
விநாடிக்கும் குறைவான நேரத்திற்குள் கீழே விழுந்தால் கூட விபத்து நேரிடுகிறது.
பரிசோதிக்கும் டாக்டர், ''ஆறு மாதம் மருத்துவமனையில் ஓய்வெடுத்தால் மட்டுமே குணமாகும்'' என்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள்.
'என்ன சார் இது! கீழ விழுந்தது ஒரு நிமிஷம் கூட இல்ல. இதுக்குப் போயி, ஆறுமாசம் மருத்துவமனையிலே கெடக்கணும்னாக்க, என்ன நியாயம்?' என்று கேட்பார்களா..... இல்லையே...அது போல வாழ்க்கைப் பயணத்தில் குறுக்கிடும் விபத்துகளும் அப்படி தான். சிலர் உடனே எழுந்து விடுகிறார்கள். பலர் மீண்டும் எழ காலம் தேவைப்படுகிறது. இதை தான் 'அவனவன் செய்த வினைப்பயன்' என்கிறார்கள். இந்த கணக்கை எழுதி வைப்பவர் பெயர் 'சித்ரகுப்தர்'. அவர் பற்றி அறிவோம் வாருங்கள்.
வேதத்தைத் தன் மூச்சுக்காற்றாகக் கொண்ட சிவன், ''பார்வதி... பொற்பலகையும், அதில் எழுத சித்திரக்கோலும் கொண்டு வா! உயிர்கள் செய்யும் புண்ணிய, பாவங்களை எழுதி வைக்க ஒருவனை நியமிக்க வேண்டும்' என்றார்.
பார்வதியும் அப்படியே கொடுக்க, அதில் அழகான ஆண் குழந்தையை வரைந்தார். வரைந்து முடித்ததும், 'தேவி! இந்த ஓவியத்தைப் பார்!' என்றார். பார்வதியும் பார்வையை ஓவியத்தில் பதித்து விட்டு, ''சுவாமி! இந்தக் குழந்தையைக் கூப்பிடுங்கள்'' என்றார்.
சிவனும் அழைக்க, ஓவியத்தில் இருந்த குழந்தை, உயிர் பெற்று சிவபார்வதியை வணங்கியது. சித்திரத்தில் தோன்றியதால் குழந்தைக்கு, 'சித்திர புத்திரன்' எனப் பெயரிட்டார். இவரே சித்திர குப்தர் எனப்பட்டார்.
இந்நிலையில், தேவலோகத்தில் இந்திரனும், அவரது மனைவி இந்திராணியும், குழந்தை வரம் வேண்டி தவமிருந்தனர். அதைக் கண்டு சிவன் மனம் இரங்கினார். காமதேனுவிடம், ''நீ போய் இந்திரன் வம்சம் தழைக்க ஒரு குழந்தையைப் பெற்றுக் கொடுத்து விட்டு வா'' என உத்தரவிட்டார்.
அதன்படி காமதேனுவும் ஒரு பசுங் கன்றாக மாறி இந்திராணியிடம் அடைக்கலம் புகுந்தது. அதை வளர்க்கும் பொறுப்பை இந்திராணி தன் தோழிகளிடம் ஒப்படைத்தாள்.
அந்த கன்றுக்குப் பெயர் சூட்டுவிழா நடத்த வேதவியாசர் வரவழைக்கப்பட்டார்.
வைகாசி மாதம், வெள்ளிக்கிழமை, திருவாதிரை நட்சத்திர நன்னாளில், 'மாவேந்திரி' என பெயரிட்டார். அன்று முதல், பசுங்கன்றை அன்புடன் பூஜித்து வந்தாள் இந்திராணி.
காலங்கள் கடந்தன. கன்று பசுவாக வளர்ந்தது. சிவன் சித்திரகுப்தனை வரவழைத்து, ''இந்திராணி வளர்க்கும் பசு தண்ணீர் குடிக்கும் குளத்தில், தாமரைப் பூவாக மாறி நீ காத்திரு. தண்ணீருடன் சேர்ந்து, அந்தப் பசுவின் வயிற்றில் தங்கியிருந்து, புத்திரனாக அவதரிப்பாய். உயிர்களின் புண்ணிய, பாவக் கணக்கு எழுதும் பணியும் பெறுவாய்''என கட்டளையிட்டார்.
சிவபெருமானின் கட்டளையை ஏற்ற சித்திரகுப்தன், பசு தண்ணீர் குடிக்கும் குளத்தை அடைந்து, தாமரை மலராக மாறி, பசுவின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
இதற்கிடையில் ஒருநாள்...
