ADDED : செப் 19, 2023 12:22 PM

காஞ்சி மஹாபெரியவரை தரிசிக்க ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிலர் வந்தனர். ''சாமி... எங்கள் கிராமத்தில் விநாயகர் சிலை திருட்டுப்போய் விட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை'' என முறையிட்டனர். அதற்கு அவர், ''உங்க கிராமத்தில் ஏரி இருக்கா? அதில் தண்ணீர் உள்ளதா?'' எனக் கேட்டார். ஒன்றும் புரியாமல் வந்தவர்கள் விழித்தனர். அவர்களில் ஒருவர், ''சுவாமி. ஏரியை துார்வார வரவில்லை. தண்ணீர் கொஞ்சமா இருக்கு'' என்றார்.
''ஏரியிலே நிறைய தண்ணீர் இருந்தா மக்களுக்கும், வாயில்லாத ஜீவன்களும் பயன்படும் அல்லவா. முதலில் ஏரியை ஆழப்படுத்துங்கோ. புண்ணியம் கிடைக்கும்'' என சொல்லியபடி பிரசாதம் கொடுத்தார் மஹாபெரியவர். இதற்கு 'போய் வாருங்கள்' என தெரியாததால், தயங்கியபடி நின்றனர். பின்னர் ஏமாற்றத்துடன் கிளம்பினர்.
ஊர் திரும்பியதும் அவர்கள் நடந்ததை மக்களிடம் தெரிவித்தனர். உடனே ஒருவர், 'அரசின் வேலையை நம்மைச் செய்ய சொல்கிறாரே பெரியவர்' என ஆதங்கப்பட்டார். அதற்கு கிராமத்தலைவர், 'மஹா பெரியவாவின் வாக்கு இது. அவர் எதைச் சொன்னாலும் ஓர் அர்த்தம் இருக்கும். வாருங்கள். எல்லோரும் சேர்ந்து ஏரியை துார்வாருவோம்' என அழைத்தார். ஒரு நல்ல நாளில் ஏரியை துார்வாரும் பணியை தொடங்கினர். சிறிது நேரத்திலேயே 'டங்'கென்று சத்தம் கேட்டது. தோண்டுபவர் உடனடியாக கடப்பாரையை வைத்துவிட்டு, கையால் மண்ணை தோண்டினார். அதற்குள் மக்கள் கூடிவிட்டனர்.
அவர்களுக்கு ஓர் அதிசயம் காத்திருந்தது. பிள்ளையார் அவர்களுக்கு முன் ஜம்மென்று காட்சி தந்தார். ஆம். அவர்கள் எதிர்பார்த்த பிள்ளையார் சிலை கிடைத்தது. அவர்களுக்கோ ஒரே மகிழ்ச்சி. பின் அதே வேகத்தில் பணியைத் தொடர்ந்தபோது மீண்டும் ஓர் அதிசயம். சிவலிங்கம் ஒன்று அருள் பொழிய வெளிப்பட்டது. அது மட்டும் அல்ல. மீண்டும் தோண்டியபோது ஒரு கோயிலுக்கு தேவையான அம்பாள், நந்தி, முருகன், பலிபீடம், துர்கை என அனைத்து தெய்வச்சிலைகளும் வெளிப்பட்டன. அவ்வளவுதான்.
மஹாபெரிவரின் அருளை நினைத்து மக்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். பின் குதுாகலத்துடன் கிராமமே காஞ்சி மடத்திற்கு முன் குவிந்தது. அவர்கள் பக்தி பரவசத்துடன், 'சாமி. நாங்க உங்ககிட்ட ஒரு விநாயகர் சிலைதானே கேட்டோம். இப்போ உங்களோட அருளால் ஒரு கோயிலே கிடைச்சிருக்கு' என மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.
வெளியே வந்த மஹாபெரியவர், ''ஏரிக்கரையிலே ஒரு கீற்றுக்கொட்டகை அமைத்து சிலைகளை வையுங்க. தினமும் விளக்கேற்றி, பழங்கள் நிவேதனம் செஞ்சுட்டு வாங்க. அந்த ஆனைமுகனே எல்லாம் பார்த்துப்பார்'' என விடை கொடுத்து அனுப்பினார்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.