ADDED : செப் 10, 2023 05:44 PM

நல்ல மனைவி - தாரை
மனைவி என்பவள் கணவனுக்கும், குடும்பத்துக்கும் அமைச்சர் போல இருக்க வேண்டும் என்பதைச் சொல்லும் கதாபாத்திரம் தாரை. வாலியின் மனைவியான இவள், கணவனின் வீரத்தைக் கண்டு பிரமித்தாலும் அவ்வப்போது அவன் ஆணவத்துடன் நடக்கும் போது கண்டிக்கத் தவறியதில்லை.
தன்னைச் சீண்டிய ராவணனை வாலால் கட்டி, ஏழு கடல்களிலும் புரட்டி இழுத்து வந்தான் வாலி. அத்துடன் தொட்டிலில் படுத்திருந்த தன் மகன் அங்கதனுக்கு விளையாட்டு காட்ட ராவணனைக் கட்டித் தொங்க விட்டான்.
இதைக் கண்டு தாரை பிரமித்தாலும், துன்புறுத்துவதை அவள் விரும்பவில்லை. மன்னரான அவனை அவமானப்படுத்துவது வாலிக்கு பலம் என்றாலும் அநாகரிகமான செயல்' என கணவருக்கு எடுத்துச் சொன்னாள்.
வருந்திய வாலி, வருங்காலத்தில் ஆபத்து நேரும் போது ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என ராவணனிடம் ஒப்பந்தம் செய்தான். ஆனால் தாரை அதை விரும்பவில்லை. காரணம் சுயநலவாதியான ராவணன் தன் உறவுகளைப் புறக்கணிக்கத் தயங்காதவன். தன் சகோதரன் குபேரனின் நாடான இலங்கையை அபகரித்தவன். அதனால் அவனது நட்பு கூடாது என நினைத்தாள்.
வாலியிடம் இதை தெரிவித்த போது அலட்சியத்துடன், 'ராவணனுக்கு தக்க பாடம் புகட்டியிருக்கிறேன்'' என இறுமாப்புடன் பதிலளித்தான். 'உங்களை நேரடியாக எதிர்க்க அவன் என்ன மடையனா? மேலும் அவன் ஒரு பெண் பித்தன். அழகான பெண்கள் எல்லோரும் அவனுக்காகவே படைக்கப்பட்டதாக நினைப்பவன். ஆகவே 'அவனது நட்பால் மறைமுகமாக பாதிப்பு ஏற்படும்' என்றாள் தாரை.
ஆனால் மனைவியின் பேச்சை வாலி கேட்கவில்லை.
எதிரியான மாயாவியுடன் ஒருமுறை வாலி போரிட நேர்ந்தது. சம பலம் கொண்ட அவர்கள் சளைக்காமல் ஒருவருக்கொருவர் தாக்கினர். சோர்வடைந்த மாயாவி குகைக்குள் சென்று பதுங்கினான்.
ஆனால் வாலியோ கொலை வெறியுடன் உள்ளே புகுந்தான். பல மாதங்களாக இருவரும் வெளியே வராததையும், ரத்தம் ஆறாக வெளியேறுவதையும் கண்டு குகை வாசலில் இருந்த தம்பி சுக்ரீவன் உள்ளிட்ட அமைச்சர்கள் தவித்தனர்.
வாலியை விட மாயாவி சக்தி வாய்ந்தவனோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் 'அண்ணன் வாலியை குறைவாக மதிப்பிடாதீர்கள். அவன் வெற்றியுடன் வருவான்' என சுக்ரீவன் வாதிட்டான்.
'ஏகி வாலியும் இருது ஏழொடு ஏழ்
வேக வெம் பிலம் தடவி வெம்மையான்
மோக வென்றிமேல் முயல்வின் வைகிடச்
சோகம் எய்தினன் துணை துளங்கினான்
-கம்ப ராமாயணம்
அவர்கள் குகையின் வாசலில் பல மாதம் காத்திருந்தும் பயனில்லை. ஒரு கட்டத்தில், 'வாலியை கொன்று விட்டு மாயாவி வெளியே வந்தால் நம்மால் தாக்குப் பிடிக்க முடியாது. ஆகவே மாயாவி வெளியே வரமுடியாதபடி குகையை அடைக்கலாம்' எனக் கருதி பாறையால் மூடினர். கிஷ்கிந்தை நாட்டை வாலியின் தம்பியான சுக்ரீவன் ஆட்சி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் தெரிவித்தனர். வேறு வழியின்றி சுக்ரீவனும் சம்மதித்தான்.
