
கிருஷ்ணனே தந்திரங்கள் புரிவதில் தவறில்லை என்று கூறவும் போர்க்களம் மேலும் சூடு பிடித்தது. இரு தரப்பிலும் பலத்த சேதங்கள்! இந்த சேதங்களில் கவுரவர்களை பெரும் பாவிகளாக்கும் ஒரு சேதமும் பாண்டவர் தரப்பில் ஏற்பட்டது.
இதை விதி என்றே கூற முடியும். வேறு சொற்களுக்குள் இது அடங்கவும் அடங்காது. அது தான் அபிமன்யுவின் போர்ப் பிரவேசம்! எந்த ஒரு விஷயமும் இந்த உலகில் காரணங்கள் இல்லாமல் நடப்பதில்லை.
'அபிமன்யுவுக்கு அற்ப ஆயுள்! ஆனால் நிலைத்த புகழ்!' இது இரண்டும் ஒருவருக்கு ஏற்படுமென்றால் அதற்கேற்பவே சூழலில் எல்லாம் அமையும்.
அபிமன்யுவை பொறுத்தவரை, விதி தன் வலையை துரியோதனனிடம் தொடங்கி விரிக்க ஆரம்பித்தது. துரியோதனன் தன் படையின் இழப்பை கணக்கெடுத்துப் பார்த்து கதிகலங்கிப் போனான். இதில் பல்லாயிரம் போர் வீரர்களை, அர்ஜூனன் ஒருவனே கொன்று விட்டான். அந்த களத்தில் துரோணரும் இருந்தார். பதிலுக்கு அவர் பாண்டவப் படைக்கு ஏற்படுத்திய சேதம் மிகக் குறைவு! இது துரியோதனனை வெறிகொள்ளச் செய்தது. நேராக துரோணரின் பாசறைக்கு வந்தவன், குருவுக்குண்டான வந்தனம் சொல்லி, தான் வந்த நோக்கத்தை கூறாமல், போர்க்குடிலில் வாசலிலேயே நின்று ''ஆச்சாரியாரே... துரோணாச்சாரியாரே...'' என்று பெயர் சொல்லி அழைத்தான்.
துரோணரும் வெகுண்டு போய் வெளியே வந்த பார்த்தார்.
சினத்தோடு நின்ற துரியோதனனும் சீறத் தொடங்கினான்.
''என்ன ஆச்சாரியாரே! நிம்மதியான உறக்கமோ... நான் வந்து கெடுத்து விட்டேனோ?'' என்று தன் காட்டத்தை காட்டியவன், ''உங்களால் பாடம் கற்பிக்கப்பட்ட உங்கள் சீடன் அர்ஜூனன் நம் தரப்பில் ஆயிரக்கணக்கானவரை கொன்றுள்ளான். ஆனால் குருவான நீங்களோ பேருக்கு யுத்தம் புரிந்திருக்கிறீர்கள். என்பாட்டன் பீஷ்மர் வழியில் தாங்களும் செல்வதாக உத்தேசமோ?'' என்கிற அவன் பேச்சு துரோணரை குத்திக் கிளறியது.
''பண்போடு பேசு; துரியோதனா... போர்க்களத்தில் எதிரில் நிற்பவன் என் எதிரி என்பதே என் கணக்கு. அவனுக்கும் எனக்குமான உறவுக்கு அங்கே இடம் கிடையாது. அர்ஜூனன் இந்த மண்ணில் என்னிடம் மட்டுமல்ல, விண்ணில் இந்திரனிடமும் வித்தை கற்றவன். அதை மறந்து விட்டாயா நீ? அப்படி ஒரு வாய்ப்பு அவன் பெற, நீ பாண்டவர்களை வனப்பிரவேசம் செய்ய வைத்தது தான் காரணம்.
