ADDED : ஜன 09, 2018 09:35 AM

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. நதி கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்காமல் நகர்ந்து கொண்டே இருப்பது போல, காலமும் நொடி, நிமிடம், நாள், வாரம், மாதம், வருடம் என விரைந்து கொண்டே இருக்கிறது.
'இந்தாருங்கள், 2018ம் ஆண்டிற்கான காலண்டர், டைரி. என் அன்பளிப்பாக வைத்துக் கொள்ளுங்கள்' என்று கொடுத்தவரிடம், பெற்றுக்கொண்டவர் சொன்னார்
'இப்போது தான் வந்தது போல் இருக்கிறது 2017ம் ஆண்டு. அதற்குள் முடிந்து விட்டதே!' அருட்பாவில் ராமலிங்க வள்ளலார் பாடுகிறார்:
'ஓடுகின்றனன் கதிரவன்! அவன்பின்
ஓடுகின்றன ஒவ்வொரு நாளாய்!'
நம் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த கால துன்பங்களுக்காக கண்ணீர் சிந்தியும், வருங்கால எதிர்பார்ப்புகளுக்காக ஏங்கியும், நிகழ்காலத்தை நிர்மூலமாக்கி விடுபவர்கள், உள்ளங்கையில் பழம் இருந்தும் உண்ணத் தெரியாதவர்கள்.
கவிஞர் ஒருவர் பாடுகிறார்,
'கடந்த காலம் - அது
நடந்த காலம்.
எதிர் காலம் - அது
புதிர் காலம்.
நிகழ் காலம் - அதுவே
மகிழ்காலம்!'
புத்தர் சொன்ன சேதி என்ன தெரியுமா?
'உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் வாழ்நாளும் ஒரே ஒரு மூச்சு தான்!'
சுற்றி அமர்ந்திருந்த அவரது சீடர்களுக்கு தலை சுற்றியது.
சீடர் ஒருவர் கேட்டார், 'மனிதர்களின் வாழ்நாள் சராசரியாக அறுபது ஆண்டுகள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அறுபது வருடங்களில் அவர் விடும் மூச்சு அநேகம் ஆயிற்றே. அப்படி இருக்க ஒரே ஒரு மூச்சு என்று சொல்கிறீர்களே...'
புன்னகையுடன் புத்தர் சொன்னார்.
'மனிதர்கள் வாழும் ஆண்டுகளில் பலமுறை மூச்சு விடுகின்றனர். சுவாசம் ஒவ்வொன்றிலும் அவர்கள் வாசம் செய்ய வேண்டும். வழங்கப்பட்டுள்ள நேரத்தை, விழலுக்கு இறைக்காமல். விளைச்சலை காண்பவன் தானே வாழ்வாங்கு வாழ்பவன்!'
இன்று புதிதாய் பிறந்தோம் என்ற எண்ணமதை திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்!
என்று பாரதியாரும் பாடியுள்ளார்.
ஒவ்வொரு நொடியும் பயனின்றி கழிந்து விடாமல், ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபடுவதும், அதற்காக பாடுபடுவதும் தான் ஒருவரை உயரத்தில் உட்கார வைக்கும்.
'பிறகு பார்த்துக்கொள்ளலாம்' என்று காலத்தை தள்ளிப் போடுபவர்களை காலம் தள்ளிப் போட்டுவிடும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சாலை, சங்கம், சபை என மூன்று அமைப்புகளை ஆரம்பித்து ஆன்மிகப் பணியாற்றியவர் வள்ளலார்.
மனம், வாக்கு, காயம் என மூன்றினாலும் மனிதர்கள் வலிவும், பொலிவும் பெற்று வாழ வேண்டுமென விரும்பினார் வள்ளல் பெருமான்.
மனம் துாய்மையுற சபை, வளமான வாக்குபெற சங்கம், 'காயம்' எனும் நம் சரீரம் ஊட்டம் பெற சாலை ஆகியவற்றை வடலுாரில் நிறுவினார்.
புதிதாக அமைப்பு ஒன்றை தொடங்க விரும்புபவர்கள், பொதுவாக என்ன செய்வர் என்பது நாம் அறிந்த ஒன்று தானே.
ஆடம்பரமாக அழைப்பிதழ் அச்சடித்து பெரிய பிரமுகர்கள், பொதுமக்கள் முன்னிலையில் திறந்து வைப்பர். அத்துடன் சரி. அவை செயல்பட சில ஆண்டுகள் ஆகும். சில அமைப்புகளுக்கு அடிக்கல்லே 'நடுகல்' ஆகிவிடும் அபாயமும் உண்டு.
ஆனால் அடிகளார் 'அன்னமிடும் தருமசாலை' கட்டடத்திற்கு கால்கோல் விழா நடத்திய அன்றே, இலை போட்டு உணவுப்பந்தியை துவக்கி வைத்தார். இது அகில உலக அளவில் முத்திரை பதித்த நிகழ்வு.
அவர் ஏற்றிய அடுப்பு இன்னமும் எரிந்து கொண்டிருக்கிறது. பலரின் பசி நெருப்பை அணைத்துக் கொண்டிருக்கிறது.
எதையும் தாமதப்படுத்தாதே, ஒத்தி வைக்காதே, பிறகு பார்க்கலாம் என்று காலம் தாழ்த்தாதே என்று நம் அனைவருக்கும் உபதேசிக்கிறது தருமச் சாலையின் அடுப்பு. செம்மொழித் தமிழின் சங்க நுாலாகிய புறநானுாறு புகழ்கின்றது,
'நன்றே செய் - அதுவும்
இன்றே செய்!'
என்பதோடு அமையாமல், 'இன்னே செய்க' என்றும் பொருள் பொதிந்த ஒரு அறிவுரையை நமக்கு வழங்குகின்றது. இன்னே செய்க என்றால் இப்போதே, இக்கணமே, இந்த வினாடியே என்று பொருள்.
காலத்தை பயன்படுத்தி எச்செயலையும் செய்ய முடியும். ஆனால் எதைப் பயன்படுத்தியும் காலத்தை மீண்டும் பெற முடியாது, என்பதை உணர்ந்து தள்ளிப்போடும் நடவடிக்கையை அறவே நாம் தவிர்க்க வேண்டும்.
ஒரு புதுக்கவிஞர் சொல்கிறார்,
'எம்மதமும் நமக்கு சம்மதமே
தாமதத்தை தவிர!'
தொடரும்
அலைபேசி: 98411 69590
திருப்புகழ் மதிவண்ணன்