ADDED : ஜூன் 01, 2018 12:23 PM

அர்ஜூனன் அதிர்ந்த அதே நொடி போர்ப்பறை முழக்கமும் எழும்பிட போர் தொடங்கியது! கடோத்கஜனும் உற்சாகமாக தன் வீரத்தை காட்ட தொடங்கினான்.
வழக்கம்போல் அர்ஜூனன் ஒருபுறம் படையை சிதற அடிப்பதோடு துச்சாதனனைக் குறிவைக்க, மறுபுறத்தில் திருஷ்டத்துய்மனும், அஸ்வத்தாமனும் மோதிக் கொண்டனர்.
துரோணர் தர்மனைக் குறிவைத்து போரிடத் தொடங்கினார்.
இந்நிலையில் கர்ணன் அர்ஜூனனை தேடி வந்தபோது எதிர்பாராதவிதத்தில் கடோத்கஜன் அவனை எதிர்கொண்டான். கர்ணன், ''உன் சகோதரனான அபிமன்யு போனவழியே, நீயும் போக உத்தேசமா?'' என்று கேட்க, அவன் முகம் கனலாய்ச் சிவந்தது.
''கர்ணா... இந்த போர்க்களத்தில் வில்லாலும், வாளாலும் உயிர்கள் பிரிகின்ற போதிலும் எவரையும் கொலையாளி என்று சொல்வதில்லை. போர்வீரன் என்றே எல்லோரும் அழைக்கப்படுவர். ஆனால், உன்னை காலம் அப்படிச் சொல்லாது. நீ கொலையாளி! உன்னைக் கொல்வதன் மூலம் நானும் என் சகோதரனுக்கு அஞ்சலி செலுத்த விரும்புகிறேன்'' என்று கொக்கரித்த கடோத்கஜன் அடுத்த நொடியே கர்ணன் கண்களில் இருந்து மறைந்தான்.
கர்ணனுக்கு அவன் மாயா யுத்தத்தில் இறங்கி விட்டது தெரிந்தது.
''கடோத்கஜா... உருவத்தை மறைக்காமல் போரிடு...'' என்றான். கடோத்கஜனும் ஒரு ரதத்தில் தோன்றியவனாக, ''உன் பாணங்களைப் போடு அதை நான் எவ்வாறு தடுக்கிறேன் பார்...'' என்றான்.
கடோத்கஜனுக்கும் கர்ணனுக்கும் போர் வலுக்கத் தொடங்கிய போது துரியோதனன் போரிட்டுக் கொண்டிருந்த இடத்தில் அவன் காதில் கிருஷ்ணனின் குழலிசை கேட்க திரும்பிப்பார்த்தான். ரதத்திற்கு அருகில் கிருஷ்ணன் புன்னகையோடு நின்றிருந்தான்!
துரியோதனன் விக்கித்தான். அர்ஜூனனுக்கு பார்த்தசாரதியாக இருக்க வேண்டியவன், இங்கே எப்படி, எதற்கு வந்தான் என்கிற கேள்வி எழும்போதே, கிருஷ்ணன் துரியோதனனின் அருகில் வந்தான்.
''என்ன துரியோதனா அப்படி பார்க்கிறாய்?''
''கிருஷ்ணா நீ இங்கு எதற்கு வந்திருக்கிறாய்?''
''உனக்கோர் செய்தியை கூறத்தான்...''
''யுத்த களத்தில், யுத்த வேளையில் அது என்ன செய்தி?''
''கர்ணனும், கடோத்கஜனும் மோதத் தொடங்கி விட்டனர்...''
''அதற்கென்ன?''
''துரோணரும், தர்மனும் கூட மோதியபடி உள்ளனர்...?''
''அதற்குமென்ன?''
''அர்ஜூனன் கூட உன் சகோதரன் துச்சாதனனை விரட்டிக் கொண்டிருக்கிறான்.''
''கிருஷ்ணா... உன்னிடம் நான் யாரோடு யார் மோதுகிறார்கள் என்று கேட்கவுமில்லை, நீ அதை கூறத் தேவையுமில்லை. போய் ஒழுங்காக சாரதியம் செய்.''
''நான்தான் மாயாவி ஆயிற்றே... எனது உடல் அங்கே ரதத்தில் தான் உள்ளது. இது என் மாய உடல்...''
''எதற்கிந்த மாய விளையாட்டு?''
''உன்னை பரிசோதிக்கத்தான்...''
''கிருஷ்ணா... என்னைச் சீண்டாதே''
''சீண்டுவது, வேண்டுவது, எல்லாம் உன் செயல். நான் கர்ணனுக்காக உன்னைக் காண வந்தேன். கடோத்கஜனின் மாயாயுத்தம் முன்னால் கர்ணனால் ஏதும் செய்ய இயலாது. துரோணரின் சாபம் காரணமாக, அவன் வசமுள்ள சக்தியாயுதமோ இல்லை நாகாஸ்திரமோ எதுவும் பிறர் ஞாபகப்படுத்தினால் அன்றி ஞாபகத்திற்கும் வராது. எனவே அவன் மாளப்போவது உறுதி. கர்ணன் மேல் எனக்குள்ள தனித்த பற்று காரணமாகவே உன்னிடம் இதைக் கூறுகிறேன். இனி உன் பாடு - கர்ணன் பாடு...'' என்று கிருஷ்ணன் கூறிய நொடி துரியோதனன் உள்ளம் கர்ணனை எண்ணி துடிக்கத் தொடங்கியது.
