
வேதம், கலைகள், பக்தி அனைத்திலும் கரை கண்டவர் கல்யாணபுரம் உத்தமதானர். அவரது மனைவி மங்களம். இத்தம்பதியின் மகள் கயற்கண்ணி. இளம் வயது முதல் தந்தையிடம் கல்வி கற்று, பெற்றோரின் அன்பு மயமான வாழ்வால் அன்பையே தன் சொத்தாக பெற்றவள் கயற்கண்ணி.
உத்தமதானரை தேடி வரும் அன்பர்கள் வேத, உபநிஷதங்களில் எழும் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்பதோடு, சிவ மகிமை குறித்தும் கேட்டுச் செல்வர். மணப்பருவத்தில் இருந்த கயற்கண்ணியும் அறைக்கதவுக்கு பின் நின்றபடி, இந்த தெய்வீகத் தகவல்களை கேட்டு மகிழ்வாள்.
ஒருநாள் உத்தமதானர், '' சிவபெருமானே உயிர்களாகிய நமக்கு தலைவனாக இருக்கிறார். அவரை அடைவதே நம் வாழ்வின் பயன்'' என உருக்கமுடன் விளக்கினார்.
அதை கேட்ட மகள் கயற்கண்ணி, ஆபரணம் அணிவதை கைவிட்டு, எளிய ஆடை அணிந்து தியானத்தில் ஈடுபட்டாள். அவளை கண்ட பெற்றோர், 'காலா காலத்துல கல்யாணம் செஞ்சு வெச்சா நிலைமை சீராகும்' என எண்ணினர்.
கயற்கண்ணி, 'அப்பா... மனிதர்களாகிய நாம் சிவனை சென்றடைய வேண்டும். அதுவே பிறவிப்பயன்' என நீங்கள் தானே சொன்னீர்கள்... வேதங்களில் கரை கண்ட உங்கள் வாக்கை கேட்ட நாள் முதல், நம் ஊரில் அருள்புரியும் சிவன் மந்தாரவனேஸ்வரரை என் தலைவனாக கருதுகிறேன். மற்றவரை மனதாலும் நினைக்க மாட்டேன்'' என்றாள்.
திடுக்கிட்ட உத்தமதானர், '' நான் சொன்னது ஞான நுால்களில் உள்ளதை... அந்நிலை அனைவருக்கும் பொருந்தாது மகளே'' என்றார்.
கயற்கண்ணி, '' நல்வழிகளை வாழ்வில் பின்பற்றாமல் விலகுவதும், வாயால் மட்டும் வேதாந்தம் பேசி வாழ்நாளை கழிப்பது சரியல்ல'' என்றாள்.
தந்தை விடவில்லை. ''அம்மா! நீ என்ன மதுரை மீனாட்சியா... நான் என்ன மலையத்துவஜ பாண்டியனா? அல்லது உன் தாயார் தான் காஞ்சனமாலையா? நாம் யாரென்று நினைத்து பார்க்க வேண்டாமா? விதண்டாவாதம் பேசாதே!'' என்றார்.
கயற்கண்ணி கண்ணீர் விட்டாள்.
அதை கண்ட மங்களம்,'' என்னடி நீலிக்கண்ணீர் வடிக்கிறாய்? கடவுளையே கல்யாணம் செய்து கொள்வேன் என்பது நடக்கிற காரியமா? உன்னை பார்த்து ஊர் சிரிக்கும்'' என கத்தினாள்.
கயற்கண்ணி சிவனிடம் முறையிட்டாள்.
''எம்பெருமானே! ஏற்றுக்கொள் என்னை!''என்று மனம் உருகினாள்.
நாளடைவில் கயற்கண்ணி பிறரிடம் பேசுவதை கைவிட்டாள். உறவும் ஊரும், 'இவளுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு' என வம்பு பேசியது.
வீட்டு மாடியறையில் தனிமையாக ஒதுங்கினாள் கயற்கண்ணி. அறையை தாழிட்டு கொண்டாள். கோயில் இருக்கும் திசை நோக்கி வழிபட்டாள். நாளாக நாளாக உடல் இளைக்க தொடங்கியது.
ஒரு நாள்... அதிகாலையில் 'உத்தமதானர் இருக்காரா?' என்று கேட்ட படியே, ஏழு வேத வல்லுனர்கள் வீட்டிற்கு வந்தனர். அதற்குள் நீராடி, அனுஷ்டானம் முடித்திருந்த உத்தமதானர் அவர்களை வரவேற்று, 'நான் தான் உத்தமதானர். என்ன விஷயம்?' எனக்கேட்டார்.
