sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கிருஷ்ணஜாலம்-2 (12)

/

கிருஷ்ணஜாலம்-2 (12)

கிருஷ்ணஜாலம்-2 (12)

கிருஷ்ணஜாலம்-2 (12)


ADDED : ஜன 09, 2018 09:44 AM

Google News

ADDED : ஜன 09, 2018 09:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குந்தி தான், தன் தாய் என்று அறிந்த கர்ணன் மவுனமாய் நிற்க, கிருஷ்ணன் மெல்ல பேசத் தொடங்கினான்.

''கர்ணா...நான் முன்பே கூறியதைப் போல இந்த ரகசியச் செய்தி உன்னை ஸ்தம்பிக்க வைத்து விட்டதைக் காண்கிறேன். அதே சமயம் பாண்டவர்கள் உன் சகோதரர்கள் என்கிற ஒரு புதிய உறவு உருவாகிவிட்டதையும் காண்கிறேன். சகோதரர்கள் சண்டையிட்டுக் கொள்ளலாமா என்று மட்டும் நான் கேட்க மாட்டேன். கேட்டால் நான் இந்த யுத்தத்தை தடுத்து நிறுத்தவே இந்த ரகசியத்தை இப்போது சொன்னதாக நீ கருதக்கூடும். இனி உன்பாடு, குந்திபாடு! ஒரு ரகசிய பாரம் என் வரையில் இறங்கி விட்டது!'' என்ற கிருஷ்ணனை கர்ணன் நெருங்கிச் சென்று கூர்மையாகப் பார்த்தான்.

''என்ன அப்படிப் பார்க்கிறாய் கர்ணா..''

''நீ மாயாவி மட்டுமல்ல கிருஷ்ணா... அதற்கும் மேல்''

''பாராட்டுகிறாயா இல்லை நாகரிகமாக திட்டுகிறாயா?''

''நீ எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள். உண்மையில் நீ என்னைக் காண வந்தால் உன்னை ரணப்படுத்தி அனுப்ப வேண்டும் என்றே எண்ணியிருந்தேன். ஆனால் நீ சொன்ன உண்மையால் நான் ரணமாகி விட்டேன்... என் மனது இப்போது எப்படித் தவிக்கிறது என்பது உனக்குத் தெரியாது?''

''ஏன் தெரியாது..? நானும் உன்னைப் போலத்தான்! நீ ஆற்றில் போனாய்; நான் கூடையில் போனேன். அவ்வளவு தான் வித்தியாசம்.''

''கிருஷ்ணா, இப்போது நீ என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?''

''நான் சொல்ல எதுவுமில்லை. சொல்ல வேண்டியவைகளை எல்லாம் ஒரு முறைக்கு பலமுறை துரியோதனன் முன்னால் நீங்கள் எல்லோரும் இருக்கக் கூறிவிட்டேன். யுத்தம் தான் தீர்வு என்றும் முடிவாகி விட்டது. இனி அதற்கு மேல் பேச என்ன உள்ளது கர்ணா?''

''கிருஷ்ணா... நான் வெட்கத்தை விட்டு ஒப்புக்கொள்கிறேன். உன்னோடு பேசி வெல்ல என்னால் முடியாது. ஆனால் என்னை இப்போது, நீ வேறு விதமாய் கட்டிப் போட்டு விட்டாய்.''

''நீ துரியோதனனுடன் நின்று போரிடப் போவதில்லை என்கிறாயா?''

''இல்லை.. இல்லை.. அது மட்டும் என்னால் முடியவே முடியாது''

''அப்படியானால் நான் உன்னை கட்டவில்லை என்று தானே பொருள்?''

''யுத்த களத்தை விட என்னை பெத்த களம் கண்டு, அதில் கட்டிப் போட்டு விட்டாயே?''

''நான் எப்படி கட்டிப் போட்டேன்?

