sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

மனசில் பட்டதை... (37)

/

மனசில் பட்டதை... (37)

மனசில் பட்டதை... (37)

மனசில் பட்டதை... (37)


ADDED : ஜன 09, 2018 09:42 AM

Google News

ADDED : ஜன 09, 2018 09:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்னுமொரு புத்தாண்டு... இன்னுமொரு புது விடியல்... இன்னுமொரு புது தரிசனம்... இன்னுமொரு புது வானம்... இன்னுமொரு புது வெளிச்சம்...

ஜீவோ ஜீவஸ்ய ஜீவனம் - உயிரின் உயிர்நாடியே உயிர்ப்பு தான் என்பது நமக்கான ஞானம்.

''இன்று புதிதாய் பிறந்தோம் என்று நீவிர்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு

தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்''

- இது பாரதியார் நமக்குத் தரும் ஞானம்.

நாம் எல்லோருமே நகரும் அழுக்கு மூடைகளாக வாழவா பூமிக்கு வந்திருக்கிறோம்? நாம் எல்லோரும் நகரும் சாக்கடைகளாக வாழவா பூமிக்கு வந்திருக்கிறோம்? நாம் எல்லோரும் நகரும் சகதிகளாக வாழவா பூமிக்கு வந்திருக்கிறோம்? நாம் எல்லோரும் நகரும் அவ நம்பிக்கையாக வாழவா பூமிக்கு வந்திருக்கிறோம்?

இறைமை நமக்குத் தந்திருக்கும் நிமிடங்களுக்கும், நாட்களுக்கும், வருஷங்களுக்கும், சந்தோஷப்படவும், நன்றி சொல்லவும் புத்தாண்டில் இறை தரிசனம் அமையட்டும்.

''குறை ஒன்றும் இல்லை

மறை மூர்த்தி கண்ணா

குறை ஒன்றும் இல்லை கண்ணா

குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா

கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் நின்றிருக்க

வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா...

இப்படி ராஜாஜியின் பாடல் நமக்கு சொல்லும் ஞானம் வாழ்வியல் வேதம்.

துளித்துளியாகக் கரைகிறது நேரம். துளித் துளியாகக்கரைகிறது வாழ்க்கை. தண்ணீரில் கரையும் சர்க்கரையாக காலத்துக்குள் நாம் கரைந்து கொண்டே இருக்கிறோம். முன்பு கரைந்த நேற்றுகள் எங்கு போயின? இப்போது கரையும் இன்றுகள் எங்கு போகும்? இனி வரவிருக்கும் நாளைகள் எங்கிருந்து வரும்? போகும்?

இந்தப் பெரிய பிரபஞ்சத்தில் நாம் ஒரு துளியின் மிகச் சிறிய அங்கம். ஆனால் நமக்கு இருக்கும் அகங்காரம் பூமியை விட பெரிது. வானத்தை விடப் பெரிது. கடலை விடப் பெரிது. காலத்தை விடவும் பெரிது. காலம் காலமாக நிரந்தரமாக இங்கே நிலைத்திருப்போம் என்பதான மமதையில், இறைமையை கேள்வி கேட்கும் நமக்கு ஒற்றை ஞானம் கைவரப்பெற்றால் போதும்.

கோடானு கோடி ஆயிரம் ஆண்டுகளில் நமக்கான வருடங்கள் 60, 70, 80, 90. இத்தனை வருடங்களில் தரப்பட்டிருக்கும் வாழ்வைக் கம்பீரமாக கடந்து போகும் பக்குவத்தை இந்த புத்தாண்டில் வேண்டிப் பெறலாம்.

பூக்கள், கடக்கும் காலத்தை நினைத்து வருந்துவதில்லை. காற்று, கடக்கும் காலத்தை நினைத்து வருந்துவதில்லை. தன் இயல்பில் நிலைத்திருக்கும் பூவாக நாமும் இருப்போம். காற்றாக நாமும் இருப்போம். மனிதம் என்னும் இயல்பில் நிலைத்திருப்போம்.

நாயாக, நரியாக, புலியாக, பூனையாக, குரங்காக, பாம்பாக, வேம்பாக, வீம்பாக இருக்கிறோம். மனிதனாகவும் இருந்து பார்க்கலாம். அந்த உன்னதத்தை இந்த புத்தாண்டில் புது தவமாக கொள்ளலாம்.

இந்த ஆங்கில புத்தாண்டு வித்தியாசமானது. இந்த பிப்ரவரி மாதம் 823 வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம். நான்கு ஞாயிற்றுக் கிழமைகள். நான்கு திங்கள் கிழமைகள். நான்கு செவ்வாய்க் கிழமைகள். நான்கு புதன் கிழமைகள். நான்கு வியாழக்கிழமைகள். நான்கு வெள்ளிக்கிழமைகள். நான்கு சனிக்கிழமைகள் என்று வித்தியாசங்களின் பூங்கொத்தாக மலருகிறது. வியப்பும், பூரிப்புமாக நாமும் வித்தியாசமானவர்களாக மலருவோம்.

புத்தாண்டு சபதம் என்னும் ஈரம் காயும் முன்பாக பழைய மனிதனாக மாறி விட வேண்டாம். பழைய குணங்களுக்குள் தாவிவிட வேண்டாம்.

கோயிலுக்குச் சென்று விளக்கு வெளிச்சத்தைப் பார்ப்பது மட்டும் போதுமா? அணையா விளக்கு எரியும் திருப்பீடமாக நமது மனசைப் புனிதப்படுத்த வேண்டும்.

இரு கை கூப்பி வணங்கினால் மட்டும் போதுமா? இருகை இணைவது மாதிரி எல்லோருடனும் இணக்கம் கொள்வது என்று நமது வாழ்வை நெறிப்படுத்த வேண்டும்.

பழங்களைப் போல, நமது எண்ணத்தை கனிய வைக்க வேண்டும். தீர்த்தம் போல, நமது வார்த்தகைளை ஈரப்படுத்த வேண்டும். பூமாலை போல, நமது விடியல்களை வர்ண வான வில்லாக்க வேண்டும்.

லா.ச.ராமாமிர்தம் சொல்லுகிறார்,

''நீ காலத்தைப் போக்க இங்கு வரவில்லை.

நீ காலத்தோடு போகவும் இங்கு வரவில்லை.

நீ காலத்தை நிறுத்த வந்திருக்கிறாய்.

ஒரு கணத்தில் ஒரு யுகம் பண்ண வந்திருக்கிறாய்.

நீ நித்யன்''.

நம் சொல்களால், சிந்தனையால், வார்த்தையால், புன்னகையால் புதிதாய் பிறப்போம்.

இன்று புதிதாய் பிறந்தோம் என்ற பாரதியார் செய்தியை நெஞ்சில் சுமந்து இறைமையைப் பிரார்த்திப்போம். எனது புத்தாண்டு வீட்டின் திருவிளக்கு முன்னால், மென்மையாக, மதுரமாக, புனிதமாகப் புலரும். 'குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா' என்பதே என் வேண்டுதலாக மலரும்.

- இன்னும் சொல்வேன்

அலைபேசி: 94440 17044

ஆண்டாள் பிரியதர்ஷினி






      Dinamalar
      Follow us