ADDED : செப் 10, 2023 06:30 PM

துவாதசி தோறும் விஜயம்
ஸந்த் துகாராம் எழுதிய 'த்ருஷா காளீம்' எனத் தொடங்கும் 'அபங்' பாடலின் பொருள்.
''தாகம் எடுக்கும் போது தண்ணீர் கிடைத்தால் ஆர்வத்துடன் குடிக்கிறோம். பசிக்கும் போது அறுசுவை உணவு கிடைத்தால் போதும் போதும் என்னும் அளவுக்கு சாப்பிடுகிறோம். தாயைக் கண்டதும் குழந்தை குதுாகலம் அடைகிறது. அதை போலவே ஆத்ம நண்பர்களான ஸந்த்களின் நல்லுறவு மகிழ்ச்சி தரும்'' என்கிறார்.
...
'பாண்டுரங்கன் அருளால் மீண்டும் கைகளும், குழந்தையும் கிடைக்கப் பெற்ற குயவர் கோராகும்பர் வாழ்ந்த கிராமத்துக்கு சென்றிருக்கிறேன்' என்றார் பத்மநாபன்.
கோராகும்பர் கதையைக் கேட்டு முடித்த பத்மாசனியும் குழந்தைகளும் மனம் நெகிழ்ந்து போயிருந்தனர். பத்மநாபன் அவர்களிடம், 'மகாராஷ்டிராவில் டேர் என்னும் கிராமத்தில் தான் கோராகும்பர் வாழ்ந்தார். அங்கு ஒரு சிவன் கோயில் மட்டுமே இருக்கிறது. சிவனை வழிபட்டாலும் கோராகும்பரின் மனம் ஈடுபட்டது விட்டலனிடம் மட்டுமே. கோராகும்பரை அங்குள்ள மக்கள் 'கோரோபா' என அழைக்கின்றனர். அவர் மண்பாண்டம் செய்த இடம் தற்போது இரும்புத் தகடு வேய்ந்து எளிமையாக காணப்படுகிறது' என்றார்.
எளியவர்களிடம் அன்பு காட்டுவதில் விட்டலனுக்கு இணை அவனேதான் என பத்மநாபன் எண்ணியபோது அவருக்கு சோக்காமேளரின் வரலாறு நினைவுக்கு வந்தது. அதைக் குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.
...
அக்காலத்தில் தீண்டத்தகாதவர் எனக் கருதப்பட்ட பஞ்சமர் குலத்தில் பிறந்தவர் சோக்காமேளர். மது, மாமிசத்தை தவிர்த்து தனிப்பட்ட வாழ்வில் ஒழுக்கமுடன் வாழ்ந்தவர். விட்டலனை எந்நேரமும் வழிபட்டவர். அபங்கம் என்னும் பாடல்களை பாடியவர்.
ஆனால் விட்டலன் கோயில் வாசலில் இருந்து மட்டுமே அவரால் பாட முடிந்தது. கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லாததால் திருவிழாவின்போது ஊர்வலம் வரும் விட்டலனைக் கண்டு வழிபடுவார். எல்லா உயிர்களிலும் கடவுள் இருக்கிறார் என்பதை தன் பாடல்களில் வலியுறுத்தி வந்தார். சிலருக்கு இது பிடிக்கவில்லை. அவர்கள் அவரை ஏசத் தொடங்கினர். மனம் வருந்திய அவர் ஒருநாள் கோயிலில் பாடி விட்டு வரும் போது வீட்டில் விட்டலன் காத்திருந்தான்.
விட்டலனின் பாதங்களை கண்ணீருடன் வணங்கினார் சோக்காமேளர். இது ஆனந்தக் கண்ணீர் அல்ல. என்பதால் அதற்கான காரணத்தைக் கேட்டான்.
'விட்டலா... உன் கோயிலுக்குள் வர முடியவில்லை. வாசலில் நின்று பாடினாலும் குறை சொல்கிறார்களே...' எனக் கதறி அழுதார்.
'நீ எதற்காக பண்டரிபுரம் வருகிறாய்' எனக் கேட்டான் விட்டலன்.
உனக்காக மட்டுமே' என்றார் சோக்காமேளர்.