குந்திக்கு நீ பிள்ளை என்பது உன் கர்மத்தாலும் அவள் கர்மத்தாலும் வந்தது. துரியோதனன் நட்பில் கட்டுண்டு கிடந்த உன்னிடம் அந்தக் கட்டை சுட்டிக் காட்டினேன். நான் காட்டியவன்! கட்டியவனல்ல!!''

''எது எப்படியோ யுத்தம் காணும் முன்பே என் பித்தம் கலங்க வைத்து விட்டாயே...?''

''சுத்த வீரர்கள் கலங்க மாட்டார்கள். கலங்கினாலும் தெளிந்து விடுவார்கள் கர்ணா..''

''உண்மை தான்.. நானும் தெளிவேன் நிச்சயம் தெளிவேன். அதே சமயம் யுத்த களத்தையும் மறுதலிக்க மாட்டேன்.''

''பாவம் நீ.. இது நாள் வரை உனக்கு உன்னையே தெரியவில்லை. இன்று தெரிந்தும் அதனால் பயனில்லை. காலம் எப்போதும் உனக்கு எதிராகவே உள்ளது. அன்று தாயிடமிருந்து பிரித்தது. இன்று சகலரிடம் இருந்தும் உன்னை பிரிக்கப் பார்க்கறது. நீ நினைத்தால் ஊரறிய உலகறிய நீயும் பாண்டவர்களில் ஒருவன் என்றாகலாம். ஆனால் துரியோதனன் ஆக விட மாட்டான். நீயும் அவனை விட மாட்டாய்..''

''சரியாகச் சொன்னாய்... உனக்கு வேண்டுமானால் அவன் படுபாவியாக இருக்கலாம். ஆனால், எனக்கு அவன் என் ஆவி! ஆற்றில் விட்ட தாயை விட அரசனாகவே ஆக்கிய அவன் எனக்கு மிக உயர்ந்தவன். ஒரு தேரோட்டி மகனை சீராட்டியவன் அவன்.''

''நான் கேட்கிறேன் என்று என்னை தவறாக கருதாதே.. உன் நட்பும் விசுவாசமும் மிக மிக பாரட்டுக்குரியது. சொல்லப்போனால் அதுவே தர்மம். இத்தனை தர்ம மிக்க உன்னை கேட்கிறேன், துரியோதனன் செயல்பாடுகளில் துளியும் தர்மம் உள்ளதா?''

''நீ என்ன சொல்ல வருகிறாய்?''

''தர்மம் மிக்கவர்கள் தர்மம் மிக்கவர்களை அல்லவா ஆதரிக்க வேண்டும்?''

''கிருஷ்ணா... நான் முன்பே சொன்னது போல் நீ பெரிய மாயக்காரன். என் பேச்சை வைத்தே என்னை வளைக்கப் பார்க்கிறாயே?''

''பார்த்தாயா? என்னை குறை கூறத்தான் உன்னால் முடிந்ததே தவிர, துரியோதனன் தர்மம் மிக்கவன் என்று உன்னால் கூற முடிந்ததா?''

''கிருஷ்ணா தயவு செய்து இதற்கு மேல் எதுவும் பேசாதே. என் பிறவி ரகசியத்தை கூறியதற்கு உனக்கு என் நன்றிகள். எனது இந்தப் பிறவி கொடுப்பதற்காகத் தான். எதையும் பெறுவதற்கானது இல்லை என்பது எனக்கு நன்றாக தெரியும். தாய்பாலைக்கூட பெற முடியாத பெரும் பாவி நான். அப்படிப்பட்ட பாவியாகிய நான், பாவிகளுடன் தான் சேர வேண்டும், பாவிகளாலேயே ஆதரிக்கப்பட வேண்டும் என்று நீ சொன்ன அந்தக் கர்மவினை தீர்மானித்து விட்ட நிலையில் ஒரு பொம்மையான என்னால் என்ன செய்து விட முடியும்? இதை அறியாதவனா நீ?''

''கர்ணா.. இப்போது நீ தான் மிகச் சாதுர்யமாகவும், அதே சமயம் சரியாகவும் பேசியுள்ளாய். உன் விருப்பம் போலவே செயல்படு.''

''நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நான் அப்படித்தான் செயல்படுவேன். ஆட்டி வைக்கின்ற உனக்கா தெரியாது?'' என கர்ணன் கேட்க, கிருஷ்ணனும் புன்னகைத்தபடியே விடை பெற்றான். கிருஷ்ணன் வந்த போது 'வா' என்று கூட சொல்லாத கர்ணன், இப்போது கிருஷ்ணனை வாயில் வரை சென்று, ரதத்தில் ஏறி செல்லும் வரை நின்று வழியனுப்பி வைத்து விட்டு திரும்பினான்.

அவனையே பார்த்தபடி நின்றிருந்தாள் சுபா.

''பிரபோ.. உங்கள் முகத்தில் இப்போது நான் புதிய ஒரு உணர்ச்சியை பார்க்கிறேன்''

''உண்மை தான் சுபா''

''கிருஷ்ண பிரபு வந்தபோது ஏறெடுக்காதவர், இப்போது வழியனுப்பி விட்டு வருவது மகிழ்ச்சி தருகிறது''

''உனக்கு மகிழ்ச்சி என்றால் எனக்கும் மகிழ்வே''

''இந்த மகிழ்வின் பின்புலத்தை நான் அறியலாமா?''

''இப்போது வேண்டாம். யுத்தம் முடியட்டும்''

''யுத்தம் நிச்சயமா?''

''ஆம். உன் கிருஷ்ண பிரபு அசைத்துப் பார்த்தான். நான் அசையவில்லை''

கர்ணனின் பதில் சுபா முகத்தில் ஒளியை வற்றச் செய்தது.

''நீ கவலைப்படாதே! இன்று உன் வாழ்வில் முக்கியமான நாள். என்னையே எண்ணி நான் மகிழ்கின்ற நாள்...''

''உங்களையே எண்ணியா... புரியவில்லையே?''

''யுத்தம் முடியட்டும்... உனக்கு மட்டுமல்ல உலகுக்கே புரிந்து விடும்''

கர்ணனின் பிடி கொடுக்காத பேச்சால் சுபா மேலும் சலனமே கொண்டாள். ஆனால் கர்ணனோ மாடத்தின் வழியாக தென்பட்ட சூரியனை எப்போதும் இல்லாதபடி பார்த்தான்!

ஹஸ்தினாபுரத்திலுள்ள மாடத்தில் இருந்து பார்த்தபடி இருந்தாள் குந்தி. போருக்கு குதிரைகள் தயாராகிக் கொண்டிருந்தன.!

செருமியபடியே அவளிடம் வந்தான் கிருஷ்ணன். கர்ணனைக் கண்டு பேசிய, அவ்வளவையும் சொல்லி முடித்தான்.

யுத்தப்பிடியை விடாத கர்ணனை எண்ணி சிலையாகி விட்டாள் குந்தி.

''அத்தை.. கலக்கத்தை விடு. இனி யார் நினைத்தாலும் யுத்தத்தை தவிர்க்க முடியாது. இந்த யுத்தம் காலகாலத்துக்கும் மானுட சமூகத்திற்கு ஒரு தர்ம யுத்தமாக நிலைபெறப்போகிறது. இந்த யுத்தத்தில் வெற்றிக்கான வழிகளை மட்டும் யோசி.''

''வெற்றிக்கான வழியா? நீ என்ன சொல்கிறாய் கிருஷ்ணா... யுத்தத்தில் யாராவது ஒருவரல்லவா வெற்றி பெற முடியும். அப்படிப் பார்ததால் இருபுறத்திலும் என் பிள்ளைகள் உள்ளனரே! இதில் யார் மாய்ந்தாலும் எனக்கு தோல்வி தானே?''

''உன்னை மையமாக வைத்து சிந்திக்காமல் தர்மத்தை வைத்து சிந்தி'' என்றான் கிருஷ்ணன்.

சுருக்கென்றது குந்திக்கு!

- தொடரும்

- இந்திரா சவுந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us