பாண்டவர்கள் தங்கள் மேல் விழுந்த அடிகளை எல்லாம் படிகளாக்கி கொண்டனர். அவர்களுக்கு தடுமாற்றம் நேரிட்டாலும், அவர்களை நெறிப்படுத்த கிருஷ்ணன் அவர்களோடு இருக்கிறான். இந்த இடத்தில் நீ கிருஷ்ணனையும் மறந்து விட்டாய். உன் மதியும், விதியும் கிருஷ்ணனை விட அவனது படைகளே பெரிது என்று எண்ண வைத்து விட்டதை இப்போதாவது புரிந்து கொள். உணர்ச்சி மேலீட்டில் தவறு செய்வது என்பதே உன் வாடிக்கையாகி விட்டது. இந்த உணர்ச்சி மேலீடு பாண்டவர்களுக்கும் உண்டு. ஆனால் அதை கிருஷ்ணன் நேர்ப்படுத்தி விட்டான். இங்கோ நீ கோணலாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறாய். உன் குரு என்ற முறையில் இதை நான் கூறத்தான் வேண்டும். இருந்தும் உனக்கொரு உறுதியை தருகிறேன். அர்ஜூனன் ஸ்தம்பிக்கும் அளவு ஒரு அழிவை நாளைய யுத்தத்தில் நான் ஏற்படுத்துவேன். நீங்கள் எனக்கு துணை நின்றால் போதும்'' என்றார்.
மறுநாளே, அதாவது பதிமூன்றாம் நாள். துரோணர் பத்மவியூகம் வகுத்து களம் கண்டார். போர்க்களம் முழுக்க செந்நிற உடையில் இருந்தது. அதே வேளையில் அர்ஜூனன் குருவான துரோணரை தான் எதிர்ப்பதை விட பீமனும் தர்மனும் எதிர்ப்பதே சரி என்று கருதி போர்க்களத்தின் மறுபகுதிக்கு சென்று விட்டான். அவன் செல்லவில்லை, விதி செல்ல வைத்தது! அதற்கேற்ப 'சம்சப்தர்கள்' எனப்படும் சத்யவிரதனின் சகோதரர்கள் ஏழுபேர் போர்க்களத்தின் தென் பகுதியில் இருந்து கொண்டு 'தைரியமிருந்தால் இங்கே எங்களை எதிர்த்து போரிடு' என்று சவால் விடுக்கவும் அர்ஜூனன் கிருஷ்ணனோடு சம்சப்தர்களை நோக்கி கிளம்பிவிட்டிருந்தான்.
கிருஷ்ணன் கூட ''சம்சப்தர்களையோ அவர்களின் சவாலையோ பெரிதாக கருத தேவையில்லை; அர்ஜூனா...துரோணரை எதிர்ப்பதே சிறந்த செயல்'' என்று கூறிப் பார்த்தான்.
அர்ஜூனன் கேட்கவில்லை. விதி அவனை கேட்க விடவில்லை! விதியின் விதியையே வழிநடத்தும் கிருஷ்ணனும் அர்ஜூனனோடு சென்று விட, களத்துக்குள் துரோணர் பத்மவியூகம் கண்டு புயல் போல் புகுந்தார். அன்று தர்மனோடு துரோணரை எதிர்த்த பீமன்,
சாத்யகி, திருஷ்டத்யும்னன், குந்தி போஜன், துருபதன், கடோத்கஜன், சிகண்டி, யுதாமன்யு, சேகிதானன், விராடன், கேகயர்கள் என்று சகலரும் துரோணரால் விரட்டியடிக்கப்பட்டனர்.
துரோணர் தான் ஒரு தேர்ந்த குரு என்பதை நிரூபித்தார். காரணம் பத்மவியூகம்! இந்த வியூகத்தை பிளந்து உள்புகும் ஆற்றல் அபிமன்யுவுக்கு மட்டுமே இருந்தது. அபிமன்யுவோ புதுமாப்பிள்ளை. அவன் மனைவி உத்தரை கர்ப்பம் தரித்திருக்க அபிமன்யு பத்மவியூகத்தை பிளக்க தயாரானான். அபிமன்யு தன் தாயான சுபத்ரையின் கருவில் இருக்கும் போதே கிருஷ்ணனால் வியூக ரகசியங்களை கேட்கும் பாக்கியம் பெற்றவன். எனவே பெரியப்பா தர்மர் முன் சென்று நான் இருக்கிறேன் என்று நின்றான். சொன்னது மட்டுமல்ல; வியூகத்தை பிளந்து கொண்டு உள்ளேயும் சென்று விட்டான். எந்த வியூகத்தையும் உடைப்பது பெரிதல்ல; அதிலிருந்து திரும்ப வரத் தெரிந்திருக்க வேண்டும். சுபத்ரையின் கருவில் அபிமன்யு இருந்த சமயம் கிருஷ்ணனின் வியூக உபதேசத்தின் போது சுபத்ரை பாதியில் துாங்கி விடவும், அபிமன்யுவுக்கும் பாதி தான் பிடிபட்டிருந்தது! எனவே உள்ளே மட்டும் செல்லத் தெரிந்தவனை துரோணரின் படை சுற்றி வளைத்துக் கொண்டது. இருப்பினும் அபிமன்யு சளைக்காமல் எதிர்த்து துரியோதனப் படையை சிதற அடித்தான். குறிப்பாக அசுமகன் என்பவனை கொன்றான், கர்ணனின் சூரிய கவசத்தையே பிறர் பார்க்க பிளந்தான்! சல்லியனை மூர்ச்சித்து விழச் செய்தான். இதை எல்லாம் கண்ட துரோணர் பிரமித்தார்.
