ADDED : செப் 10, 2023 06:29 PM

ஜெயத்ரதன்
ஜெயத்ரதனின் ரதமானது திரவுபதியோடு காம்யக வனத்தின் எல்லையை எட்டிய போது சரம் சரமாக வந்த அம்புகளால் ஒரு தடுப்புச் சுவர் உருவாகி ஜெயத்ரதனின் ரதமும் நின்றது. குதிரைகளும், புழுதி கவளத்தின் நடுவே பெரிதாக கனைத்து மிரண்டு பின்வாங்கின.
ஜெயத்ரதன் இதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் திரவுபதியோ அதை பார்த்து, ''வந்து விட்டார்கள் என் பதிகள். இது என் கணவர் அர்ஜுனரின் கைவண்ணம்! பாணங்களால் சுவர் எழுப்புவதில் அவர் சூரர்'' என்றாள்.
அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஜெயத்ரதனின் மீது பாணமழை பொழியத் தொடங்கியது. தடுமாறியது அந்த ரதம். ஜெயத்ரதன் தேரில் இருந்து இறங்கியவனாக பாண்டவர்கள் எங்கிருந்து பாணமிடுகிறார்கள் என பார்க்கத் தொடங்கினான். அவன்முகம் எதிர்பாராத தாக்குதலால் வெளிரிப் போனது.
திரவுபதி பாதுகாப்பாக தேரின் நடுவில் நின்று கொண்டு கூக்குரலிட்டாள்.
''அடேய் ஜெயத்ரதா... என் கணவர்கள் வந்து விட்டார்கள். கைகள் கூப்பி அஞ்சலி செய்தபடி உயிர் பிச்சை கேள். அவர்களிடம் நேரில் வரவும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு விட்டு ஓடி விடு'' என்றாள்.
ஜெயத்ரதன் அதைக் கேட்டு கொதித்தான். ''பாண்டவர்களே... மறைந்திருந்து தாக்கும் வீரப்புலிகளே... துணிவிருந்தால் என் படையினரிடம் மோதுங்கள்'' என்றான்.
அடுத்த நொடியே மரம் ஒன்றில் இருந்து அர்ஜுனன் குதித்து முன்வந்தான். அவன் கண்கள் சிவந்திருந்தன. அம்பறாத்துாளியில் பாணங்கள் நிரம்ப இருந்தன. தொடர்ந்து பீமன், தர்மன், நகுலன், சகாதேவன் நாலாபுறத்தில் இருந்தும் வெளிப்பட்டனர். அவர்களோடு மோதும் நோக்கில் தன் உடைவாளை எடுத்துக் கொண்டு ''தைரியம் இருந்தால் ஒவ்வொருவராக என் முன்னே வந்து மோதுங்கள்'' என அவர்களை சண்டைக்கு அழைத்தான். திரவுபதி ரதத்தை விட்டு இறங்கி தர்மனை நெருங்கிச் சென்று அவனோடு நின்று கொண்டாள்.
அர்ஜுனன் ஒரு வினாடி கூட தாமதிக்காமல் ஜெயத்ரதனின் கையில் இருந்த வாளை தன் பாணம் ஒன்றால் தட்டி விடவும் அது ஒடிந்து விழுந்து ஜெயத்ரதன் நிராயுதபாணியாக நிற்கத் தொடங்கினான்.
''பயப்படாதே. நிராயுதபாணிகளை நாங்கள் எப்போதும் தாக்கியதில்லை. தோள்வலிமையோடு நீ மல்லாடத் தயார் என்றால் சொல், பீமன் உன்னோடு மல்லாடுவான்... என்ன சொல்கிறாய்'' என கேட்டான் சகாதேவன்.
''அண்ணா நீங்கள் திரவுபதியோடு குடிலுக்கு செல்லுங்கள். நான் இவனுக்கு பாடம் கற்பித்து விட்டு வருகிறேன்'' என இடையில் பீமன் கூறவும் தர்மனும் திரவுபதியுடன் புறப்பட்டான். அதற்கு முன்பாக தன் சகோதரர்களிடம், ''இவனுக்கு பாடம் புகட்டுங்கள். மற்றபடி அதர்மமாக ஒரு காரியமும் செய்யக் கூடாது இது என்மீது ஆணை'' என்று கூறி விட்டு திரவுபதியோடு புறப்பட்டான் தர்மன். ஜெயத்ரதனுக்கு தர்மன் அப்படிச் சொன்னதோடு திரவுபதியை மீட்டுச் சென்றது ஒரு பெரும் வெட்கக்கேடாக இருந்தது. சகித்துக் கொண்டு, ''என் ஒருவனோடு மோத நான்கு பேரா... இது தான் உங்கள் வீரமா'' என அவர்களை சீண்டத் தொடங்கினான்.
''கொக்கரிக்காதே. ஒரு பத்தினிப் பெண்ணை ஜடப்பொருள் போல கருதி களவாட முயன்ற நீயெல்லாம் வீரம் பற்றி பேசவே தகுதியில்லாதவன்'' என்றான் நகுலன்.
''வேண்டுமானால் உன் படை வீரர்களை இங்கே வரவழைத்து அவர்களோடு சேர்ந்து கூட மோது. நாங்கள் அழிகிறோமா இல்லை அவர்களை அழிக்கிறோமா என்று பார்'' என்றான் அர்ஜுனன்.
''ஒரு நாட்டின் அரசனாக இருந்து கொண்டு இப்படி மாற்றான் மனைவியை அபகரிக்க துடிக்கிறாயே உனக்கு வெட்கமாக இல்லையா'' என்று கேட்டான் சகாதேவன்.
