுக்கத்துடன் ருத்ரசன்மர், அதன் வால்பக்கம் போக துணிந்தார். பாம்பு தலையை துாக்க, ருத்ரசன்மரின் முயற்சி வீணானது. கருடமந்திரத்தை சொல்ல ஆரம்பித்தார். ஆகாயத்தில் ஒரு கருடன் தோன்றி கீழே இறங்கியது. ஆனால் பாம்பு அதன் பக்கம் திரும்பி, பெருமூச்சு விட்டது. கருடனின் சிறகுகள் கருகி கீழே விழுந்தது.
உக்கிரம் கொண்ட பாம்பு, ருத்ரசன்மரை வளைத்துப் பிடித்து முறுக்க தொடங்கியது.
மூச்சு முட்ட தன்னை மறந்த நிலையில், ''திருத்துருத்தி ஈசா! குத்தாலத்தில் குடியிருக்கும் தெய்வமே!'' என்று கதறினார். அப்போது தோளில் இரு சுரைக்குடுக்கைகள் தொங்க, மகுடியுடன் பாம்பாட்டி ஒருவன் வந்தான்.
ருத்ரசன்மர், ''யாரப்பா நீ... பாம்பு உன்னையும் கொன்று விடுமே'' என்று கத்தினார்.
பாம்பாட்டியோ, ''நான் திருத்துருத்திக்காரன்; என் சம்சாரம் தான் சும்மாயில்லாம, இங்க அனுப்பினா'' என்றான்.
''அப்பா! சாமி.... இந்த பாம்பு கிட்டயிருந்து என்னை காப்பாத்தினா, ஒன்ன கடவுளா கும்பிடுவேன்''என்று அழுதார் ருத்ரசன்மர்.
பாம்பாட்டி, ''நான் என்ன காசி விஸ்வநாதனா? சாதாரண துருத்திக்காரன் தானே... ஏதோ என்னால ஆன முயற்சி செய்றேன்'' என்று மகுடியை ஊதினான்.
ஒரு சில நிமிடத்திற்குள், பாம்பின் பிடி தளர்ந்தது. ருத்ரசன்மரை விட்டு விலகி, படமெடுத்து ஆடியது.
ருத்ரசன்மர் கைகூப்பி,''ஐயா! நான் பூஜை செய்யற திருத்துருத்தி சாமி நீ தான்'' என்றார்.
பாம்பாட்டி அட்டகாசமாக சிரிக்க, சப்தம் காடு முழுவதும் எதிரொலித்தது.
காளை வாகனத்தில் அம்பிகையுடன் காட்சியளித்தார் சிவன். திருப்பூந்துருத்தி சிவனின் மகிமை தெரியாமல் தவறாகப் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் ருத்ரசன்மர்.
மலைப்பாம்பு, குண்டோதரனாக மாறி சிவனை வணங்கினான்.
''ருத்ரசன்மா! காசி மேல்; திருத்துருத்தி கீழ் என்றெல்லாம் பேசாதே! இதை உணர்த்தவே யாம் இவ்வாறு வந்தோம். யாம் காசியை நீங்கிய காலம் உண்டு. ஆனால் குத்தாலத்தை விட்டு நீங்கியதே இல்லை. அங்கு காசி விஸ்வநாதராக காட்சியளிப்போம். குண்டோதரனால் பீடிக்கப்பட்ட நீ, இங்குள்ள பொய்கையில் மூழ்கு! குறை தீர்ந்து எழுவாய்!'' என்றார் சிவன்.
ஊர் திரும்பிய ருத்ரசன்மர் திருப்பூந்துருத்தியில் விஸ்வநாதர், விசாலாட்சியை தரிசித்து மகிழ்ந்தார்.
குத்தாலம் என்னும் இத்தலம், மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ளது.
தொடரும்
அலைபேசி: 97109 09069
பி.என். பரசுராமன்