sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கிருஷ்ணஜாலம் - 2 (38)

/

கிருஷ்ணஜாலம் - 2 (38)

கிருஷ்ணஜாலம் - 2 (38)

கிருஷ்ணஜாலம் - 2 (38)


ADDED : ஜூலை 06, 2018 10:15 AM

Google News

ADDED : ஜூலை 06, 2018 10:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

யுத்த களத்தில் பதினாறாம் நாள் காலை...!

தன் குதிரைகளுக்கு கிருஷ்ணன் உணவளித்துக் கொண்டிருந்தான். அதை வியப்பாக பார்த்தபடியே வந்தான் தர்மன்.

''கிருஷ்ணா என்ன இது... இதெல்லாம் நீ செய்கிற காரியமா? குதிரைப் பராமரிக்க சேவகர்கள் எவ்வளவோ பேர் இருக்க நீ இதைச் செய்யலாமா?'' எனக் கேட்டான்.

''நான் இப்போது சாரதி. என் கட்டுப்பாட்டில் உள்ள இக்குதிரைகளின் நலனுக்கு நானே பொறுப்பு தர்மா. பிறர் நலனுக்காக செய்யும் எச்செயலிலும் உயர்வு தாழ்வு கிடையாது. நீ வந்த விஷயத்தைக் கூறு...''

''இன்று போரில் பதினாறாம் நாள்...''

''அதற்கென்ன?''

''களத்திற்கு கர்ணன் தலைமை தாங்கி வர இருக்கிறான்''

தர்மன் அப்படி சொல்லவும் கிருஷ்ணன் தர்மனை ஆச்சரியத்தோடு பார்த்தான்.

ஒருவேளை கர்ணன் யார் என தெரிந்து தான் வந்திருக்கிறானோ என்றும் கிருஷ்ணனுக்குள் ஒரு சந்தேகம்.

தர்மனோ தொடர்ந்தான்.

''கிருஷ்ணா... கர்ணனின் வீரத்தை நாம் நன்கறிவோம். அதிலும் துரியோதனனின் ஒரே நம்பிக்கையே கர்ணனும் அவனது நாகாஸ்திரமும் தான்...''

''அது எனக்கும் தெரியும் தர்மா...''

''அதை அவன் பிரயோகித்தால் எதிரியை வீழ்த்தாமல் அது திரும்பாது என்பதையும் நீ அறிவாயல்லவா?''

''தர்மா... பயம் வேண்டாம். நீ என்னிடம் கூற வந்ததை சொல்''

''கர்ணனுக்கு அர்ஜூனன் மேல் நெடுநாள் பகை. எனவே களத்தில் அவன் குறி அர்ஜூனன் மீதே இருக்கும். அதனால் எங்கே நான் அபிமன்யுவை இழந்தது போல் அவனையும் இழந்து விடுவேனோ என்று தான் அஞ்சுகிறேன்...''

தர்மனிடம் சகோதர பாசம் கொந்தளித்தது. கிருஷ்ணன் தர்மனை உற்றுப் பார்த்தான்.

''எதற்காக கண்ணா அப்படி பார்க்கிறாய்?''

''பாசம் படுத்தும் பாட்டைப் பார்க்கிறேன் தர்மா''

''உண்மை தான்... போரில் நாம் வெற்றியை நெருங்கி கொண்டிருக்கிறோம். இதை நிச்சயம் துரியோதனன் பொறுக்க மாட்டான். எனவே உச்சபட்சமாக ஏதாவது சூழ்ச்சி செய்து விடுவானோ என அஞ்சுகிறேன்.''

''கவலைப்படாதே... அர்ஜூனனின் வீரத்தை மட்டும் நீ நம்பு. மற்றவைகளை வழக்கம்போல் நான் பார்த்துக் கொள்கிறேன்.''

கிருஷ்ணன் நம்பிக்கை அளித்தான்.

தர்மனுக்கும் அது சற்று மனநிறைவை அளித்தது. தர்மன் சென்று விட்ட நிலையில் கர்ண ரகசியம் தெரிந்தால் தர்மன் என்னாவான் என்னும் கேள்வி கிருஷ்ணனிடம்...

ரகசியம் உடைந்தும் கர்ணன் போர்க்களத்தில் நிற்பதை எண்ணிய போது, பாசபந்தங்களுக்கு இடம் தராத கர்ணனின் நன்றி உணர்ச்சி கிருஷ்ணனை பிரமிக்க வைத்தது.

போர் தொடங்கியது!

கர்ணன் படைக்கு தலைமை தாங்கி வந்தான். அவன் தலைமையில் மகர வியூகம் உருவாக்கப்பட்டிருந்தது. உலுாகன், சகுனி, அசுவத்தாமன், துரியோதனன், கிருபர், கிருதவர்மா என்று கர்ணனை ஒட்டி சகலரும் அணிவகுத்து நின்றனர்.

எதிரில் பீமன் போருக்கு தலைமை தாங்கினான். அர்ஜூனன், தர்மன், நகுலன், சகாதேவன், சாத்யகி, திருஷ்டத்துய்மன் என்று பீமனை ஒட்டி பாண்டவர்களின் அணிவகுப்பு.