''போதும் நிறுத்துங்கள். என் மைத்துனன் துரியோதனனின் அடிமைகள் நீங்கள். அந்த வகையில் எனக்கும் நீங்கள் அடிமைகளே! உங்களைப் போல வனவாசியல்ல நான். பேரரசன். எத்தனை பேரையும் மணக்கும் உரிமை உடையவன்''
''அது ஒரு பெண்ணின் விருப்போடு நடக்க வேண்டும். வெறுப்போடு அல்ல''
''வனவாசிகளான உங்களையே திரவுபதி விரும்பி விட்ட நிலையில் என்னை அவள் ஏன் விரும்பக் கூடாது?''
''பைத்தியமே... எங்களோடு உன்னை ஒப்பிடாதே. அறம் அறியாதவனே இனியும் உன்னோடு பேசுவதால் பயனில்லை. பீமண்ணா இவனைக் கட்டித் துாக்கி வாருங்கள். இவனை மீட்டுச் செல்ல யாரெல்லாம் வருகிறார்கள் என்றும் பார்ப்போம்'' என்ற அர்ஜுனனின் கட்டளையை பீமன் உடனேயே செயல்படுத்தத் தொடங்கினான்.
ஜெயத்ரதன் மீது பாய்ந்து அவன் தலைமுடியை கொத்தாக தன் கையால் பிடித்து அப்படியே அவன் தலையை ஆட்டத் தொடங்கினான்.
ஜெயத்ரதனும் அவன் கையை தட்டி விட்டு அவனோடு மோதத் தொடங்கினான். பீமன் மார்பில் மாறி மாறிக் குத்தியும் பீமனிடம் எந்த பதில் அதிர்வுமில்லை. பதிலுக்கு பீமன் அவன் எதிரில் ஒரு மரத்தையே அப்படியே வேரோடு பிடுங்கவும் தான் அவன் பலமும் தெரிய வந்தது.
அடுத்த வினாடியே துளியும் யோசிக்காமல் தப்பி ஓடத் தொடங்கினான் ஜெயத்ரதன். ஆனால் நகுல சகாதேவர்கள் இடைமறித்து இழுத்து வந்து விட்டனர். ஜெயத்ரதன் திமிறிக் கொண்டு தப்பிக்கப் பார்த்தான். ஆனால் பீமன் விடவில்லை. பாய்ந்து அவன் தலைமுடியை பிடித்து குடுமி போல் அதைக் கட்டி, அந்த குடுமியைப் பிடித்து அப்படியே அவனை துாக்கிக் கொண்டு நடந்தான்.
''பீமண்ணா... இவனை இப்போது என்ன செய்யப் போகிறோம்'' என்று சகாதேவன் கேட்டான்.
''முதலில் இவன் திரவுபதி கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும். பிறகு அவளைத் தொட்டுத் துாக்கிய இவன் கைகளை வெட்டி முடமாக்கிய நிலையில் இவன் நாட்டு எல்லையில் விட்டு வர வேண்டும். கைகளை இழந்த இவனைப் பார்ப்பவருக்கெல்லாம் நாம் இவனுக்கு கொடுத்த தண்டனை ஞாபகத்துக்கு வர வேண்டும். குறிப்பாக அந்த துரியோதனன் முடமான இவனைப் பார்த்து மனம் குமுற வேண்டும்''
''நல்ல முடிவு. நம்மை அழிக்க நினைக்கும் துரியோதனனுக்கும் இது ஒரு நல்ல பாடமாக அமையும்'' என்றான் நகுலன். பீமனும் குடுமியைப் படித்த பிடியை விடாமல் அப்படியே துாக்கிக் கொண்டு போய் குடிலில் சோகமாய் அமர்ந்திருந்த திரவுபதியின் காலடியில் போட்டான். ஆனால் ஜெயத்ரதன் எழுந்து நின்றவனாக, ''பீமா... உன்னுடைய இந்த ரவுத்திரத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். நீ புலியை தீண்டி விட்டாய்'' என்றான்.
''நீ புலியா... அற்ப பூனையே! நாங்கள் இல்லாத நேரமாக வந்து எங்கள் மனைவியை தொட்டுத் துாக்கிச் சென்ற நீ புலியா? புலி கூட தனக்கான இரையைத் தான் பாய்ந்து கவ்வும். வருவது தெரியாமல் வந்து பூனை தான் பாலைக் குடிக்கப் பார்க்கும். நீயும் அப்படி ஒரு பூனை... புலியைக் கேவலப்படுத்தாதே'' என்று பீமன் பதிலுக்குச் சொன்னான்.
''இவனோடு என்ன பேச்சு. அடேய் திரவுபதியிடம் மன்னிப்பு கேளடா'' என்றான் அர்ஜுனன்.
''இவன் வாயால் சொன்னால் கேட்க மாட்டான்'' என்று பீமன் தன் கதாயுதத்தால் ஓங்கி அடித்தான். ஜெயத்ரதனும் தடுமாறிக் கீழே விழுந்தான். அடுத்து அடிக்கு பீமன் கதையை ஓங்கவும் தர்மனின் கைகள் பீமனைத் தடுத்தன.
''பீமா... நிறுத்து. நம் வலிமையை தனிமையில் இருக்கும் இவனிடம் காட்டுவது நம் வீரத்துக்கு அழகல்ல. அதோடு இவன் ஒரு நாட்டுக்கும் அரசன். இவனது பிரஜைகளை உத்தேசித்தாவது நாம் இவனை கவுரவமாக நடத்திட வேண்டும். அடுத்து இவன் யாரோ அல்ல... துச்சலையின் கணவன். துச்சலை நம் சகோதரி. நாமெல்லாம் பங்காளிகள்.
இவனை மன்னித்து விட்டு விடுவதே நமக்கு அழகு'' என்றான் தர்மன்.
-தொடரும்
இந்திரா செளந்தர்ராஜன்
98947 23450