
நல்ல குருநாதர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்; நல்ல சீடன் கிடைக்கவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த வரிசையில் வசிஷ்டர் - ஸ்ரீராமர்; சாந்தீபனி - ஸ்ரீகிருஷ்ணர்; பட்டினத்தார் - பத்திரகிரியார்; மகாவித்வான் மீனாட்சிசுந்தரனார்- தமிழ்த்தாத்தா உ.வே.சா., என பலரை குறிப்பிடலாம். இது போன்ற குரு - சீடர் பற்றிய வரலாறு தான் இது.
அரியலுாரில் பாகவதர் ஒருவர், தன் மகன் திருமணத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் அருகிலுள்ள அய்யம்பேட்டைக்கு வந்தார். அங்கு வித்வான்கள் பலருடைய சங்கீதம் கேட்டு மனம் பறி கொடுத்தார். விளைவு?
தான் வழிபடும் கண்ணனிடம், ''சங்கீதத்தில் நிபுணனான மகன் ஒருவன் எனக்குப் பிறக்க வேண்டும் . அருள் செய்! கண்ணா!'' என பிரார்த்தித்தார். எந்தக் கோயில் போனாலும், இதே பிரார்த்தனை தான். அந்த நேரத்தில் பாகவதரின் நண்பர்கள் சிலர் காசி யாத்திரை புறப்பட்டனர். அவர்களுடன் பாகவதரும் சென்றார். கோயில்களைத் தரிசித்தபடி வந்த பாகவதர், திருப்பதியை அடைந்தார்.
''வேங்கடரமணா! அடியேனுக்கு சங்கீத நிபுணனான குழந்தை பிறக்க அருள்புரிய வேண்டும். என் குழந்தைக்கு உன் பெயரை வைக்கிறேன்' என்று வேண்டுதல் வைத்தார்.
யாத்திரை தொடர்ந்தது. காசியை அடைந்த பாகவதர் அங்கு விஸ்வநாதரிடம், ''அப்பா! காசி விஸ்வநாதா! சங்கீதத்தில் மேதாவியான மகன் ஒருவன் எனக்கு பிறக்க வேண்டும். அருள் செய்!'' என வழிபட்டு ஓரிடத்தில் அமர்ந்தார். அப்போது காசியில் நடந்த புராண சம்பவம் ஒன்று அவரது நினைவுக்கு வந்தது.
ஒரு முறை யாத்திரையாக காளிதாசர் காசிக்கு வந்தார். அங்கு சிலை வடிவில் இருக்கும் வியாசரைத் தரிசித்தார். வியாசர் எழுதிய மகாபாரதத்தில், 'ச' காரம் என்னும் எழுத்துஅதிகமாக இருப்பது காளிதாசரின் நினைவுக்கு வரவே பலமாக சிரித்தார். உடனே வியாசர் சிலையின் தொப்புளில் தன் விரலை வைத்தபடி, 'ஓ... சகார குக்ஷி' என்று சொல்லிக் கொண்டே விரலைத் திருப்பினார். வடமொழியில் குக்ஷி என்பதற்கு 'வயிறு' என்பது பொருள். காளிதாசரின் விரலை வெளியே எடுக்க முடியாதபடிச் செய்தார் வியாசர்.
சிலையின்தொப்புளில் விரல் சிக்கியது கண்டு திகைத்தார் காளிதாசர். வாய்விட்டு சத்தமாக வியாசர் குறித்த ஸ்தோத்திரம் பாடினார். வியாசர் நேரில் காட்சியளித்து, ''காளிதாசா! நான் மகாபாரதத்தை இயற்றும் போது, அதை எழுதியவர் விநாயகர். அவர் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் பொருள் புரிந்து எழுதி முடிப்பதற்குள், தடைபடாமல் அடுத்த ஸ்லோகத்தை நான் சொல்ல வேண்டும்.
இல்லாவிட்டால் எழுத முடியாது என்ற நிபந்தனையுடன் எழுத வந்தார் விநாயகர். அதிவேகமாக ஸ்லோகங்களைக் கவனம் செய்து உடனுக்குடன் சொல்ல வேண்டியிருந்ததால், ஸ்லோகங்களில் 'ச'காரம்( ச என்னும் எழுத்து) அதிகம் வந்து விட்டது. அதற்காக என்னை 'சகார' குக்ஷி என நீ கேலி செய்யலாமா'' என்றார் வியாசர்.