இந்த போரில் கர்ணனிடம் நகுலன் சிக்கினான். அவனது வில் துாள்துாளாகியது. கர்ணன் அடுத்து ஒரு பாணம் போட்டாலும் போதும் நகுலன் மாள்வது உறுதி. ஆனால் அதற்குள் நகுலனை தர்மன் காப்பாற்றி தேரில் ஏற்றினான். பதிலுக்கு துரியோதனன் தேரை தவிடு பொடியாக்கி அவனுக்கு எதிராக பாணம் போட விழைந்த போது பீமனின் சபதம் நினைவுக்கு வரவே தர்மன் தடுமாறிப் போனான். அந்த நொடிகளில் துரியோதனனை கர்ணன் காப்பாற்றி தன் தேரில் ஏற்றிக் கொண்டு விரைந்தான்.

பீமனோ கருச நாட்டு மன்னனான சேம கீர்த்தியையும், அவன் படைகளையும் நிர்மூலமாக்கிக் கொண்டிருந்தான்.

மொத்தத்தில் பதினாறாம் நாள் போர் பாண்டவர்களுக்கே சாதகம் என்பது போல் முடிந்தது.

துரியோதனனின் களக்குடிலில் ஒரே கொந்தளிப்பு. கர்ணன் நகுலனைக் கொல்லக் கிடைத்த வாய்ப்பு பறிபோனதை எண்ணியும், நாளை அது போல் ஒரு சம்பவம் நடக்கக் கூடாது என்றும் துரியோதனன் பேசியபோது சகுனி ஒரு கருத்தை கூற முன் வந்தான்.

''என்ன மாமா?''

''கர்ணன் சிறந்த வீரனே... ஆனால் அவனுக்கு சாரதி அமைவதில் தான் வெற்றியே உள்ளது. இதுநாள் வரை நடந்த போரில் கர்ணன் பெரிய வெற்றி பெறாமல் போகக் காரணமே சாரதி சரியாக அமையாதது தான். அர்ஜூனன் வெற்றிகளைக் குவிக்க காரணமும் கிருஷ்ணன் சாரதியம் புரிவதால் தான்...''

''சரியாக சொன்னீர்கள். யார் சாரதியம் செய்தால் சரியாக இருக்கும்?''

''மந்தர நாட்டு மன்னன் சல்லியன்...''

''சல்லியனா... மிகவும் செருக்கானவராயிற்றே?''

''அப்படி ஒருவன் தான் கர்ணனுக்கும் தேவை. இமைக்கும் நொடிக்குள் களத்தில் தேரை மாற்றிச் செலுத்த வேண்டும். அப்போது தான் அர்ஜூனனை சமாளிக்க முடியும்.''

''ஆமாம்... நீங்கள் சொல்வதே சரி... இப்போதே சல்லியனை சாரதியம் செய்யச் சொல்லிக் கேட்போம்''

''கேட்பது பெரிதில்லை. சல்லியன் ஒரு நாட்டு அரசன். கர்ணனை தாழ்ந்த குலத்தவனாக பார்ப்பதால் சாரதியம் செய்வதை விரும்ப மாட்டான். கிருஷ்ணனை உதாரணம் சொல்லி, கிருஷ்ணனுக்கு இணை நீங்கள் தான் என்று உயர்த்திப் பேசினால் மட்டுமே சல்லியனை சம்மதிக்க வைக்க முடியும்''

''அப்படியே செய்தால் போயிற்று...''

துரியோதனன் சொன்ன சூட்டோடு சல்லியனின் போர்க்குடிலுக்குள் நுழைந்து, கிருஷ்ணனுக்கு இணையாக வைத்து சொன்னதும் சல்லியன் சம்மதித்தான். ஆனால் ஒரு நிபந்தனை விதித்தான்.

''என்ன நிபந்தனை சல்லியரே...?''

''கர்ணன் என் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும். மறுத்தால் தேரை விட்டு நான் இறங்கிச் செல்வேன்.''

''நீங்கள் சாரதியம் செய்யும் போது கர்ணன் எப்படி கேட்காமல் போவான். நிச்சயம் கேட்பான்.''

''கேட்கச் சொல்லி அவனிடம் சொல்லுங்கள். நான் கர்ணனுக்காக சாரதியம் செய்யப் போவதில்லை. கிருஷ்ணனுக்காக செய்யப் போகிறேன்.''

சல்லியனிடம் ஒரு தெளிவான நோக்கு இருந்தது. அதன்படியே எல்லாமும் நடக்கத் தொடங்கியது. களத்தில் கர்ணனும், பீமனும் மோதிக்கொண்ட போது பீமனின் கை ஓங்கியது. கதாயுதத்தால் பீமன் கர்ணனை கொல்ல முற்பட்டபோது சல்லியன் ரதத்தை திசை திருப்பியதோடு, ''பீமா... அர்ஜூனன் கர்ணனை வதம் செய்வதாக சபதம் செய்ததை மறந்து விட்டாயா? நீ உனக்கான சபதத்தை நிறைவேற்றப் பார்...'' என்று திசை திருப்பி விட்டான். அப்போதைக்கு கர்ணன் தப்பித்தான். சல்லியன் அடுத்து நேராக தர்மன் எதிரில் போய் தேரை நிறுத்தவும் கர்ணனின் குறி அந்த நொடி தர்மன் என்றானது.

- தொடரும்

இந்திரா சவுந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us