ஆனால் தன் கணவர் மாயாவியை அழித்து விட்டு வருவார் எனத் தாரை நம்பியது வீண் போகவில்லை. குகைக்குள்ளே மாயாவியின் கதையை முடித்த வாலி, குகையின் வாசல் அடைத்திருப்பது கண்டு வெகுண்டான். பாறையை உடைத்து வெளியே வந்தான். தன்னை வஞ்சித்த தம்பி சுக்ரீவனுடன் சண்டையிட்டான். குற்ற உணர்வில் இருந்த சுக்ரீவன், அண்ணனின் தாக்குதலை சமாளிக்க இயலாமல் அனுமனுடன் ருசியமுக பர்வதத்திற்கு ஓடி ஒளிந்தான்.
கணவர் வருகையால் தாரை மகிழ்ந்தாலும், மைத்துனன் தண்டிக்கப்படுவதில் அவளுக்கு உடன்பாடில்லை. அவளின் அறிவுரையை வாலி கேட்கவும் இல்லை. அதோடு தம்பியின் மனைவியை கடத்திக் கொண்டு வந்தான். மனைவியின் பிரிவால் சுக்ரீவன் வருந்த வேண்டும் என்ற எண்ணம் தானே தவிர, அவளை அடையும் எண்ணம் வாலிக்கு இல்லை என்பதை தாரை அறிந்திருந்தாள். ஆனால் ராமனின் உதவியுடன் அண்ணனை வீழ்த்த சுக்ரீவன் திட்டமிட்டிருக்கிறான் என்ற தகவல் கிடைத்ததும் தாரைக்கு கலக்கம் ஏற்பட்டது.
'சுக்ரீவனுக்கு பக்க பலமாக ராமன் இருப்பதாக அறிந்தேன். அவனை மன்னித்து அவனது மனைவியை ஒப்படையுங்கள்' என கணவரிடம் மன்றாடினாள்.
'என்ன உளறுகிறாய்? ராமன் என்ற பெயரைச் சொல்வதே பெரிய புண்ணியம். ஆனால் நீயோ அப்பெயரை கேவலப்படுத்துகிறாய். தந்தையின் சொல்லுக்காக தனக்குரிய நாட்டையே உதறித் தள்ளியவன் அவன். ராஜ போகத்துடன் வாழ வேண்டிய ராஜகுமாரன் காட்டில் பழங்களைப் புசித்துக் கொண்டிருக்கிறான். அந்த ராமனா... சுக்ரீவனுக்கு ஆதரவாக நின்று என்னை வீழ்த்த முயற்சிப்பான்? உன் பிதற்றலை நிறுத்து' என்றான் வாலி.
'ராமன் மீது நீங்கள் கொண்டிருக்கும் எண்ணம் மெய் சிலிர்க்க வைக்கிறது. நீங்கள் சுக்ரீவனுக்கு செய்த அநீதிக்கு போர் மூலமாக ராமன் நியாயம் கேட்க வந்திருக்கிறான். சந்தர்ப்ப சூழலால் தவறு செய்ததை எண்ணி உங்களிடம் மன்றாடினானே சுக்ரீவன்... மன்னிக்க உங்களுக்கு மனம் வந்ததா?' 'அண்ணா... நீயே ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள், நான் உன் அடிமையாக இருக்கிறேன்' எனக் கதறினானே, அவனை விரட்டினீர்களே ஏன்?' என வாதிட்டாள்.
சுக்ரீவனை எதிர்கொள்வதாக எண்ணி ராமனிடம் தன் கணவர் வாலி பலியாகிவிடக் கூடாதே என பரிதவித்தாள்.
-தொடரும்
பிரபு சங்கர்
72999 68695