அர்ஜூனனின் வீரக்குருதி அப்படியே அபிமன்யு உடலில் பாய்வதையும் உணர்ந்தார்.
இவ்வேளையில் துரியோதனனின் சகோதரியான துச்சலையின் கணவனான ஜயத்ரதன் ஒரு பெரும் படையோடு வந்து அபிமன்யுவை தனிமைப்படுத்தி அபிமன்யுவோடு உடன் வந்த பீமன், தர்மன், கடோத்கஜன் உள்ளிட்ட சகலரையும் விரட்டி அடித்தான்.
தனிமைப்பட்ட அபிமன்யுவை துரோணர், கிருபர், கர்ணன், அஸ்வத்தாமன், கிருதவர்மா, பிருஹத்ப லன் ஆகிய ஆறு பேர் சுற்றி வளைத்துக் கொண்டனர்.
முதலில் அபிமன்யுவின் ரதத்தை சிதைத்து, அவனை வாளும், கேடயுமுமாக களத்தில் நிறுத்தினர். இதில் வாளை துரோணரின் பாணம் உடைத்தது, கேடயத்தை கர்ணபாணம் துாள் துாளாக்கியது. அபிமன்யு நிராயுத பாணியாக நின்றான். அவனை ஆறுபேரும் பார்த்து சிரித்தனர்.
கர்ணனிடம் மட்டும் யுத்த களம் என்பதை கடந்து தன் சகோதரனின் மகன் என்ற பாசம் எட்டிப் பார்த்து சலனமடையச் செய்தது. அப்போது அபிமன்யு அந்த ஆறு பேரையும் பார்த்து, ''நிராயுதபாணியோடு யுத்தம் செய்யக் கூடாது என்பது உங்களுக்கு தெரியாதா? எனவே எனக்கு வாளைத் தாருங்கள், பின் போர் புரியுங்கள்'' என்றான்.
கர்ணன் தர முற்பட்டான். சமயம் பார்த்து அங்கு வந்த சகுனி, ''கர்ணா இது யுத்த களம். எதிரிக்கு இரக்கம் காட்டக் கூடாது என்பதை மறந்து விட்டாயா?'' என்று கேட்க, ''இரக்கம் காட்டவில்லை சகுனி... போர்க்கள விதியை நான் மதிக்கிறேன்'' என்று கர்ணன் கூறி முடிக்கும் முன் அபிமன்யு அங்கு கிடந்த தேர்ச்சக்கரத்தை துாக்கிக் கொண்டு சுழன்று சுழன்று தாக்கத் தொடங்க, வேறு வழியின்றி ஆறுபேரும் ஒன்று சேர்ந்து அந்த தேர்ச்சக்கரத்தை துாள் துாளாக்கிட, மீண்டும் நிராயுதபாணியான அபிமன்யுவின் தலையில், துச்சாதனின் புதல்வன் கதாயுதத்தால் அடித்துக் கொன்றான்.
துரோணர் தான் நினைத்தது போல் அர்ஜூனனை ஸ்தம்பிக்க வைக்கும் ஒரு சம்பவம் நடந்து முடிந்து விட்டது! கர்ணன் மானசீகமாய் அபிமன்யுவின் ஆத்மாவிடம் மன்னிப்பு கோரிட, செய்தி தர்மனை அடைந்த போது அப்படியே மயங்கி விழுந்து விட்டான்.
- தொடரும்
இந்திரா சவுந்தர்ராஜன்