sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கிருஷ்ணஜாலம் - 2 (24)

/

கிருஷ்ணஜாலம் - 2 (24)

கிருஷ்ணஜாலம் - 2 (24)

கிருஷ்ணஜாலம் - 2 (24)


ADDED : ஏப் 01, 2018 04:33 PM

Google News

ADDED : ஏப் 01, 2018 04:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாண்டவர்கள் ஐந்து பேரும் கிருஷ்ணன் முன்னால் ஆசிரியன் முன் மண்டியிடும் மாணவன் போல் மண்டியிட்டனர்!

கிருஷ்ணன் அதற்கும் புன்னகைத்தான்.

''கிருஷ்ணா... நீ எங்களைப் பார்த்து கேட்ட கேள்விகள் எங்கள் அறிவுக்கண்களை திறக்க வைத்துவிட்டது. இந்த யுத்தத்தில் வெற்றி பெற்றே தீருவது என்பதே இப்போது எங்கள் எண்ணம். ஆனாலும் பீஷ்மரை வீழ்த்தும் வழி மட்டும் தெரியவில்லை. அதற்கான ஆலோசனையை சொல்லத்தான் வேண்டும்.'' என்று ஒருமித்த குரலில் கூறினர்.

''ஆயுதபாணியாக உள்ளவரை அவரை வீழ்த்த காலனாலும் முடியாது, இந்திரனாலும் இயலாது பீஷ்மர் விரும்பும் போது தான், அவரின் உயிர் பிரியும். இந்நிலையில் ஆயுதம் இல்லாத போது அவரை வீழ்த்த மனம் இடம் தராது என்பதை நானறிவேன். உங்களுக்கு என்ன சொல்வது என்பதில் எனக்கே குழப்பமாக உள்ளது.'' என்ற கிருஷ்ணனை திகைப்போடு பார்த்தனர்.

''என்ன அப்படி பார்க்கிறீர்கள்... நான் உள்ளதை தான் சொல்கிறேன்.''

''இருக்கலாம் ஆனாலும் நீ அறியாத ஒன்றும் உலகில் உண்டா கிருஷ்ணா...?'' என்று இழுத்தான் சகாதேவன்.

''என்னை இப்படி புகழ்வதால் பயனில்லை. இங்கே எனக்கொரு பழமொழி நினைவுக்கு வருகிறது...''

'' பழமொழியா?''

''ஆம்.... சாட்சிக்காரன் காலில் விழுவதற்கு சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்பதை அறிவீர்கள் தானே?''

''அப்படியானால்?''

''பீஷ்மரிடம் செல்லுங்கள்... உங்களைக் கொல்ல என்ன வழி என்று அவரிடமே கேளுங்கள்...''

''கிருஷ்ணா... என்ன பேச்சு இது?''

''தர்மா... வைரத்தை வைரத்தால் மட்டுமே அறுக்க முடியும்...''

''இது நியாயமா?''

''சகாதேவனிடம் துரியோதனன் யுத்தத்துக்கு நாள் குறிக்கச் சொன்னது நியாயம் என்றால் இதுவும் நியாயமே!''

''அவனும் நாங்களும் ஒன்றா?''

''போர்க்களத்தில் அவனுக்கு நீ எதிரி, உனக்கு அவன் எதிரி... எதிரிக்கு எதிரி என்பது சரிதானே? ஒன்று தானே?''

''கிருஷ்ணா சமாதானத்தோடு செயல்பட வழிகூறச் சொன்னால் சாதுர்யப் பேச்சாகவே பேசுகிறாயே...''

''நான் சாதுர்யம் பேசவில்லை தர்மா. சத்தியம் பேசுகிறேன். நீ தர்மவீரனாக இருக்கும் வரை புரியாது. கர்மவீரனாகு. புரியும்...''

''சரி.. பீஷ்மரிடம் சென்று நீ சொன்னபடி கேட்கிறோம், அவர் தன்னைக் கொல்ல வழிகாட்டுவாரா?''

''எப்போதோ காட்டிவிட்டார்...!''

''கிருஷ்ணா...''

''என்ன.. புரியவில்லையா?''

''ஆம்.. புரியத்தான் இல்லை...''

''வெல்லப்பட முடியாதவர், தான் விரும்பும் போது மட்டுமே உயிரை விடுவிக்கும் வல்லமை பெற்ற பீஷ்மர், துரியோதனனிடம் பேசும் போது 'என் உயிரை விட்டாவது நான் குற்றமற்றவன் என்று நிரூபிப்பேன்' என்று சொன்னாரல்லவா?''

''ஆம் சொன்னார்...''

''ஏன் அப்படி சொன்னார்?''

''உணர்ச்சிப்பெருக்கில் அப்படி பேசுவது சகஜம் தானே கிருஷ்ணா...''

''அதெல்லாம் உன் போன்றவர்களுக்கு. பீஷ்மர் தன் தந்தைக்கே மணம் முடித்து வைத்து, தன்னை நித்ய பிரம்மச்சாரியாக வரித்துக் கொண்ட திடமான ஒரு வைரக்கட்டை! அவர் சகஜமாக பேசவில்லை. தன் முடிவு தெரிந்து பேசியுள்ளார்...''

''புரிகிறது... அவர் துரியோதனனுடன் வாழ்வதை விட சாவது மேல் என்று முடிவெடுத்து விட்டார்..''

''இது புரிய நான் இவ்வளவு கேள்விகள் கேட்க வேண்டியுள்ளதே பீமா...''

