ADDED : மார் 02, 2018 10:52 AM

மகாபெரியவரிடம் சந்தேகம் கேட்கும் எண்ணத்துடன் வணங்கினாள் ஒரு பெண்.
''என்ன விஷயம்?'' என விசாரித்தார் சுவாமிகள்.
''குடும்பத்தில் பிரச்னை சுவாமி. அதெல்லாம் தீரணும்னு நிறைய ஸ்லோகம் சொல்றேன். எல்லாம் சொல்லி முடிச்சு, சாப்பிட மதியம் ஒரு மணியாகி விடும். இவ்வளவு ஸ்லோகம் சொல்லியும் என் பிரச்னை தீரவில்லை. சுவாமிகள் தான் வழி காட்டணும்'' என்றாள்.
அவளை கனிவுடன் பார்த்தார் சுவாமிகள்.
''சுலோகங்களை எப்போ எப்பிடி சொல்றேள்?''
''என் வேலைகளை செஞ்சிண்டே தான் சொல்றேன்! நிக்கறப்போ, நடக்கறப்போ, காய்கறி நறுக்கறப்போ சொல்லிண்டேயிருக்கேன்!''
''கட்டாயம் அதற்கு பலனுண்டு. சஷ்டிக்கவசம், திருப்பாவை, விஷ்ணு சகஸ்ர நாமம், தேவாரம், திவ்யபிரபந்தம் என எத்தனையோ ஸ்லோகங்கள் தமிழ்லயும் இருக்கு. சமஸ்கிருதத்திலயும் இருக்கு. எல்லாம் விசேஷ பலன் தரக் கூடியவை. ஸ்லோகம் சொல்லிண்டே வேலை செய்யறதும் நல்ல பழக்கம் தான்'' என்று சற்று நிறுத்திய சுவாமிகள் மேலே தொடர்ந்தார்.
''இருந்தாலும் பெரிய அளவில பலன் பெற மன ஒருமைப்பாடு அவசியம். சமைக்கணும்னா அடுப்பு பக்கத்தில தானே சமைக்க முடியும்? காய்கறி நறுக்கணும்னா அரிவாள்மனை, காய்கறிகளை பக்கத்துல வெச்சுக்கணும். குளிக்கணும்னா தண்ணீர் வாளி பக்கத்துல இருக்க வேண்டாமா? பகவான் எல்லா இடத்திலும் இருக்கார்ங்கறது உண்மை தான். ஆனால் நம் மனம் எல்லா இடத்துலயும் இருக்கற பகவானை உணரக் கூடியதா இல்லியே? மனசுல பகவான் இல்லாம வெறுமனே ஸ்லோகத்தை முணுமுணுத்தால் முழுபலன் எப்படி கிடைக்கும்? அதனால உங்களோட இஷ்ட தெய்வத்தோட படத்தின் முன் விளக்கேத்தி வச்சு, உட்கார்ந்து ஸ்லோகம் சொல்லி பாருங்கோ. வேற நினைவில்லாம ஸ்லோகம் சொல்லிப் பழகுங்கோ. காலையோ, சாயந்திரமோ குறிப்பிட்ட நேரம் சொல்லுங்கோ. இதெல்லாம் மனம் ஒருமுகப்படத் தான். இப்படி சொன்னா, பிரச்னை படிப்படியாக குறையும். வரப் போகும் நாட்களெல்லாம் நல்லதாக அமையும்'' என்றார்.
எப்படி ஸ்லோகம் சொல்வது என்பதை அறிந்த பெண் மகாபெரியவரை வணங்கி விடை பெற்றாள்.