'அவ்வளவு தானே, இனி நானே உன்னைத் தேடி வருகிறேன்' என்றான் விட்டலன்.
சோக்காமேளர் புளகாங்கிதம் அடைந்தார். 'இதை விட என்ன பாக்கியம் வேண்டும்' என்றாலும் உன் கோயிலை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என மனம் ஏங்குகிறது' என்றார்.
'அவ்வளவு தானே?' என்றான் விட்டலன். அவரது கையைப் பற்றிக்கொண்டு கோயிலுக்குச் சென்றான். கதவு பூட்டப்பட்டிருந்தன. அவை தானாகத் திறந்து கொள்ள இருவரும் கருவறைக்குள் சென்று பேசத் தொடங்கினர்.
கோயில் திறக்கப்பட்டு உள்ளிருந்து பேச்சுக் குரல் கேட்பதை அறிந்த ஊரார் திடுக்கிட்டனர். கருவறைக்குள் சோக்காமேளர் நிற்பதைக் கண்டு, ' பூட்டை உடைத்துக் கொண்டு ஏன் வந்தாய்?' எனக் கேட்டனர்.
நடந்ததை விளக்கினார் சோக்காமேளர். அவர்கள் அதை ஏற்கவில்லை. 'இனி பண்டரிபுரம் எல்லைக்குள் நீ நுழையக் கூடாது. சந்திரபாகா நதியின் மறுகரையில் குடிசை அமைத்து குடியேறு' எனக் கட்டளையிட்டனர்.
சோக்காமேளர் சந்திரபாகா நதியின் மறுகரையில் வாழத் தொடங்கினார். ஏகாதசி வரவே விரதமிருந்தார். அடுத்த நாள் காலையில் உண்ணத் தொடங்கும் போது 'துவாதசி பாரணையை (உணவை) நானும் உன்னுடன் செய்யலாமா? இனி ஒவ்வொரு துவாதசி காலையிலும் உன்னோடுதான் உண்பதாக இருக்கிறேன்' எனக் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்த போது விட்டலன் நின்றிருந்தான்!
அடுத்த துவாதசியன்று சோக்காமேளரின் வீட்டருகில் அந்தணர் சிலர் போய் கொண்டிருந்தனர். அப்போது உரத்த குரலில் தன் மனைவியிடம், 'சீக்கிரம் சமையல் செய். விட்டலன் சீக்கிரம் வந்து விடுவான்' என்றார்.
தங்களை சீண்டிப் பார்க்கவே சோக்காமேளர் இப்படி பொய் சொல்வதாக எண்ணிய அவர்கள் மன்னரிடம் கூறினர். விசாரணையின் போது ஒவ்வொரு துவாதசியன்றும் தன் வீட்டுக்கு சாப்பிட வருவதை மன்னரிடம் தெரிவித்தார் சோக்காமேளர். ஆனால் பொய் சொல்வதாக கருதி மன்னர் கோபம் அடைந்தார். ஊருக்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டில் சோக்காமேளரை விட்டு விடச் செய்தார். அங்கு மாடுகள் முட்ட வந்த போது விட்டலன் மீது பாடல் பாடினார். மாடுகள் அமைதியடைந்து பின்வாங்கின. இதன்பின் சோக்காமேளர் வீடு திரும்பினார். அவரது பெருமை ஊரெங்கும் பரவியது.
அதன் பின்னும் விட்டலன் வேறொரு அதிசயத்தை நிகழ்த்தினான். அடுத்த துவாதசியன்றும் வீட்டுக்கு தேடி வந்து, ''சோக்கா... இன்று நாம் வீட்டுக்கு வெளியே சாப்பிடுவோம்'' என அழைத்தான். அங்கிருந்த மரத்தின் மீது இருந்த காகங்கள் விட்டலனைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் கத்தின. சோக்காமேளரோ வருத்தப்பட்டார்.
விட்டலன் உணவை காக்கைக்கு அளித்து விட்டால் அவனுக்குப் பசிக்குமே! தன் வீட்டில் அதிக உணவும் கிடையாதே' என எண்ணி கைகளால் காகங்களை விரட்ட முயற்சித்தார் சோக்காமேளர்.
-தொடரும்
ஜி.எஸ்.எஸ்.,
98841 75874