கிருஷ்ணன் கூறியது போல், கர்ணனுக்கு அந்த ஆயுதங்கள் நினைவுக்கு வராது போனால் அவ்வளவு தான் என்கிற பயம் ஏற்பட்ட நொடி தன் ரதத்தை கர்ணனுடன் கடோத்கஜன் போரிடும் இடம் நோக்கி திருப்பத் தொடங்கினான்.
அங்கு சென்ற போது, கர்ணனும் கடோத்கஜனும் சளைக்காமல் போராடிக் கொண்டிருந்தனர். கடோத்கஜன் கர்ணனின் ரதத்தை துாள் துாளாக்கி அவனது ரதப்புரவிகளை எல்லாம் களத்தை விட்டே ஓட விட்டிருந்தான்.
கர்ணன் போர்க்களத்தில் தரையில் நின்றபடி பாணங்களைப் போட்டுக் கொண்டிருந்தான். அதைப்பார்த்தபடி வந்த துரியோதனன், ''கர்ணா உன் சக்தியாயுதத்தை மறந்தாயா... இந்த மாயப்பிசாசை அதைக் கொண்டு வெல்'' என்றான். கர்ணன் அதைக் கேட்டு திகைத்தான். யோசிக்கவும் செய்தான்.
''என்ன யோசனை... எடு சக்தியாயுதம் எனும் அந்த வைஜெயந்தி அஸ்திரத்தை... இந்திரன் உனக்கு தந்ததை மறந்தாயா?'' என்று கேட்கவும் கர்ணனும் அதை ஏவத் தயாரானான்.
கடோத்கஜனும் அதை எதிர்கொள்ளத் தயாராகி, ''ம்... போடு உன் சக்தியாயுதத்தை...'' என்று கதாயுதத்தை சுழற்றி எறிந்தான். அது கர்ணன் நெற்றி மேல் பட்டு கர்ணனை வீறு கொள்ளச் செய்தது.
அடுத்த நொடியே மந்திரப் பிரயோகங்களுடன் புறப்பட்ட சக்தியாயுதம், கடோத்கஜனைத் தாக்கியது. அவன் நிலைகுலைந்து விழுந்தான். அதோடு கடோத்கஜனை சுற்றியுள்ள வீரர்களையும் சுட்டு எரித்து சாம்பலாக்கி, போர்க்களமே சாம்பல் மேடாக மாறத் தொடங்கியது.
துரியோதனன் உற்சாகமானான்.
''அருமை நண்பா... அருமை... சாதித்து விட்டாய் நீ! என் அருமை நண்பன் ஜெயத்ரதனைக் கொன்றதற்கு பழிக்குப்பழி...'' என்று ஆனந்தக் கூத்தாடினான்.
மறுபுறம் கடோத்கஜன் மடிந்த செய்தி கேட்ட பாண்டவர்கள் உறைந்து போயினர். மாலைப் பொழுதானதும் யுத்தமும் முடிவுக்கு வந்தது.
தம்தம் இருப்பிடத்துக்கு திரும்பிய பாண்டவர்கள் ஒன்றாகக் கூடி கடோத்கஜனுக்காய், குறிப்பாக அவனுக்காக கண்ணீர் விடும் பீமனுக்கு ஆறுதல் கூற முடியாது தவித்த போது கிருஷ்ணன் மட்டும் எந்தச் சலனமுமின்றி இருந்தான்.
''கிருஷ்ணா உனக்கு வருத்தமாக இல்லையா... உனக்கும் கடோத்கஜனை மிகப் பிடிக்குமே?'' என்று கேட்டான் அர்ஜூனன்.
''உண்மை தான். ஆனால் கடோத்கஜன் வீர சொர்க்கம் புகுந்து விட்டதால் அவன் குறித்த துக்கம் எனக்கு இல்லை. சொல்லப்போனால் நான் இப்போது தான் அதிக சந்தோஷத்தோடு இருக்கிறேன்'' என்றான். பாண்டவர்கள் சகலரும் அதிர்வும் ஆச்சரியமுமாக கிருஷ்ணனைப் பார்த்தனர்.
''ஆம்... இந்த யுத்தத்தில் நமது வெற்றி உறுதியாகி விட்டது. கர்ணனின் சக்தியாயுதம் உள்ளவரை அது கேள்விக்குறியாகவே இருந்தது.இப்போது அது ஆச்சரியக்குறியாகி விட்டது. சக்தியாயுதத்தை ஒரு முறைக்குமேல் பயன்படுத்த இயலாது. கர்ணன் நினைத்திருந்தால் முதல் நாள் யுத்தத்தின் போதே, யுத்தத்தில் பங்கு கொண்டு நம் அவ்வளவு பேரையும் வீழ்த்தி வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால், பீஷ்மர் களத்தில் உள்ளவரை தான் களத்தில் இறங்க மாட்டேன் அவன் முடிவு செய்தமையால் நாம் அனைவரும் தப்பித்தோம். அதன்பின் அவன் களம் கண்டும் தன்பலம் தெரியாதவனாகவே, துரோணரின் சாபம் அவனை கட்டிப் போட்டிருந்தது. கட்டை நான் தந்திரமாக அவிழ்த்தேன். காரியமும் கச்சிதமாக முடிந்தது'' என்று விளக்கமளித்த கிருஷ்ணனை
எல்லோரும் கண்கள் பனிக்கப் பார்த்தனர். தர்மன் அதற்கு நடுவில், ''கர்ணா என் புத்திரனுக்கு இணையான கடோத்கஜனை கொன்ற உன்னை நான் என் கைகளால் கொல்வேன்'' என்ற போது, ''அமைதி... அமைதி...'' என்றொரு குரல் கேட்டது.
- தொடரும்
- இந்திரா சவுந்தர்ராஜன்