ADDED : ஜூன் 08, 2018 03:53 PM

பக்தர் ஒருவர் மகாபெரியவரிடம் கண்ணீர் மல்க, ''சுவாமி...எனக்கு மூன்று மகன்கள். இரண்டு பேர் படித்து வேலையில் உள்ளனர். மூன்றாவது மகனுக்கு படிப்பில் ஆர்வமில்லை. அவன் வாழ்க்கையை எப்படி நடத்தப் போகிறான் எனக் கவலையாக இருக்கிறது'' என்றார்.
பெரியவர், ''தனுஷ்கோடி போனதுண்டா? அங்கே பெரிய அலை ஒன்று புறப்படும். ஆனால் கரைக்கே வராது. பாதியிலேயே நின்று விடும். சின்ன அலையாகத் தான் இன்னொன்று புறப்படும். அதுவோ விறுவிறுவென்று வந்து கரையில் உள்ளவர்களின் காலைத் தொட்டுப் போகும். எனவே, எந்த அலை கரை சேரும் என நாம் எப்படி முடிவு செய்ய முடியும்?
படித்தவர்கள் பலர் வாழ்க்கையில் வெற்றி பெறுவதில்லை. படிக்காத சிலரோ, சொந்த உழைப்பால் வாழ்க்கையில் ஜெயிப்பதைப் பார்க்கிறோம்.
ஒருமுறை உன்னைப் போலவே என்னிடம் ஒருவர் வருத்தப்பட்டார்.
அவருக்கும் மூன்று மகன்கள் தான். மூத்தவன் டாக்டர். இன்னொருவன் இன்ஜினியர். மூன்றாவது மகனுக்கு படிப்பு வரவில்லை.
ஆனால் அவன் நாடகங்களில் நடித்து, நல்ல பெயர் வாங்கினான். இப்போது சினிமாவில் டாக்டராக, இன்ஜினியராக எல்லாம் நடிக்கிறான். சகோதரர்களை விட பெரிய அளவில் பணத்தோடு, புகழையும் சம்பாதிக்க தொடங்கினான். மகனைப் பற்றிப் புலம்பிய அவர், கொஞ்ச நாளுக்கு முன் மடத்திற்கு வந்திருந்தார்.
'சுவாமி...என்னுடைய மூத்த பிள்ளைகள் தானுண்டு; தன் வேலையுண்டு என்று இருக்கிறார்கள். ஆனால் அதிகம் படிக்காத மூன்றாவது மகனோ ரசிகர்கள் மத்தியில் பேரும், புகழுமாக வாழ்கிறான். பொது இடங்களில் பலரும் அவனிடம் ஆட்டோகிராப் வாங்குகிறார்கள். நேரில் பாக்கற போது ரொம்ப பெருமையாக இருக்கு' என்றார்.
கடவுளின் திட்டத்தை நம்மால் அறிய முடியாது... யாரை எப்படி கரை சேர்ப்பது என்பதை அவர் அறிவார். இப்போது எந்த மகனை குறித்து வருந்துகிறாயோ, அவனுக்கும் நல்வழி காட்டுவது அவர் பொறுப்பு. அவனுக்காக தினமும் கடவுளை பிரார்த்தனை செய்து வா. எல்லாம் நன்மையாக நடக்கும்.
உன் மகனுக்கு நீ அப்பாவாக இருக்கலாம். ஆனால் உலகிலுள்ள எல்லோருக்கும் தந்தை கடவுள் என்பதைப் புரிந்து கொள்'' என்றார்.