sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சிங்கம் 2

/

சிங்கம் 2

சிங்கம் 2

சிங்கம் 2


ADDED : மே 20, 2014 04:15 PM

Google News

ADDED : மே 20, 2014 04:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொறாமை! எல்லோரையும் ஆட்டிப் படைக்கும் குணம் இது! தலைசிறந்த கற்புக்கரசியான காந்தாரியைக் கூட ஆட்டிப் படைத்து, அவளுக்கும், அவள் குழந்தைகளுக்கும் பெரும் அழிவை உண்டாக்கியது. துவாபர யுகத்திலேயே அந்த நிலையென்றால், கலியுகத்தில் சொல்வதற்கு ஏதும் இல்லை. காந்தாரிக்கு, நல்ல குருநாதர் வாய்க்காததே பொறாமை ஏற்படக் காரணமானது.

நம் கலாசாரத்தையும், பண்பாட்டையும் காப்பதற்காக வீரதீரம் புரிந்து எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர் சத்ரபதி சிவாஜி.

அவருடைய குருநாதர் சமர்த்த ராமதாசர். சிவாஜி தன் குருநாதர் மீது அளவிட முடியாத பக்தி கொண்டிருந்தார். அதைப் போலவே, குருநாதரும் சிவாஜி மீது அளவில்லாத அன்பு வைத்திருந்தார். ஆனால், அதைக் கண்ட ராமதாசரின் மற்ற சீடர்கள் பொறாமை

என்னும் பாழுங்கிணற்றில் விழுந்தார்கள்.

''சிவாஜி ஒரு ராஜாவாக இருப்பதால்தான், அவர் மீது நம் குருநாதர் மிகுந்த அன்பு செலுத்துகிறார். இல்லாவிட்டால்....'' என்று வாய்விட்டுப்பேசி தங்கள் பொறாமையை வெளிப்படுத்தினார்கள்.

சீடர்களின் உள்ளங்களில் மூண்ட பொறாமைத் தீயை, அனுபவம் என்னும் தண்ணீரால் அணைக்கத் தீர்மானித்தார் குருநாதர். கடுமையான வயிற்றுவலி வந்தது போல நடித்தார். துடிதுடிப்பது போல் பாவனை காட்டினார்.

அதே நேரம் பார்த்து வீரசிவாஜியும் அங்கு வந்து விட்டார்.

குருநாதர் சீடர்களிடம், ''சிங்கத்தின் பால் கொண்டு வந்தால் தான் என் வயிற்றுவலி குணமாகும்,'' என்றார்.

சீடர்கள் எல்லாம், ''சிங்கமாவது... பாலாவது? குட்டி போட்ட சிங்கத்திடம் பால் கறக்கப் போனால், மறுநாள் நமக்குப் பால் ஊற்றும்படி ஆகிவிடுமே!'' என்று திகைத்தனர்.

சிவாஜியோ, ஒரு தங்கப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு பெண் சிங்கத்தைத் தேடிப் புறப்பட்டார்.

ஒரு குகையில் இரண்டு சிங்கக் குட்டிகள் இருந்தன. தாய்ச்சிங்கம் உணவு தேடப் போயிருந்தது. அது வரும் வரையில், சிவாஜி காத்திருந்தார். தாய்ச்சிங்கமும் வந்தது. குட்டிகள் தாயிடம் ஓடின. தாய்ச்சிங்கம் சிவாஜியைப் பார்த்ததும், குட்டிகளை அணைத்துக் கொண்டு சிவாஜியைப் பார்த்து சீறியது.

சிவாஜி, தான் இருந்த இடத்தில் இருந்தே கைகளைத் தூக்கி கும்பிட்டபடி, ''தாய்ச்சிங்கமே! என் குருநாதரின் நோய்க்காக, உன்னிடம் பால் வேண்டி வந்திருக்கிறேன். அருள் செய்!'' என்றார்.

சிங்கத்தின் கண்களில் கனிவு தெரிந்தது. சிங்கம் போல் வீரமுடைய சிவாஜியும் தைரியமாகச் சென்று பாலைக் கறந்தார். குட்டிகளை நக்குவது போல அவரையும் நாவால் நக்கிக் கொடுத்தது. பாலை எடுத்துக் கொண்டு, குகையை விட்டு வெளியே வரும்போது சீடர்களுடன் குருநாதர் வெளியே நின்றிருந்தார்.

''என் அன்பிற்குரிய சீடனே! உன் குருபக்தியை இவர்களுக்கு உணர்த்தவே வயிற்று வலி வந்தது போல நடித்தேன்'' என்றார்.

சிவாஜி குருவை வணங்கினார். மற்ற சீடர்கள் பொறாமை நீங்கி திருந்தினார்கள்.

சிவாஜிக்கு வீரம், விவேகம் எனப் பல முகங்கள் இருந்தாலும், அவருடைய குருபக்தியும் உயர்ந்தது. அவருடைய அனைத்து பெருமைகளுக்கும் அதுவே காரணமாக இருந்தது. பொறாமையை கைவிட்டு நல்லவர்களாக இருப்போம். உள்ளத்தை தூய்மையாக்கி வாழ்வில் உயர்வு பெறுவோம்.






      Dinamalar
      Follow us