''வேடிக்கைக்காகச் சொன்னேன்; பொருட்படுத்தாதீர்கள் '' என்றார் காளிதாசர்.
வியாசர் அவரிடம், ''தர்மர் பீமன் முதலானோர் திரவுபதிக்கு என்ன முறையில் உறவு? என்பதற்கான பதிலை ஒரே ஸ்லோகத்தில் , 'சகாரம்' சேர்க்காமல் சொல்... பார்க்கலாம்'' என்றார்.
காளிதாசர் சிறிதும் தயங்காமல் உடனே சொல்லி முடிக்கவே விரலை விடுவித்தார் வியாசர்.
''காளிதாசா! நீ மட்டும் 'சகார குக்ஷி' என்று என்னைக் கேலி செய்யும் தகுதி கொண்டவன். அற்புதமாக கவிபாடும் திறமை பெற்ற நீ 'மகாகவி' என அனைவராலும் போற்றப்படுவாய். உலகமே உன்னைக் கொண்டாடும்'' என்று ஆசியளித்து மறைந்தார்.
இந்த வரலாறை மனதில் சிந்தித்தபடி பாகவதர் வியாசரை தரிசித்தார். அப்போது ''வியாச மகரிஷியே! காளிதாசருக்கு 'மகாகவி' என்று வரம் அளித்த தாங்கள், சங்கீத வித்வானாகும் பாக்கியம் மிக்க ஒரு குழந்தையை எனக்கு அருள வேண்டும்!'' என வேண்டினார்.
அன்றிரவு பாகவதரின் கனவில், ''காசியிலுள்ள விநாயகரை தரிசித்தால் உன் விருப்பம் நிறைவேறும்'' என வியாசர் வழிகாட்டினார். கனவு கலைந்தது. அதன் பிறகு பாகவதர் துாங்கவில்லை. காரணம்? நல்ல கனவு கண்டால் அதன் பிறகு துாங்குவது கூடாது. அப்போது தான் பலிக்கும்.
அதிகாலையில் வியாசர் குறிப்பிட்ட விநாயகர் கோயிலுக்குச் சென்றார்.
அன்றிரவு, ''பாகவதரே! உமக்கு முதுமை வந்து விட்டது. இனி குழந்தை பிறக்க வழியில்லை. ஆனால் கவலை வேண்டாம். உம் மகனுக்கு, வியாசரின் அம்சத்துடன் ஒரு ஆண் குழந்தை பிறக்கும். சங்கீத வித்வானாகத் திகழும் அக்குழந்தை உம் வம்சத்திற்கே புகழ் சேர்க்கும்'' என்று கனவில் சொல்லி மறைந்தார் விநாயகர்.
காசி யாத்திரை முடிந்து, ஊர் திரும்பினார் பாகவதர்.
விநாயகர் கொடுத்த வாக்கு பலித்தது. பாகவதரின் மகன் 'நன்னுசாமி'க்கு ஆண் குழந்தை பிறந்தது.
திருப்பதி ஏழுமலையானுக்கு வைத்த வேண்டுதல்படி, 'வேங்கட ரமணன்' என குழந்தைக்கு பெயர் சூட்டினார் பாகவதர்.
இந்த வேங்கடரமணன் தான், பிற்காலத்தில் சங்கீத மேதை தியாகராஜரின் தலைமை சீடராக விளங்கினார். இவர் இல்லாவிட்டால் தியாகராஜரின் அவதார தினம் உள்பட பல அபூர்வ தகவல்கள் தெரியாமல் போயிருக்கும். சவுராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்த இவரை, 'வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர்' என சங்கீத உலகம் அழைக்கும். இப்படிப்பட்ட பிள்ளை வேண்டும் என கோயில் கோயிலாக பிரார்த்தித்த பாகவதர் - குப்பய்ய பாகவதர்.
நம் சந்ததியினர் சிறப்புடன் வாழ நாமும் விநாயகரின் திருவடிகளை பிரார்த்திப்போம்.
தொடரும்
அலைபேசி: 97109 09069
- பி.என். பரசுராமன்