sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ஷிர்டி பாபா (22)

/

ஷிர்டி பாபா (22)

ஷிர்டி பாபா (22)

ஷிர்டி பாபா (22)


ADDED : மே 20, 2014 04:16 PM

Google News

ADDED : மே 20, 2014 04:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீதித்தொகை ரகசியத்தை அறியும் முன், வாடியா பற்றிய சிறுகுறிப்பைப் பார்த்து விடுவோம்.

நாந்தேட் கிராமத்தில் வசித்தவர், பார்சி மில் காண்டிராக்டர் ரத்தன்ஜி ஷாபூர்ஜி வாடியா. எல்லாச் செல்வங்களும் இருந்தன,

ஒரே ஒரு செல்வத்தைத் தவிர. அதுதான் மக்கட்செல்வம். தமக்கு ஒரு குழந்தையில்லையே என்ற குறை அவர் மனத்தை வாட்டி வதைத்தது. பெரும் செல்வந்தராக இருந்தாலும் அவர் முழுமையான மகிழ்ச்சியோடு இருக்கக் கூடாது என்பது இயற்கையின் திட்டம்போலும்.

அவரை மக்கள் பெரிதும் மதித்தனர். காரணம் அவர் தர்மசீலர். ஏழை எளியவர்களுக்கு எத்தனையோ உதவிகள் செய்துவந்தார். ஆனால், தமக்கு ஒரு குழந்தையில்லாதது குறித்து அந்தரங்கமாக அவர் பெரிதும் வருந்தி வருகிறார் என்பதை மக்கள் அறியவில்லை.

நாட்கள் செல்லச் செல்ல அல்லும் பகலும் அவரை இந்தச் சிந்தனைதான் ஆக்கிரமித்துத் துன்புறுத்தியது. பணி செய்துகொண்டே இருப்பார். திடீரெனத் தமக்குப் பின் தம் தான தர்மங்களைத் தொடர, வாரிசு இல்லையே என்ற உண்மை நினைவு வரும். அவரிடமிருந்து ஒரு பெருமூச்சு புறப்படும்.

அப்படியான ஒரு தருணத்தில் அவரது உற்ற நண்பரான தாஸ்கணு, ''ஏன் இந்தப் பெருமூச்சு?'' என அன்போடு வினவினார். நண்பரிடம், வாடியா தம் உள்ளத்தை மறைக்க விரும்பவில்லை.

''தசரதருக்கு இருந்த மனக்குறைதான் எனக்கும் இருக்கிறது. ஒரு குழந்தை எனக்கில்லை என்ற எண்ணம் என்னைத் துயரில் ஆழ்த்துகிறது,'' என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

பாபாவின் பரம பக்தர் தாஸ்கணு. பாபா நினைத்தால் எந்த அற்புதத்தையும் நிகழ்த்தக்கூடியவர் என்பதை அவர் அறிவார். எனவே அவர் வாடியாவை பாபாவிடம் செல்லுமாறு ஆற்றுப்படுத்தினார்.

தசரதருக்குக் குறையிருந்தது உண்மைதான். ஆனால் ரிஷ்யசிருங்கர் மூலம் புத்திரகாமேஷ்டி யாகம் செய்து குறை தீர்ந்ததே? ஸ்ரீராமர் அல்லவா மகனாய்ப் பிறந்தார்?

பாபாவைச் சென்று தரிசிப்பது என்பது புத்திர காமேஷ்டி யாகம் செய்வதற்குச் சமானம்.

பாபாவிடம் வேண்டினால், கட்டாயம் குழந்தைப் பேறு கிட்டும் என்றார் தாஸ்கணு. கடலில் மூழ்கித் தத்தளிப்பவனுக்கு ஒரு பற்றுக்கோடு கிடைத்த மாதிரி மகிழ்ந்தது வாடியாவின் மனம். அவர் ஷிர்டி செல்ல முடிவெடுத்தார்.

சில நாள்களிலேயே பழங்களையும் பூமாலையையும் வாங்கிக் கொண்டு, பாபாவுக்கு தட்சிணையாக ஐந்து ரூபாயையும் எடுத்துக்கொண்டு ஷிர்டி புறப்பட்டார்.

பாபாவைப் பார்த்த மறுகணமே அந்தக் கருணை நிறைந்த வடிவம் வாடியாவின் மனத்தைக் கரைத்தது. பரவசத்தோடு பூமாலையை பாபா கழுத்தில் அணிவித்து, பழக்கூடையை சமர்ப்பித்தார். பின் அவரது தாமரைப் பாதங்களைக் கீழே விழுந்து நமஸ்கரித்தார். மெல்ல எழுந்து அவர் அருகில் அமர்ந்து கொண்டார்.

ஏராளமான அடியவர்கள் பாபாவைத் தேடி வருவதையும் அவரது பாதங்களில் சரணடைவதையும் பார்த்து வியந்தார். தம்

பிரார்த்தனை கட்டாயம் பலிக்கும் என்ற பூரண நம்பிக்கையோடு குழந்தைப்பேறு வேண்டி மனப்பூர்வமாகப் பிரார்த்திக்கலானார்.

திடீரென வாடியாவின் பக்கம் திரும்பியது

பாபாவின் பார்வை. ''எனக்கு ஐந்து ரூபாய் காணிக்கைப் பணம் கொண்டு வந்திருக்கிறாயே? எடு!'' என்றார் பாபா உரிமையுடன். தாம் ஐந்து ரூபாய் எடுத்துவந்த விஷயம் இவருக்கு எப்படித் தெரியும் என வியந்தவாறே ரூபாயை எடுத்தார் வாடியா.

