
காசிக்கு பாத யாத்திரையாகச் சென்று கொண்டிருந்த காஞ்சிப்பெரியவர் ஆந்திராவிலுள்ள குக்கிராமத்தில் முகாமிடச் சொல்லி விட்டார்.
இந்தச் சிறிய கிராமத்தில் எத்தனை பேர் வசிப்பார்கள்? அவர்களில் யார் சுவாமிகளை தரிசிக்க வருவார்கள்? சுவாமிகளுடன் கூடவே வந்திருக்கிற மடத்து ஊழியர்கள் உள்பட அனைவரும் சாப்பிட்டாக வேண்டும். அரிசி, காய்கறி வாங்கக் காசு எங்கிருந்து வரும்?
பக்தர்கள் காணிக்கையாகக் கொடுத்தால் தான் பணம் வரும். அந்தப் பணத்தை வைத்து தான் சாப்பாடு தயார் செய்ய வேண்டும். ஆளரவமே தென்படாத சிறிய கிராமத்தில் எத்தனை பேர் வந்து சுவாமிகளை தரிசிக்கப் போகிறார்கள்? என்ன பெரிய காணிக்கை தந்துவிடப் போகிறார்கள்?
சுவாமிகளுடன் வந்த மடத்தை சேர்ந்த அடியவர் ஒருவர், 'இப்படியொரு சின்னஞ்சிறிய கிராமத்தில் வந்து தங்கினால் யார் படியளப்பார்? சுவாமிகள் வேண்டுமானால் உபவாசம் இருக்கலாம். எல்லோராலும் அது முடியுமா? இனி கொஞ்ச நாளைக்குப் பட்டினி தான்!' என்று சொன்னது சுவாமிகள் காதில் கேட்டு விட்டது.
அவரை அருகே அழைத்தார் சுவாமி. அவர் நடுங்கிக்கொண்டே நின்றார்.
'அம்பாளை நம்பு. அவள் கட்டாயம் படியளப்பாள். நாம் ஆன்மிகத்தை வளர்க்கும் நல்ல காரியத்திற்காகத் தானே காசிக்கு யாத்திரை புறப்பட்டிருக்கிறோம். நம் நோக்கத்தில் பழுதில்லையே? நம் தாய் நம்மை சிரமப்பட வைப்பாளா? ஈக்கும், எறும்புக்கும் படியளக்கும் அவளுக்கு நமக்குப் படியளக்க வேண்டும் என்று தெரியாதா? அவளைப் பூரணமாக நம்பினால் போதும். அவள் அருள் கட்டாயம் கிட்டும்!' எனச் சிரித்துக் கொண்டே சொன்னார்.
பக்கத்தில் எங்கே என்ன திருவிழாவோ, மறுநாளிலிருந்து அருகே உள்ள பல கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சாரிசாரியாக அந்தக் கிராமத்தை நோக்கி வரத் தொடங்கினர். ஆட்களே அதிகமில்லாத கிராமத்தில் இப்போது மக்கள் வெள்ளம்.
அக்காலத்தில் ஒரு ரூபாய் வெள்ளி நாணயம் உண்டு. வந்தவர்கள் எல்லாம், வெள்ளி நாணயத்தைக் காணிக்கையாக கொடுத்து, சுவாமிகளை தரிசித்துவிட்டு சென்றனர். கொட்டி கிடந்த, வெள்ளி நாணய குவியலை எப்படி அளப்பது? படியால் அளந்து, அளந்து சாக்கில் கொட்டினார், காணிக்கையே வராதோ எனக் கவலைப்பட்ட அன்பர்.
'அம்பாள் படியளப்பாள், நம்பு என்றேனே? பார், நீயே படியால் அளந்து, அளந்து நாணயத்தைக் கொட்டுகிறாய்!' என்று சுவாமிகள் மறுபடியும் சிரித்துக் கொண்டே சொன்னபோது, அந்த அன்பரின் கண்களில் பக்திக் கண்ணீர் தளும்பியது.