வந்தவர்களோ,' கயிலை நாதரான சிவனை எல்லோருக்கும் தெரியும். அவருக்கு உங்கள் பெண்ணை கன்னிகாதானம் செய்து தர வேண்டும். நாளை வெள்ளிக்கிழமை நடக்க போகும் கல்யாணத்திற்கு, இன்றிரவு மாப்பிள்ளை சிவனுடன் நாங்கள் வருவோம். கல்யாண வேலைகள் நிறைய இருக்கிறது; வருகிறோம்''என சொல்லி விட்டு புறப்பட்டனர்.
உத்தமதானர் திகைப்புடன், 'என்ன இது! சப்தரிஷிகள் போல ஏழு பேர் இருக்கிறார்களே... ஒன்றுமே புரியவில்லையே...' என முறையிட்டபடி மந்தாரவனேஸ்வரரை வழிபட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தார்.
வழியெங்கும் ஊரை அடைத்து மணப்பந்தலிட்டு கொண்டிருந்தனர். உத்தமதானர் வீட்டை நெருங்க, இல்லம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சோழ மன்னர், மந்திரிகள் மேற்பார்வை செய்து கொண்டு இருந்தனர்.
உத்தமதானரை கண்டதும் மன்னர் வணங்கினார். ''சுவாமி! மந்தாரவனேஸ்வரர் நேற்றிரவு என் கனவில் தோன்றி, உங்கள் அருமை மகள் கயற்கண்ணியை, நாளை காலை மணம் புரிய வருவதாக தெரிவித்தார். அதற்கான ஏற்பாடுகளும் செய்ய கட்டளையிட்டார். தங்களால் தான் பாக்கியம் கிடைக்க பெற்றேன்'' என்றார்.
உத்தமதானரின் கண்கள் கலங்கின. மகளின் பெருமை அறிந்து மகிழ்ந்தார்.
உத்தமதானர் வாழ்ந்த திருத்தலம் 'கல்யாணபுரம்', பெயருக்கேற்ப, கல்யாணபுரமாகவே மாறியது. ஊரெங்கும் விளக்குகள் ஏற்றப்பட்டு, ஜெகஜோதியாக ஜொலித்தது. ஆதியும், அருட்பெரும் ஜோதி வடிவான சிவன் பிரம்மச்சாரி வடிவில், கல்யாணபுரம் வந்தார். தேவர்கள் எல்லாம் மனித வடிவில் பின் தொடர, வேத கோஷம் முழங்க, பெண்கள் மங்கல கீதம் பாடினர்.
மறுநாள் பொழுது விடிந்ததும், காசி யாத்திரை சடங்கு நடந்தது. 'என் மகளை திருமணம் செய்து தருகிறேன். வாருங்கள்!'என உத்தமதானர் வணங்கி அழைத்தார். சிவன் மணப்பந்தலில் அமர, மங்கல ஆபரணங்களுடன் கயற்கண்ணியும் மணமகளாக அமர்ந்தாள். தாரை வார்க்கும் வைபவம் நடந்தது. மங்கல வாத்தியம் முழங்க, வேத மந்திரம் ஒலிக்க, கயற்கண்ணியின் கழுத்தில் மாங்கல்யம் சூட்டினார் சிவன். அதே விநாடியில், கயற்கண்ணி தெய்வ வடிவில் காட்சியளித்தாள்.
சிவனுடன் கோயிலுக்குள் சென்ற கயற்கண்ணி, அங்கே அஞ்சனக்கண் அம்மனின் திருவடியை வணங்கினாள். அவளை வாரியணைத்த அம்பிகை, 'சிவபெருமானை அனைவரும் அடையலாம் என்பதை, உணர்த்திய நீ நீடூழி வாழ்க!' என வாழ்த்தினாள்.
'ஜோதி வடிவில் கயற்கண்ணி இறைவனுடன் கலந்தாள். கல்யாணபுரம் என்னும் இத்தலம் நாகபட்டினம் மாவட்டத்தில் தற்போது 'ஆத்துார்' என அழைக்கப்படுகிறது. வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ளது.
தொடரும்
அலைபேசி: 97109 09069
பி.என். பரசுராமன்