sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ஜெயித்து காட்டுவோம்! (11)

/

ஜெயித்து காட்டுவோம்! (11)

ஜெயித்து காட்டுவோம்! (11)

ஜெயித்து காட்டுவோம்! (11)


ADDED : நவ 24, 2017 09:08 AM

Google News

ADDED : நவ 24, 2017 09:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகப் பேச்சாளரிடம் நண்பர் ஒருவர், ''குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை என்றும், குணத்தை மாற்ற குரு இல்லை என்றும் இரண்டு விதமாக கேள்விப்பட்டிருக்கிறேன். கடவுளின் அருள் பெற வழிகாட்டும் குருநாதரால், ஒருவரது குணத்தை மாற்ற முடியாதா? ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறதே!'' என்றார்.

பேச்சாளர் அவரிடம், ''ஒளி ஓரிடத்தில் பரவினால் அங்கு என்ன பொருள் இருக்கிறது? எது வேண்டியது, எது வேண்டாதது என்று காட்டிக் கொடுக்குமே தவிர, அந்த ஒளியால் அவ்விடத்தை துாய்மையாக்க முடியாது. இது போல் தான் குருவின் உபதேசமும்.

நாம் அகற்ற வேண்டிய தீய குணங்கள் இவை, பயில வேண்டிய நல்லொழுக்கங்கள் இவை என உணர்த்துமே தவிர, நாம் தான் நம் அழுக்குகளைப் போக்க ஆவன செய்ய வேண்டும். சந்தேக மனப்பான்மை, புறம் பேசுதல், பொறாமை, பேராசை, ஆணவப் போக்கு இவற்றையெல்லாம் உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டும்.இதையே 'குணத்தை மாற்ற குரு இல்லை' என்ற வாசகம் உணர்த்துகிறது,'' என விளக்கம் அளித்தார்.

'திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்பது நாம் அறிந்தது தானே.

மற்றவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளும், சட்ட திட்டங்களும் ஒருவரை மாற்றி விட முடியுமா என்ன? 'சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும்' என்கிறார் வள்ளுவர்.

'கட்டிக் கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த வார்த்தையும் எத்தனை நாளைக்கு வரும்?' என்ற பழமொழியை கேட்டிருப்போம்.

உபதேசங்கள் போக வேண்டிய ஊருக்கு வழியைக் காட்டுமே தவிர, பயணப்படுபவன் தான் பாதையில் முன்னேற வேண்டும்.

நீதி நுால் ஒன்று அற்புதமாக சொல்கிறது.

மேலான நிலையை ஒருவன் அடைவதும், தாழ்ந்த நிலைக்கு தரம் குன்றி வீழ்வதும் அவன் கையில் தான் இருக்கிறது.

''நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும்

தன்னை நிலைகலக்கிக் கீழ் இடுவானும்

நிலையினும் மேன்மேல் உயர்த்து நிறுப்பானும்

தன்னைத் தலையாய்ச் செய்வானும் தான்''.

குருநாதர் ஒருவரிடம் இரண்டு சீடர்கள் கல்வியையும், நெறிமுறைகளையும் கற்று வந்தனர்.

ஒருவன் உடனே அனைத்தையும் புரிந்து கொண்டு, கேட்கின்ற கேள்விக்கு, அட்சரம் பிசகாமல் சொல்வான்.

இன்னொருவனுக்கோ பாடம் அவ்வளவு எளிதில் புரியாது. இருப்பினும் முயன்று படித்து விடுவான்.

தினசரி அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து விட வேண்டும் என்பது குருநாதரின் கட்டளை.

புத்திசாலி சீடன் காலை நான்கு மணிக்கு விழித்து, அன்றாட கடமைகளை சுறுசுறுப்பாக முடித்து விடுவான். மற்றவன் ஐந்து மணிக்கு மேல் தான் எழுவான். விடியற் காலையிலேயே விழிப்பவன் ஒருநாள் குருநாதரிடம் சென்று 'விபூதி கொஞ்சம் தாருங்கள்' என்று வாங்கி நெற்றியில் பூசியபடியே ''அவன் இன்னமும் துாக்கம் கலைந்தபாடில்லை'' என்றான்.

குருநாதர் அவனிடம், ''நீயும் துாங்கி கொண்டிருக்கலாமே'' என்றார்.