''அப்படியானால் அவர் எப்படி சாவார்? நம்மாலும் அவரை கொல்ல முடியாது... ஒரு வேளை தற்கொலை செய்து கொள்வாரோ?''

''இதுநாள்வரை அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கே இழுக்காகி விடுமே?''

''பிறகு எப்படி தான் அவர் மரணிக்க முடியும்?''

''அதற்குத்தான் சொன்னேன் அவரிடமே கேளுங்கள் என்று...''

''சரி கிருஷ்ணா உன் மேல் பாரத்தை போட்டு நீ காட்டிய வழியில் நடக்கிறோம். இப்போதே அவரை சந்தித்து ஒரு கர்மவீரனாக பேசுகிறேன்.'' என்று தர்மனும் பீஷ்மரை சந்திக்க தயாரானான்!

''தனியாக செல்லாதீர்கள்... ஒன்றாக செல்லுங்கள். துளியும் தயக்கமின்றி கேட்க வேண்டியதை கேளுங்கள். பிறகு பாருங்கள்!''

கிருஷ்ணன் 'பிறகு பாருங்கள்' என்று கூறியதில் ஒரு அலாதி உட்பொருள்!

இரவு நேரம்!

போர்க்களத்தில் கோட்டான், கூகைகளின் கூக்குரல் சப்தம்... திரும்பின பக்கமெல்லாம் ரத்தத்திப்பிகளும் அதன் வாடையும்!

யுத்தகளம் என்பது எத்தனை கொடியது என்பதற்கு சான்றாக நடந்து செல்லும் பாண்டவர்கள் கண் முன்னே பிண வயல்கள்! அதை பார்த்த நொடி அர்ஜூனனுக்குள் இனியும் இது தொடரக்கூடாது, தொடர விடக்கூடாது என்று ஒரு வெறி! தர்மன் உள்ளமோ இறந்துபட்ட வீரர்களுக்காக கரைந்து உருகியது.

'இவ்வளவுக்கும் துரியோதனன் ஒரு விலை கொடுத்தே தீர வேண்டும்' என்று சூளுரைத்தது பீமனின் மனம்.

'பஞ்ச பூதங்களை பழித்தும் அழித்தும் வாழ்ந்தவனெல்லாம் படைவீரனாகி தன் பஞ்ச பூதக்கூடாகிய உடம்பை பரிகாரமாக கொடுத்து விட்டு வீர சொர்க்கம் அடைந்து விட்டதாக' சகாதேவன் நினைத்து கொண்டான். காலஞானியல்லவா?

'உயிர் வாழ்க்கை என்பதே சில காலம் தான்... அதன் முடிவு என்பதும் எப்படி வேண்டுமானால் இருக்கும் போலும்... பாவம் இவர்கள். இந்த ராஜ்ஜியத்தில் பிறந்து விட்டதாலேயே இறந்து விட்டவர்களாகி விட்டனரே' என்று எண்ணினான் நகுலன்.

ஒரு வழியாக பீஷ்மர் இருக்கும் போர்க்குடிலின் பக்கம் சென்ற ஐவரும் பீஷ்மர் முன் அவர் தியானித்திருந்த நேரமாகப் பார்த்து, உள்ளே சென்றனர். பீஷ்மர் கண் மலர்ந்தார்!

''அடடே என் செல்வங்களா?'' என ஆரம்பமாயிற்று பேச்சு!

''நாங்களா உங்கள் செல்வங்கள்?''

''அதிலென்ன சந்தேகம் தர்மா... விஷயத்துக்கு வா. கண்ணன் அனுப்பி வைத்தானா?'' கச்சிதமான பீஷ்மரின் அந்த கேள்வி ஐவரையும் திக்குமுக்காட செய்தது.

'ஆம்' என்று தலையசைத்தனர். சிரித்த பீஷ்மர், பேசவும் தொடங்கினார்.

''உக்ரமான போர்க்கால வேளையில் வந்திருக்கிறீர்களே! நிச்சயமாக யுத்தம் போதும் என்று சொல்ல வந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். தொடர்ந்து அது நடப்பதே இப்போது எனக்கும் தேவை. உங்களுக்கு நான் கருணை காட்டுவதாக கருதி விட்டான் துரியோதனன். எப்போதுமே நான் அப்படிப்பட்டவன் தான் என்பது அவன் அறிவுக்கு புலனாகவில்லை. காலமும், அப்படிப்பட்டவனோடு தான் என் வாழ்க்கை என்று இது நாள் வரை வாழ வைத்து விட்டது. இப்படி ஒரு வாழ்க்கைக்கு முடிவு கட்ட நானும் தீர்மானித்து விட்டேன்.

போகட்டும், நீங்கள் வந்த விஷயத்தை கூறுங்கள். என்னை போர் செய்யக் கூடாது என்றும், உங்கள் பக்கம் வந்து விடுமாறும் கூறாமல் நீங்கள் என்னிடம் எதையும் கேட்கலாம்'' என்று தன் மனதில் உள்ளதை கொட்டினார் பீஷ்மர்.

தர்மன் சிறிது தயக்கமுடன், 'உங்களைக் கொல்ல' என்று கூற வந்து இயலாது போய், ''உங்களை வெல்லும் வழியை நீங்களே காட்டியருள வேண்டும்'' என்றான்.

''வெல்ல வேண்டுமானால் கொல்ல வேண்டுமே?'' திருப்பிக் கேட்டார் பீஷ்மர்.

ஐவரிடமும் பிரமிப்பு!

- தொடரும்

இந்திரா சவுந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us