அதிகாலைப்பொழுதில் இந்திராணி, கனவு கண்டாள்.
தோழியரை அழைத்து கனவை,விவரித்தாள்.
''என் மடியில் இந்திரரைப் போல அழகான ஆண்குழந்தை இருந்தது. சூரியன் போல முகம் பிரகாசித்தது. அதன் கையில் உயிர்களின் பாவம், புண்ணிய கணக்கை எழுத, தங்க எழுத்தாணி இருந்தது. என் பச்சை உடம்பில் பால் சுரக்கவும் கண்டேன்.
நந்தவனத்தில் காய்க்காத வாழை மரம் குலைதள்ளியது. பலாமரம் துளிர் விட்டது'' என்று விவரித்தாள்.
அதன் பிறகு இந்திராணி துாங்கவே இல்லை. காரணம்? நல்லகனவு கண்டால் துாங்கக் கூடாது. அப்போது தான் அது பலிக்கும். கெட்ட கனவு கண்டால் உடனே துாங்கி விட்டால் போதும். அது பலிக்காமல் போகும்.
பொழுது புலர்ந்தது. இந்திராணியிடம் வளர்ந்த பசு மேய்ச்சலுக்குப் புறப்பட்டது. புல்லை மேய்ந்து விட்டு, தண்ணீர் குடிக்கக் குளத்தை நெருங்கியது. சிவன் விருப்பப்படியே, குளத்தில் தாமரை மலரை ஆவலுடன் தின்று விட்டு, தண்ணீர் குடித்தது பசு. கரை ஏறியதும், அப்பசு மயங்கி கீழே விழுந்தது. இதையறிந்த இந்திராணி பதறிப் போனாள்.
'' இப்படி நேர்ந்து விட்டதே! இப்பசுவை பிழைக்க வைப்போருக்கு என்ன வேண்டுமானாலும் தருவேன்'' என அறிவித்தாள்.
அந்த நேரத்தில் பார்வதியை அங்கு அனுப்பி வைத்தார் சிவன்.
தலையில் கொக்கின் இறகு, கையில் தங்கமயமான கூடையும், பிரம்பும் ஏந்திய குறத்தியாக இந்திராணியின் இருப்பிடத்தை அடைந்தாள் பார்வதி.
''அம்மா... உன்னைக் கண்டால் தெய்வமே குறத்தியாக வந்தது போல் இருக்கிறது. என் பசுவைக் காப்பாற்று. நீ கேட்டதை எல்லாம் நான் தருவேன்' என்றாள் இந்திராணி.
குறத்தி பசுவைப் பார்த்து விட்டு, ''உன் சஞ்சலம் தீரும் நேரம் வந்து விட்டது. பசுவின் வயிற்றில் பாவ, புண்ணியக்கணக்கை எழுதும் புத்திரன் பிறக்கப் போகிறான். சித்திரை மாதம் பவுர்ணமி திதி, சித்திரை நட்சத்திரம், திங்கட்கிழமையன்று நெற்றியில் திருநீறும், கையில் எழுத்தாணியும் ஏந்தியபடி வருவான்'' என்றாள்.
மகிழ்ச்சியுடன் இந்திராணி, பொன்னும் மணியும் வாரி வழங்கினாள். குறத்தியாக வந்த பார்வதியோ, ''உன் அன்பு மட்டும் போதும் தாயே...எனக்கு'' என்று சொல்லிவிட்டு மறைந்தாள். உண்மை தானே! தெய்வம் நம்மிடம் எதிர்பார்ப்பது அன்பு மட்டும் தானே!
அந்த புத்திரனே எமதர்மனின் உதவியாளரான சித்திரகுப்தன்.
சித்திரம் என்ற சொல்லுக்கு, 'ரகசியம்' என்பது பொருள். குப்தம் என்ற சொல்லுக்கு 'மறைவாக' என்பது பொருள்.
ரகசியமாக செய்யும் தவறுகளையும் அறியும் வல்லமை பெற்றவர் 'சித்திரகுப்தன்'.
''சித்திரகுப்தனை உருவாக்கிய சிவபெருமானே! எங்களை ஆட்கொண்டு நல்வழியில் செலுத்துவாயாக'' என்று சித்ராபவுர்ணமி நன்னாளில் வேண்டுவோம்.
தொடரும்
பி.என். பரசுராமன்
அலைபேசி: 97109 09069