சீடனுக்கு ஒன்றும் புரியவில்லை. குரு விளக்கமாக கூறினார். ''சீக்கிரமே எழுந்து மற்றவர்களைப் பற்றிக் குறை சொல்வதற்கு பதிலாக உறங்கி கொண்டிருப்பதே உத்தமமானது. புறம்பேசுவது என்பது பரிகாரமே இல்லாத பாவம். தீய குணம் ஒருவரைத் தீண்டவே கூடாது என உபதேசித்திருக்கிறேனே! எங்கே, அந்த திருக்குறளைச் சொல்லு'' என்றார்.

''தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்''

என்று குறளை ஒப்பித்தான் கோள் சொன்னவன்.

குருநாதர் அவனிடம், ''நீதிநெறிகள் மேற்கோள் காட்டுவதற்காக அல்ல. மேற்கொள்வதற்காக!'' என்றார். சீடன் தலை குனிந்தான்.

ஒவ்வொரு நாளும் நம்மை நாமே சோதித்துக் கொள்ள வேண்டும். வாய்மையும், நேர்மையும் தவறாமல் வாழ்ந்து வருகிறோமா என்று தன்னை சதாகாலமும் சத்திய சோதனைக்கு உட்படுத்திக் கொண்டு கடமை, காலம் தவறாமை, அன்பு, சேவை என்ற உயரிய கட்டுப்பாடுகளையும், விரதங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

அறிஞர் ஒருவர் கூறுகிறார், ''தனக்குத்தானே எவன் ஒருவன் கட்டுப்பாடுகள் விதித்துக் கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன்''.

ஜகம் புகழும் ராமாயண இதிகாசத்தை கேட்காத காதுகள் உலகத்தில் இருக்காது.

அனைவரும் கேட்டு அனுபவித்த, அந்த காவியத்தின் கதாநாயகர் ராமபிரான். ராமரின் உடன் பிறந்த சகோதரர்களில் ஒருவர் பரதன். ராமர் ஏற்கவிருந்த பட்டாபிஷேகம், பரதனின் தாயான கைகேயியால் தடுக்கப்பட்டது.

''ராமர் ராஜ்யத்தை ஆளக் கூடாது. மரவுரி தரித்து 14 ஆண்டுகள் காட்டில் வாசம் ஏற்க வேண்டும். அயோத்தி நகருக்குள் அடியெடுத்து வைக்கக் கூடாது''.

இவை அனைத்தும் கைகேயி இட்ட கட்டளை.

'பட்டாபிஷேகம் புனைந்து என் மகன் பரதன் முடி சூட வேண்டும். அயோத்தியின் அரசனாக அரியணையில் அமர வேண்டும்' என்பது அவள் பெற்ற வரம்.

ஆனால் நடந்தது என்ன?

ராமருக்கு இல்லாத ராஜ்யம் எனக்கு எதற்கு? அவர் அணிந்த மரவுரியை ஏற்று இப்போதே நானும் கானகம் செல்கிறேன். அவர் வந்தால் தான் நானும் அயோத்திக்குள்ளேயே அடியெடுத்து வைப்பேன் என்று தனக்குத் தானே கட்டளை இட்டுக் கொண்டு, கட்டுப்பாடுகள் விதித்துக் கொண்டு அயோத்தி எல்லைக்கு அப்பாலேயே ஆண்டுகள் பதினான்கையும் கழித்தான் பரதன்.

தன்னைத் தானே, தியாக மூர்த்தியாக உருவாக்கிக் கொண்டதால் தான், கதாநாயகன் ராமனை விட பரதன் கோடி மடங்காக உயர்ந்தான்.

'ஆயிரம் ராமா நின்கேழ் ஆவாரோ

என்னில் கோடி ராமர்கள் எனினும்

அண்ணல் நின் அருளுக்கு அருகாவாரோ?'

என்பது கம்பனின் வாசகம்.

கதாநாயகன் இப்படி நடிக்க வேண்டும் என சொல்லித்தர இயக்குனர் சினிமாத்துறையில் இருக்கிறார். ஆனால் வாழ்க்கை மேடையில் கதாநாயகரும், இயக்குனரும் ஒருவரே. நம்மை நாமே தான் உருவாக்கி உயர வேண்டும்.

அதனால் தான் திருக்குறள் இப்படி குறிப்பிடுகிறது,

''தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று''.

தொடரும்

அலைபேசி: 98411 69590

திருப்புகழ் மதிவண்ணன்






      Dinamalar
      Follow us