இந்த சந்தர்ப்பத்தில் தான், ''அந்த ஐந்து ரூபாயில் ஏற்கனவே மூன்று ரூபாய் பதினான்கு அணா நான் வாங்கிக் கொண்டுவிட்டேன். மீதியை எடு!'' என்றார் பாபா அதட்டலுடன்.

வாடியாவுக்கு ஒன்றும் புரியவில்லை. தாம் ஷிர்டிக்கு வருவதே முதல்முறையாக இப்போதுதான். அப்படியிருக்க இந்த மூன்று ரூபாய் பதினான்கணா விஷயம் என்னவென்று தெரியவில்லையே?

ஆனால், பாபா எதுசொன்னாலும் அவர் சொன்னபடி எந்தப் பிசகும் இல்லாமல் அப்படியே செய்ய வேண்டும் என அவர் ஏற்கனவே தாஸ்கணு மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்தார். ஆகையால், மறுபேச்சுப் பேசாமல், மீதி ஒரு ரூபாய் இரண்டணாவைக் காணிக்கையாகச் சமர்ப்பித்தார்.

தமக்குக் குழந்தைப் பேறு கிட்ட அருளவேண்டும் என நேரடியாகவே பாபாவிடம் விண்ணப்பித்தார். அவரது தலையை அன்போடு வருடிய பாபா, அவரின் கஷ்ட காலமெல்லாம் நீங்கிவிட்டதென்று ஆறுதல் கூறினார்.

மகிழ்ச்சியோடு ஷிர்டியிலிருந்து மீண்டும் நாந்தேட் கிராமத்திற்கு வந்தார் வாடியா. நண்பர் தாஸ்கணுவிடம் நடந்தது அனைத்தையும் வரிவிடாமல் சொன்னார். மூன்று ரூபாய் பதினான்கணா விஷயம் மட்டும் புரியவில்லை என்றும் அதன் பின்னணிச் சூட்சுமம் என்னவாக இருக்குமென்றும் கேட்டார்.

தாஸ்கணுவின் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது.

திடீரென்று அவர் மனத்தில் மின்னல் வெட்டியது.

''சில நாட்கள் முன்னால், மவுலா சாஹேப் என்ற இஸ்லாமிய அன்பரை வரவேற்றோமே? அவருக்கு நீங்கள்தானே வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தீர்கள்? அதற்கான செலவுக் கணக்கைக் கொண்டு வாருங்கள்!'' என்றார் தாஸ்கணு.

வாடியாவுக்கும் சடாரென்று அது நினைவு வந்தது. அந்த இஸ்லாமிய அன்பர், வாடியா ஷிர்டி செல்ல நினைத்துக் கொண்டிருக்கும்போது வருகை புரிந்தவர். சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து, பின் ஆன்மிக நாட்டம் கொண்டு துறவியானவர்.

அவரின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஆன செலவைத் தனியாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்திருந்தார் வாடியா. ஓடிப்போய் அந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்துவந்து செலவுக் கணக்கைக் கூட்டிப் பார்த்தபோது என்ன ஆச்சரியம்! அது மிகச் சரியாக மூன்று ரூபாய் பதிநான்கு அணாவாக இருந்தது! ஓர் அணா கூடக் குறையவுமில்லை. கூடவுமில்லை!

மவுலா சாஹேப் என்ற அந்த அன்பருக்கு செய்த உபசாரமெல்லாம் தமக்குச் செய்த மாதிரிதான் என்பதை பாபா அழகாக அறிவித்துவிட்டார்!

எல்லா நல்லவர்களின் இதயத்திலும் குடியிருக்கும் இறைவன் பாபாவே என்பதையும், எல்லா நதி நீரும் கடலில் கலக்கிற மாதிரி, எல்லா நற்செயல்களும் இறுதியில் பாபாவையே போய்ச் சேர்கின்றன என்பதையும் இந்நிகழ்ச்சி மூலம் தெளிவாக்கிவிட்டார். வாடியாவின் கரங்களும் தாஸ்கணுவின் கரங்களும் பாபாவை நினைத்துக் குவிந்தன.

பின் உரிய காலத்தில் வாடியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தபோது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

ஆனால், பாபா ஏன் தட்சிணை கேட்டார்?

பாபா சரிதத்தில் அவர் அன்பர்கள் பலரிடமும் தட்சிணை கேட்டது பற்றிய குறிப்புகள் வருகின்றன. பணத்தின் மேல் அறவே பற்றில்லாமல் இருப்பவர் தானே தூய துறவி! ராமகிருஷ்ண பரமஹம்சர், வலது கையில் பணத்தையும் இடது கையில் மண்ணையும் வைத்துக்கொண்டு ''பணம் மண், மண் பணம்'' என்று திரும்பத் திரும்பச் சொல்லி அவை இரண்டையும் கங்கையில் வீசி எறிந்தார் என்பதை அவர் சரிதம் சொல்கிறது. வள்ளலார் போன்ற உயர்நிலைத் துறவிகள் பணத்தை ஒருசிறிதும் லட்சியம் செய்யாமல் வாழ்ந்தார்கள். அப்படியிருக்க பாபா தம் அடியவர்களிடம் 'காணிக்கை கொடு' என்று கேட்டது ஏன்?....

- அருள்மழை கொட்டும்

திருப்பூர் கிருஷ்ணன்






      Dinamalar
      Follow us