sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ஜெயித்துக்காட்டுவோம் (13)

/

ஜெயித்துக்காட்டுவோம் (13)

ஜெயித்துக்காட்டுவோம் (13)

ஜெயித்துக்காட்டுவோம் (13)


ADDED : டிச 15, 2017 10:43 AM

Google News

ADDED : டிச 15, 2017 10:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அறம், பொருள், இன்பம் தான் மனித வாழ்வின் அடிப்படையான அம்சங்கள். இதை முறையாக விளக்குவதால் தான் திருக்குறளை, 'வாழ்வியல் நுால்' என புகழ்கின்றனர்.

இவற்றில் முக்கியமானது எது தெரியுமா? பொருள்!

ஆம். பொருள் செல்வத்தை பெறாமல் உலகில் வாழ முடியாது. 'பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லை' என வள்ளுவரும், 'பொருள் இல்லார் பொருள் எய்தல் முதற்கடன்' என பாரதியாரும் பாடியுள்ளனர்.

அத்தியாவசியமான பொருள் செல்வத்தை பெற்றால் தான், வாழ்வில் 'அறம்' செய்யவும், 'இன்பம்' அனுபவிக்கவும் முடியும்.

'வடுவிலா வையத்து மன்னிய மூன்றில் நடுவணது எய்த, இரு தலையும் எய்தும்' என்கிறது நாலடியார்.

ஆகவே, திரைகடல் ஓடியும் திரவியம் தேடுதல் என்பது முக்கியமான ஒன்று. சம்பாதித்த பணத்தால் சகல வசதிகளையும் பெற்று, மனைவி, குழந்தைகளுடன் அனுபவிக்கும் இன்பம் மட்டும், வாழ்வை பூரணமாக பொலியச் செய்து விடாது.

இன்னொரு இன்பமும் இருக்கிறது. ஆனால், அதைப் பலரும் அறியவில்லை என்று ஆதங்கப்படுகிறார் வள்ளுவர்.

'ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை

வைத்துஇழக்கும் வன்க ணவர்'

கஷ்டப்படுபவர்க்கு உதவுவதால் கிடைக்கும் பரவசத்தை அறியாமல், செல்வத்தை மேலும் மேலும் சேர்த்து, ஒரு நாள் அதை இழந்து, இறந்து போகின்றவர்களை கொடியவர்கள் என்கிறார் வள்ளுவர்.

திருவள்ளுவரால் திட்டப்படுபவர்களாக நாம் வாழலாமா?

கல்வியின் பயன் கடவுளைத் தொழுதல். அது போல் செல்வத்தின் பயன், உதவி செய்தல் என்பதை புரிந்து கொண்டு, இயன்றவரை தர்மம் செய்து இன்பம் அடைய வேண்டும். மானிட உடம்பை நாம் பெற்றதன் அர்த்தமே, பிறருக்கு உறுதுணையாக விளங்குவதற்குத்தான் என்கின்றன சாத்திரங்கள்.

'பரோபகாரம் இதம் சரீரம்' புகழ்பெற்ற செல்வந்தர் ராக்பெல்லரை பலரும், போற்றுவது இயல்பு. ஆனால், அவர் காலத்தில் வாழ்ந்த ஒரு துறவியை, மக்கள் ஏகத்துக்கும் புகழ்ந்தனர். அவர் தான் சுவாமி விவேகானந்தர்.

தீவிர முயற்சிக்கு பின் விவேகானந்தரை சந்தித்தார் ராக்பெல்லர். அவரிடம் விவேகானந்தர், 'செல்வந்தரே, உங்களிடம் சேர்ந்திருக்கும் செல்வம் உங்களுடையது அல்ல, கடவுளுடையது. அது பொருளில்லா ஆதரவற்றோருக்கு அளிப்பதற்காக உங்களிடம் வழங்கப்பட்டிருக்கிறது. கடவுள் உங்களை பணக்காரராக படைத்திருப்பதன் காரணம் உணர்ந்து காரியம் செய்யுங்கள்!'

துறவி சொன்னதைக் கேட்ட ராக்பெல்லருக்கு பெரும் அதிர்ச்சி.

'எனக்கு இவர் என்ன கட்டளையிடுவது?' என்று எண்ணியவாறே விவேகானந்தரிடம் விடைபெற்றார்.

ஆனால், அவர் நெஞ்சத்தில் லட்சிய புருஷரின் வார்த்தைகள் எதிரொலித்தபடியே இருந்தன. மனம் நிலை கொள்ளாமல் அலை பாய்ந்தது.

நாட்கள் சில நகர்ந்தன...

விவேகானந்தரின் அர்த்தம் மிக்க சொற்கள் வீணாகுமா என்ன?

பெருந்தொகை ஒன்றை, பொதுத் தொண்டிற்காக நன்கொடையாக தந்து விட்டு, சுவாமியை சந்தித்தார் ராக் பெல்லர். நன்கொடை விஷயத்தை சொல்லி ஆசி பெற்றார்.

அறிஞர் ஒருவர் கூறுகின்றார், உச்சியில் இருப்பதாலா சூரியனை வணங்குகின்றோம்? இல்லை... சுடர் விடும் தன் கிரணங்களால் கீழே இறங்கி வந்து அனைத்து உயிர்களுக்கும் நலம் செய்வதால் தான்.

அதே போல தான, தர்மங்கள் செய்வதை வைத்து தான், செல்வந்தர்களையும் உலகம் வணங்கும். பொருளுக்கு என்ன பொருள் தெரியுமா?

'அழியக்கூடிய செல்வம் ஒருவரிடம் இருக்கும்போதே, அறப்பணிகள் செய்து அதை அழியாத 'அருளாக' மாற்றிக் கொள்வது தான்,' என்கின்றனர் ஞானிகள்.

'அன்பு' எனும் அன்னை பெற்றெடுத்த 'அருள்' எனும் குழந்தையை 'பொருள்' எனும் வளர்ப்புத்தாய் தான் பொலிவுற வளர்க்கிறாள் என்கிறார் வள்ளுவர்.

தன்னளவிலும் தாராளமாக செலவழிக்காமல், தான தர்மத்திலும் தலை காட்டாமல், சிலர் செல்வம் சேர்ப்பதிலேயே குறியாக இருக்கின்றனர்.

'எச்சில் கையால் காக்கையை விரட்டாத கஞ்ச மகாபிரபு' போல் இருப்பவர்களை, 'ஈர்ங்கை விதிரார்' என கேலி செய்கிறார் வள்ளுவர்.

சீக்கிய மதகுரு, குருநானக் பணக்கார கருமி ஒருவரைச் சந்தித்தார். அவரிடம் குண்டூசி ஒன்றைக் கொடுத்து, ''அடுத்த ஜென்மத்தில் நாம் சந்திக்கும் போது, இதை என்னிடம் திருப்பித் தாருங்கள்'' என்றார்.

கஞ்ச பிரபுவோ திருதிருவென விழித்து, ''இறந்து விட்ட பிறகு என்னால் எப்படி இதை கொண்டு வர முடியும்?' எனக்கேட்டார்.

'ஊசியைக் கூட எடுத்துச் செல்ல முடியாத நீங்கள் எதற்காக இவ்வளவு பணத்தை சேர்த்து வைக்கிறீர்கள்...!' என்றார்.

கவிஞர் ஒருவர் பாடுகிறார், வாழ்வதற்கு பொருள் வேண்டும் தான்! - ஆனால் வாழ்வதிலும் பொருள் வேண்டாமா?

தொடரும்

திருப்புகழ் மதிவண்ணன்

அலைபேசி: 98411 69590






      Dinamalar
      Follow us