ADDED : மார் 02, 2018 10:55 AM

'ஒருவன் தன்னை தானே அழிக்க, கவலையை போல கொடிய ஆயுதம் வேறொன்றுமில்லை' என்று கூறி விடலாம்.
'கொன்றழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்!' என்றும்
'நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி அஞ்சி உயிர் வாழ்தல் அறியாமை!' என்றும் மகாகவி பாரதியார் பாடுகிறார்.
புத்தகம், மரச்சாமான்களை மெல்ல தின்று அழிக்கும் கரையான்களின் படையை போல ஒருவனின் வாழும்காலத்தில், அவன் நிம்மதியை ஒரு சேர அழிக்கும் கொடிய பழக்கம் கவலைப்படுதல்.
'கவலைப்படுவதால் எந்த பிரச்னைக்கும் விடிவுகாலம் பிறக்க போவதில்லை' என்று தெரிந்தும், நம்மவர்கள் கன்னத்தில் கை வைப்பதையும், முகத்தை தொங்கப் போட்டுக் கொள்வதையும், சோக கண்ணீர் வடிப்பதையும் நிறுத்தியபாடில்லை.
'சென்ற மாதம் ஒரு விஷயம் குறித்து தீவிரமாக கவலைப்பட்டீர்களே... இப்போது அது என்னவானது?' என்று வினா எழுப்புகிறார் ஒரு மன இயல் வல்லுனர்.
கவலை சிறு விஷயத்தையும் பூதாகரமாக்கி மனிதனை புதை குழியில் தள்ளுகிறது. ஒன்றுக்கும் உதவாததை, ஊதி பெரிதாக்கி மனத்தை ரணகளம் ஆக்குகிறது.
நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் விழா ஒன்றில் ஜோக் ஒன்றை செல்ல அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
இரண்டாவது முறையாக அதே ஜோக்கை சொல்ல, சிலர் மட்டும் சிரித்தனர். மூன்றாவது முறையாகவும் அதே ஜோக்; ஆனால் யாரும் சிரிக்கவில்லை.
கூட்டத்தினரிடம் அப்போது சார்லி சாப்ளின் கூறிய வார்த்தைகள் அர்த்தம் மிக்கது. ''சிரிப்பான நிகழ்ச்சி ஒன்றை முதலில் கேட்கிற போது, அனைவரும் சிரிக்கிறோம். தொடர்ந்து அதையே கேட்டால் சிரிக்க முடிவதில்லை. ஆனால் வருத்தம் அளித்த நிகழ்வுகளை மட்டும் பலமுறை எண்ணி கவலைப்படுகிறோமே... தேவை தானா!''
'பழைய துயரங்களுக்கு புதிய கண்ணீர் சிந்தாதீர்கள்' என்கிறார் ஒரு மேல்நாட்டு அறிஞர். பலர் தங்களுக்கு நேர்ந்த துன்பம் பற்றி உறவினர், நண்பர்களிடமும் பேசுகின்றனர். இதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை.
அறிஞர் ஒருவர் கூறுகிறார், 'உங்களை போன்ற சக மனிதர்களிடம் கவலைகளை ஒப்பிக்க தொடங்கினால் இரண்டு எதிர்வினைகள் தான் ஏற்படும். ஒன்று, அவர் கேட்பது போல் பாசாங்கு செய்வார். இல்லையென்றால் உள்ளுக்குள் மகிழ்ந்து கொள்வார். ஆகவே நாம் கவலைப்படுவதை நிறுத்தி விட்டு 'உருக்குலையாத உள்ள உறுதியை தா' என கடவுளிடம் வேண்டுவதே அறிவுடைமை என்கின்றனர் சான்றோர்.
'தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது'
என திருவள்ளுவரும்,
'எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பான்
பாவி ஒப்பி உனது ஏவல் செய்வேன்!
உனதருளால் வாழ்வேன்!'
என்று மகாகவி பாரதியாரும் கவலையிலிருந்து விடுபட வழி காட்டுகின்றனர்.
'காடு வா வா என்கிறது! வீடு போ போ என்கிறது!' இப்படிப்பட்ட வயதான காலத்தில் வருந்துவது தவிர வேறு என்ன வழி? என்கிறார்கள் முதியவர்கள்.
ஆனால் வாழ்க்கை என்பது ஆண்டுகளின் எண்ணிக்கையை பொறுத்து அமைவதில்லை; அவரவர் ஆளுமைத்தன்மையை பொறுத்தது.
சுயதொழில் செய்யும் ஒருவர் அறிஞர் ஆல்பர்ட் சுவைட்சரிடம் சொன்னார், 'எனக்கு வயதாகிக் கொண்டே வருகிறது. வேலை செய்ய முடியவில்லை. கவலையாக இருக்கிறது.' என்றார்.
'என்னுடன் பணிபுரிய வாருங்கள். தொழிலில் நானும் இணைகிறேன். உங்களை இளைமையாக்கி காட்டுகிறேன்.' என்றார் நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் சுவைட்சர். அப்போது அவருக்கு வயது எழுபத்து நான்கு!
'வில்லுக்கோர் விஜயன்' என்று புகழ் பெற்றாலும், போர்க்களத்தில் கவலையுடன் நின்றான் அர்ஜூனன்.
அவனது கவலை போக்கி கடமையை செய் என அப்போது கிருஷ்ணர் அளித்த உபதேசமே பகவத்கீதை!
கீதையின் நிறைவான போதனையான - சரம சுலோகத்தில் நிறைவு வார்த்தை 'மாசுச:' அதாவது 'கவலைப்படாதே' என்பது தான்!
பதினெட்டு அத்யாயங்களை உபதேசித்த போதிலும், கவலைப்படும் பழக்கத்தை கைவிடமாட்டார்கள் என கருதியே 'கவலைப்படாதே' என்னும் வாசகத்தை முத்திரை உபதேசமாக முடிவில் சொல்கிறார் கண்ணபெருமான்.
போரில் அர்ஜூனன் புதல்வன் அபிமன்யு இறக்கிறான்! பொறுக்க முடியாத துயரத்தில் மகனே போய்விட்டாயா! என்று அர்ஜூனன் அழுகிறான். அப்போது ரதத்தின் சாரதியாக இருந்த கண்ணனின் கண்களில் நீர் வழிகின்றது.
அதை கண்ட அர்ஜூனன், 'கீதை நாயகனே! கிருஷ்ணனே! என் புதல்வன் மறைந்ததில் மன வருத்தமா? நீயும் கலங்குகின்றாயோ!' என கேட்டான் அர்ஜூனன்.
'அதெல்லாம் ஒன்றுமில்லை! உனக்கு போய் கீதையை உபதேசித்தேனே! அன்றாட கடமையில் ஒன்றாக கவலைப்படுதலை பலரும் தங்களுடையபட்டியலில் சேர்த்து கொண்டிருப்பது பரிதாபம் அல்லவா! உடன் பிறந்தேகொல்லும் வியாதிகள் பல இருக்க, உண்டாக்கி கொள்ளும் வியாதியாக கவலைப்படுவதையும் நாம் கணக்கில் சேர்க்க வேண்டுமா என்ன?
- தொடரும்
அலைபேசி: 98411 69590
திருப்புகழ் மதிவண்ணன்