
மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய பண்பு பொறுமை. பொறுத்தார் பூமியை ஆள்வார் என்றும், பொறுமை கடலின் ஆழத்தை விட பெரியது என்றும் கூறுவர். இந்த பண்பின் வடிவமாகவே திகழ்ந்தவர்கள் அருளாளர்கள். அவர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு வாழ்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ்வர்.
ராமநாமத்தின் சிறப்பை உலகெங்கும் பரப்பிய உத்தமர் பலர். பிறர்நலனில் அக்கறை கொண்ட அவர்கள், பரம்பொருள் ஒன்றே என்ற கொள்கையை உடையவர்கள். அவர்களில் ராமபக்த அனுமனின் அவதாரமாக கருதப்பட்டவர் சமர்த்த ராமதாசர். இவரது தவத்தைக் கண்ட மன்னர் சத்ரபதி சிவாஜி நாட்டையே காணிக்கையாக கொடுத்தார். அதை மீண்டும் சிவாஜியிடம் திரும்பக் கொடுத்து ஆளச்செய்தார் என்றால் இவரது பெருமையை நாம் உணரலாம்.
மகாராஷ்டிர மாநிலம் ஜம்ப் என்னும் கிராமத்தில் சூர்யாஜி, ராணுபாய் தம்பதிக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் நாராயணன். பஞ்சவடி அருகே தவம் மேற்கொண்ட போது ராமர், அனுமனுடைய தரிசனம் இவருக்கு கிடைத்தது. அவரது உத்தரவின்படி ஹிந்து மதத்தை பேணி பாதுகாத்து நமக்கு அப்படியே தந்தார். அவரை சமர்த்த ராமதாசர் என அழைப்பர். பண்டரிபுரம் சென்ற போது பாண்டுரங்கன் இவருக்கு ராமனாக காட்சி கொடுத்தார். தத்தாத்ரேயர் தரிசனம் பெற்றுள்ள இவர் வடக்கே காசி தொடங்கி கிழக்கே ராமேஸ்வரம் வரை யாத்திரை செய்தார்.
ஒருமுறை யாத்திரையில் உஞ்சவிருத்தி எடுப்பதற்காக ஒரு வீட்டிற்கு சென்றார் ராமதாசர். அந்த வீடோ வறுமையின் பிடியில் சிக்கிக் கிடந்தது.
இவரின் பெருமை அறியாத அந்த வீட்டுப்பெண் சாணம் மெழுகிய துணியை துாக்கி எறிந்தார். அதை எடுத்த ராமதாசர் நீரில் அலசி திரியாக்கி அனுமன் கோயிலில் விளக்கேற்றி அவள் நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்தார். இதையறிந்த அவள் ராமதாசரிடம் மன்னிப்பு கேட்டாள். அவரின் ஆசியால் அவளின் குடும்பம் நல்ல நிலைக்கு உயர்ந்தது.
பொறுமை இருந்தால் இந்த பூமியையே ஆளலாம் என்பது அவர் நமக்கு சொல்லும் அருளுரையாகும்.